கல்வி அமைச்சு எதிர்வரும் காலங்களில் இலங்கையில் பல மாவட்டங்களிலும் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சு, நுவரெலியா மாவட்ட வலய கல்வி பணிமனைகள் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தில் இன்னும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான வேலைத்திட்டம் என்னிடம் இருக்கின்றது அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால் அதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் அண்மையில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையக வரலாற்றில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளைவிட இந்த நல்லாட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக மலையக பாடசாலைகளில் பாரிய அபிவிருத்திகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவது வரவேற்புக்குரியது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் மலையகத்தின் பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கு எனக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அகில விராஜ் காரியவசம், பிரதமர் ஆகிய இருவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.
எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமான அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு நான் எடுத்த முயற்சிக்கு மத்திய மாகாண கல்வி அமைச்சும், அங்கிருந்த முதலமைச்சரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்று மலையகம் கல்வியில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. அதற்கு காரணம் பல பாடசாலைகளுக்கும் வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதேநேரத்தில் ஒரு சில பாடசாலைகள் குறைவான வசதிகளோடு செயல்படுவதையும் காணமுடிகின்றது.
மலையகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கு கல்வி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே நாம் அனைவரும் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தனி ஒருவனால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. எனவே உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தொடர்ந்து எனக்கு கிடைக்குமாக இருந்தால் இன்னும் பல அபிவிருத்திகளை மலையகத்தில் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், முன்னாள் இ.தொ.கா மற்றும் தொ.தே.சங்க மாகாண சபை உறுப்பினர்கள், ஹற்றன் டிக்கோயா நகர சபை தலைவர் பாலச்சந்திரன், மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ,கல்வியமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைக்கான அபிவிருத்தி பணிப்பாளர் சு.முரளிதரன், வலய கல்வி பணிப்பாளர் கல்வி அதிகாரிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். (தினகரன்)