புதிய தலைமுறையினரையும் பாடசாலை பிள்ளைகளையும் போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சித்திட்டமான “சுஜாத தருவோ” (கண்ணியமான பிள்ளைகள்) நிகழ்ச்சித்திட்டம் மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (28) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த புதிய கட்டடம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு வளாகத்தில் Block D இல் தாபிக்கப்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் மிகவும் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லும் கடத்தல் நடவடிக்கை ஒன்று நாட்டில் இடம்பெறுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை தடுப்பதற்காக மாணவர்களை அறிவூட்டும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று “சுஜாத தருவோ” நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களும் ஜனாதிபதி அலுவலகமும் இணைந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பங்குபற்றுதலுடன், வைத்திய நிபுணர்கள் குழுவொன்றையும் இணைத்துக்கொண்டு மிகவும் நட்புறவுடன் “சுஜாத தருவோ” திட்டத்தை நாட்டின் பிள்ளைகளுக்கு மத்தியில் கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றவர்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் உள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான சட்டங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றை தடுப்பதற்கும் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான அதிகார சபையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் எமது விளையாட்டு வீரர்களை போதைப்பொருளிலிருந்தும் தடுக்கப்பட்ட ஊக்கமருந்துகளிலிருந்தும் விடுவித்து ஆரோக்கியமான சிறந்த நற்பிரஜைகளாக மாற்றுவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்துவதை ஒழித்து தூய்மையான விளையாட்டுத்துறையையும் ஒழுக்கப் பண்பாடான விளையாட்டு தலைமுறையொன்றையும் இந்த நாட்டில் உருவாக்குவதற்காக ஊக்க மருந்து ஒழிப்பு முகவர் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
190 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடம் 05 மாடிகளை கொண்டுள்ளதுடன், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான வசதியும் இந்த கட்டிடத்தில் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடுகள், அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தக்கூடிய கேட்போர்கூடம் ஒன்றையும் இது கொண்டுள்ளது. நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, ஊக்க மருந்துக்கு எதிரான முகவர் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன் டி சில்வா, விளையாட்டுத்துறை ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.