அதிக நினைவுத் திறனாற்றல் உள்ளவர்கள் மட்டுமே முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரசு தொற்றினால் தற்போது சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.71 கோடியாக உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கொரோனா பரவல் அதிகரித்தபோது அதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சில தடுப்பு நடவடிக்கைகள்தான் முதலில் கூறப்பட்டன. அதில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிக முக்கியமான ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்த தனி மனித இடைவெளியைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே கூட்டமான இடங்களில் மறக்காமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர்.இந்நிலையில் ஏன் பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளி மற்றும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதில்லை என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய அறிவியல் அகாடமியால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பவர்களுக்குச் சிறந்த நினைவுத் திறன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் நினைவுத் திறன் குறுகிய காலத்துக்கு அவர் எவ்வளவு தகவல்களை நினைவு வைத்திருக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. மேலும் ஒருவருக்கு அதிக புரிதல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் உள்ளதா என்பதையும் இது தீர்மானிக்கிறது.
மார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 850 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் ஒரு கேள்வித் தாள் கொடுக்கப்பட்டு அதை நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனுடன் அவர்களின் ஆளுமை மற்றும் அறிவாற்றல் திறனும் சோதிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக நினைவுத் திறன் கொண்டவர்கள் சமூக இடைவெளியின் நன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்கிறார்கள் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு, வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நடவடிக்கைக்கு கீழ்ப்படிதல் ஆகியவற்றையும் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.