டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு தீடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண சபை கடந்த நவம்பர் 22 ஆம் திகதி கோரியிருந்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் குறித்த புள்ளிகைளைப் பெற்றவர்களை ஆசிரியர்களாக தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு 16 ஆம் திகதி டிப்ளோமாதாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் அவ்வாறு கடிதம் மூலம் அழைக்கப்பட்டவர்களுக்கு 15 ஆம் திகதி மாலை தொலைபேசி மூலம் நேர்முகத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவுப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் சிலர் முதலமைச்சர் பேசல ஜயரத்தன விடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் குறித்த நேர்முகத் தேர்வை ரத்துச் செய்துள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் ஏன் அவ்வாறு ரத்துச் செய்யப்பட்டது என்பது தொடர்பாக இன்னமும் அவர் வாய் திறக்கவில்லை.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் இதன் மூலம் மிகவும் மனஉழைச்சலுக்கும் சிரமத்திற்கும் உட்பட்டுள்ளனர்.
ஏதேனும் பிரச்சினைகள் முறைப்பாடுகள் இருப்பின் அவை விண்ணப்பங்கோரப்பட்ட காலப்பகுதியில் அல்லது நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட தினங்களில் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு ஒரு தினம் முன்னர் ஏன் இவ்வாறான நடடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தமது எதிர்பைத் தெரிவித்துள்ளனர்.