மாணவர்கள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகை
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகளே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றன. நோய் தொற்று காரணமாக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மாணவர்கள் வளாகத்தின் பூங்கா வீதியில் உள்ள வளாக முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அதன் பின் பல்கலைக்கழக வளாக முதல்வருடனும் தொலைபேசியில் கலந்துரையாடினார். பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து பரீட்சைகள் நிறுத்தப்பட்டதுடன், மாணவர்களின் விடுதி மற்றும் வளாகத்தில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று தொடர்பில் கலந்துரையாடி தீர்வு எடுப்பதாக வழங்கப்பட்ட உறுதி மொழியையடுத்து போராட்டம் சுமார் 1 மணிநேரத்தின் பின்னர் கைவிடப்பட்டது.
நேற்று (29) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கீழான பம்பைமடுவில் உள்ள தொழில்நுட்பபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய் பரவிவருகின்றது. கடந்த 04 நாட்களில் 70 வரையான மாணவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் வைத்தியசாலையில தங்கி சிகிச்சையும் பெற்றுள்ளனர். மருத்துவஅறிக்கைகளும் நோய் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (Thinakaran)