வாரத்தில் 7 நாட்களிலும் பாடசாலைகள் திறக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும, கற்பித்தல் நடவடிக்கைகளை சிறு குழுக்களாக மாணவர்களை பிரித்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதால் ஆசிரியர்களும் மாணவர்கள் ஏழு நாட்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
வாரத்தில் 7 நாட்களும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ள போதிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் 4 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்கும் வகையிலான முறையொன்று குறித்து ஆராயப்படுகிறது.
30 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை இரண்டாகப் பிரித்து கற்பித்தலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பெருமளவு மாணவர்கள் இருப்பதை தவிர்ப்பதற்கே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்டுள்ள 868 பாடசாலைகள் இந்த முறையை பின்பற்றுவது கடினமானதாகும்.
எனினும் சுமார் நான்கரை இலட்சம் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் முக்கியத்துவமுடையவையாகும். எனவே இவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியதும் நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கிருமி நீக்க பணிகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் கல்வி சார ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலைக்கு வந்து கற்பித்தலை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.
-வீரகேசரி-