பல்கலைக்கழக பகிடிவதைகளால் 2000 மாணவர்கள் கல்வியிழப்பு
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வியமைச்சர் அழைப்பு
பகிடிவதையால் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளை இடைநடுவே கைவிட்ட மாணவர்களுக்கு, நியாயமான தீர்வை வழங்க நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் அச்சமின்றி சாட்சியமளிக்குமாறு உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக் கொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற மிகமோசமான பகிடிவதைகளை சகித்துக் கொள்ள முடியாமல் கடந்த வருடம் மாத்திரம் சுமார் 2ஆயிரம் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை இடைநடுவே கைவிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார். தகவல் தொடர்பாடல் அமைச்சில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது பற்றிக் கூறிய அவர், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு,”
திட்டமிடப்பட்ட நிலையில் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பகிடிவதைகள் அண்மைகாலமாக அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காண்பதற்குரிய ஆரம்ப கட்டமாகவே உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஏழு பேரடங்கிய விஷேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணைக் குழு பாதிப்புக்குள்ளான மாணவர்களிடமிருந்து நேற்றுமுதல் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
“பாதிக்கப்பட்ட மாணவர்கள் இவ்விசாரணைக்குழு முன்னிலையில் அச்சமின்றி சாட்சியமளிக்க வேண்டும். சாட்சியமளிப்போரின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்கும். பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உயர்கல்வியமைச்சின் வழிகாட்டலுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷேட விசாரணைக் குழு பாதிப்புக்குள்ளான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நேற்று(10) தினகரன் உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வெ ளியாகியுள்ளன. பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு பொருத்தமான நியாயத்தை பெற்றுத் தரும் அதேவேளை, மாணவர்களின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் பகிடிவதையை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.
இதன்படி 2014/2015 தொடக்கம் 2018/2019 கல்வியாண்டுக்கு உட்பட்ட காலப்பகுதியில் உயர்கல்விக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் பகிடிவதையால் கல்வி நடவடிக்கைகளை இடைநடுவே கைவிட்ட மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களில் மாணவர்கள் குறிப்பிடும் அனைத்து தகவல்களும் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் அதற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்படமாட்டாதெ ன்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Thinakaran)