வெளிவாரி பட்டக் கற்கைகளுக்கு புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வெளிவாரி பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றுகூடலில் அவர் கலந்து கொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு நேற்று (25) நைவாலாவில் உள்ள ஜெயசிங்க விழா மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, 2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுற்றறிக்கையை வெளியிட்டு வெளிவாரி கற்கைகளுக்கான மாணவர் அனுமதியை மட்டுப்படுத்துமாறு பல்கலைகழகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
அகில இலங்கை வெளிவாரி பட்டதாரிகள் சங்கம் இது குறித்து கவனம் செலுத்தியதோடு, ஜனாதிபதி, பிரதமர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்க்ள ஆணைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரைாடல்களை மேற்கொண்டது. அதன் பின்னர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
தற்போது பதிவு மட்டுப்படுத்தப்பட்டுள்ள 2016,2017,2018 மற்றும் 2019 ஆண்டுகளின் மாணவர்களை மீண்டும் பதிவு செய்ய அரசு கவனம் செலுத்தியுள்ளது. அவை நான்கு கட்டங்களில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து, விரைவில் பல்கலைக்கழக மானிய ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவாரி பட்டப் படிப்பின் தரத்தை மேம்படுத்துவற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.