இலங்கையின் பிரபல சமூக சேவை அமைப்பான ஸம் – ஸம் பௌண்டேஷன் இன் மூலமாக வறுமைப்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ‘School With a Smile 2019’ செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (27.11.2018) செவ்வாய்க்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வமத தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் குமார் சங்கக்கார, உட்பட பல்வேறு அரசியல்வாதிகள் , முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்..
குறித்த ஸம் ஸம் பௌன்டேசன் நிறுவனத்தின் ஊடாக வறுமை காரணமாக மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனும் அடிப்படையில் 30வீதம் மாற்று மத மாணவர்களையும் உள்வாங்கி ஒவ்வொரு மாணவர்களுக்கும் புத்தகப்பை , அப்பியாசக் கொப்பிகள் , பாதணி வாங்குவதற்காக 1000ரூபாய் பண வவுச்சர் என அடங்கலாக தலா 3000ரூபாய் பெறுமதியில் குறித்த ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.
மேற்படி செயற்திட்டம் ஊடாக சுமார் 45000 வறிய மாணவர்கள் நாடளாவிய ரீதியில் நன்மை அடைந்திருப்பதுடன் , 2019ஆம் ஆண்டிற்காக மேலும் 15000 மாணவர்கள் குறித்த செயற்திட்டத்தினூடாக நன்மை பெற உள்ளனர்.