2016 ஜனவரி 01ஆம் திகதிக்கு முன் ஓய்வுபெற்றவர்களுக்கு வரப்பிரசாதம்;
பிரதமர் மஹிந்த முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியக்காரர்களுக்கு ‘அக்ரஹார’ காப்புறுதி அனுகூலங்களை வழங்குவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட ஆ லோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2016 ஜனவரி 01ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கு மாத்திரமே அக்ரஹார காப்புறுதி அனுகூலங்கள் கிடைத்தன. அவ்வாறு அனுகூலங்களை பெற்றவர்கள் முழு ஓய்வூதியக்காரர்களின் தொகையில் 10 வீதம் மாத்திரமே. எனினும் 2016 ஜனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற ஆறு இலட்சம் வரையானோருக்கு அக்ரஹார காப்புறுதி திட்டத்தில் பங்காளராவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் சுட்டிக்காட்டிய வகையில் ஓய்வூதியக்காரர்களுக்கு அக்ரஹார காப்புறுதி அனுகூலங்களை பெற்றுக்கொடுப்பதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனால் இந்த முரண்பாட்டை நீக்கி 2016 ஜனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து அரச பணியாளர்களுக்கும் அனுகூலங்கள் கிடைக்கும் வகையில் காப்புறுதி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
அக்ரஹார காப்புறுதி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் மிகவும் சிறந்த வாழ்க்கை தரத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற சூழலொன்றை உருவாக்குவது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Thinakaran