எத்தியோப்பியா 12 மணித்தியாலங்களில் 353 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது.
எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மட் ஆரம்பித்துள்ள ‘பசுமை மரபு’ (Green Legacy) எனும் காடழிப்பிற்கு எதிரான பிரசாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான எத்தியோப்பியர்கள் இந்த மரம் நடும் திட்டத்தில் இணைந்து கொண்டதுடன், முதல் 6 மணித்தியாலங்களில் 150 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டதாக அபி அஹ்மட் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 12 மணித்தியாலங்களில் 353,633,660 மரக்கன்றுகள் நடப்பட்டதாக எத்தியோப்பியாவின் புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Getahun Mekuria ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆபிரிக்காவின் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடான எத்தியோப்பியாவில் நேற்றுமுன்தினம் (29) இத்திட்டத்தில் இணைந்துகொண்ட மக்களால் நடப்பட்ட 353 மில்லியன் மரக்கன்றுகள் உலக சாதனையாக நம்பப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1.5 மில்லியன் பேர் இணைந்து 12 மணித்தியாலங்களில் 66 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்திருந்தனர்.
இந்த சாதனை தற்போது எத்தியோப்பியாவால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 4 பில்லியன் மரக்கன்றுகள் நடப்படுவதை இலக்காகக் கொண்டு அங்கு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.