இலங்கையின் மிகப் பெரிய ஆங்கில புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முன்தினம் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்திருக்கும் கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. பிக் பேட் வுல்ஃப் (Big Bad Wolf) என்ற மலேசிய நிறுவனம் இக் கண்காட்சியை மூன்றாவது தடவையாக கொழும்பில் நடத்துகிறது. இந்நிறுவனத்தின் நிறுவுனரான ஜெக்குலின் நேக், அன்ட்றூ யாப், நிறுவனத்தின் இலங்கைப் பங்காளர்களான தீபக் மாதவன் மற்றும் நிஷான் வாசலநந்திரி ஆகியோர் முதல்நாள் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துகொண்டனர்.
இக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த 15இலட்சம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. படிக்கும் ஆர்வத்தையும் தேடும் மனப்பான்மையையும் சிறுவயதிலேயே பிள்ளைகளிடம் ஊட்ட வேண்டும் என்ற நிறுவுனர் ஜெக்குலிஸ்ன் கருத்திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஏராளமான நூல்களும் கற்கும் உபகரணங்களும் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. உயர்தர அச்சுப் பொலிவும் நேர்த்தியான நூல் கட்டுமானமும் கொண்ட இந்த நூல்கள் அனைத்தும் 50முதல் 90 சதவீத விலைக்கழிவில் இங்கே வாங்க முடியும். இலங்கையில் கிடைக்காத மற்றும் மருத்துவம், பொறியியல், கட்டடக் கலை போன்ற துறைசார் நூல்களையும் இங்கே வாங்க முடியும்.
கடந்த வருடத்தைவிட அதிக நூல்கள் இம்முறை இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கும் நிறுவுனர் ஜெக்குலின் நேக், கடந்த வருடம் இருபது இலட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வந்ததாகக் கூறுகிறார்.
11 தினங்களாக நடைபெறவிருக்கும் இக்காட்சி விற்பனை எதிர்வரும் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். வார நாட்களில் காலை 10 மணி முதல் பி.ப 10 மணி வரையும் வார இறுதி நாட்களில் 24 மணித்தியாலமும் கண்காட்சி திறந்திருக்கும. இங்கு புத்தகம் வாங்கும் வாசகர்கள் தாம் விரும்பினால் குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தை வாங்கி ‘சென்டர் ஒப் ஹோப்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு அன்பளிப்பாக வழங்கலாம். இத்தொண்டு நிறுவனம் அம்பாறை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பராமரிப்பு இல்லங்களையும் கல்வி மையங்களையும் நடத்தி வருகிறது. (தினகரன்)