கல்வியியல் கல்லூரிகளில் பாடநெறிகளைத் தொடரும் 2016-2018 கல்வியாண்டு மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
19 தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பாடநெறிகளைத் தொடரும் 2016-2018 குழுவில் பயிற்சியைத் தொடரும் 5000 மாணவ ஆசிரியர்களின் கட்டுறுப் பயிற்சிக் காலம் 14.06.2020 திகதியுடன் முடிவுறும் வகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா பிரச்சினைகள் காரணமாக 13.03.2020 ஆம் திகதியுடன் பாடசாலைகள் மூடப்பட்டனமையினால் அவர்களின் பயிற்சியையும் நிறுத்த வேண்டியேற்பட்டது.
எனவே, இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தனிப்பட்ட மற்றும் பயிற்சி தொடர்பான பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சு தமது சங்கத்திற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதே, பாடசாலைகள் மீளத் திறக்கும் போது பாடசாலைகளுக்கு எப்போது செல்ல வேண்டும் என்பது தொடர்பாக இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை எனகட்டுறுப் பயிலுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்வி அமைச்சு இது தொடர்பான உரிய வழிகாட்டலை தமக்கு வழங்கினால் மாத்திரமே, பாடசாலைகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என ஆசிரிய மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனினும், கட்டுறுப் பயிலுனர்கள் தரம் இடைநிலை வகுப்புகளிலேயே பயிற்சி மேற்கொள்ளுவதால் அவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது ஜ{லை மாதம் நடுப்பகுதிக்கு பின்னரே என்பதனால், கட்டுறுப் பயிலுனர்கள் பாடசாலைகள் செல்லத் தேவையில்லை என சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
எனினும், கல்வி அமைச்சு இப்பயிற்சி தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் ஏன் மௌனம் காக்கின்றது மர்மமாகவே உள்ளது.