-சந்துரு மரியதாஸ்
சந்துரு மரியதாஸ்
(விரிவுரையாளர்)
கல்வி, பிள்ளைநலத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்குழந்தைக்கு கற்பனைத் தன்மை அவசியமாகின்றது. அவர்களின் கற்பனையாற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கு உகந்த செயற்பாடுகளை வீட்டில், பாடசாலையில் மேற்கொள்ள வேண்டும்.கவன ஒருமுனைப்பு உள இயக்கம் சார்ந்தது. ஆசிரியர்கள் சிறந்த மதிப்புடன் விளங்குவதற்கு குழந்தைகளிலே அவர் ஏற்படுத்துகின்ற கவன ஒருமுனைப்புத்தன்மையே காரணமாகும். ஆசிரியர் கூறப் போவதை குழந்தை ஆவலுடன் எதிர்பார்க்கும். கவனத்தை ஈர்ப்பதிலேயே கற்றல், கற்பித்தல் வெற்றி தங்கியுள்ளது.கவன ஈர்ப்புத் தன்மையை கற்பித்தலில் பயன்படுத்தும்போது தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு படிப்படியாகச் செல்லல் என்றும் கருத்தை மனதில் வைத்துக் கொள்வது ஆசிரியருக்கு உகந்தது. எளிய எண்ணக்கருக்களிலேயிருந்து கடினமான எண்ணக்கருக்களை விளங்குவதற்கு குழந்தைகளிடத்தில் கவனத்தைத் திருப்புதல் அவசியம். கவனம் கலைந்து போகும்போது ஞாபகமும் சிதறுண்டு போகின்றது. அப்போது வெற்றிகரமான கற்பித்தலைச் செய்ய முடியாது. குழந்தைகளின் கவனத்தை ஈர்த்தெடுப்பதற்கு பல யுத்திகளை ஆசிரியர் கையாளுகின்றார்.கற்பித்தல் உபகரணங்கள் ஒரு புறமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அனுபவத்தை வழங்குவது ஆசிரியக் கல்வியின் முக்கிய நுட்பமாகும். தெரிந்ததையும் இனித் தெரியப் போவதையும் இன்னும் இது போன்றவைகளையும் எவ்வாறு திறமையுடன் கையாளுகிறோமோ அதைப் பொறுத்துத்தான் எல்லாம் இருக்கின்றது.திறமையான ஆசிரியர் ஓர் இராணுவ போர்த்திறவல்லுனர் போல் இருக்க வேண்டுமென மொன்ரிசோரி அம்மையார் கருதினார். இராணுவ வீரரின் திட்டம், செயற்பாடு எல்லாம் ஓர் ஒழுங்கு முறையில் அமைந்து அதிலேயே கவனமாக இருப்பதைக் காணலாம். ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவருடைய கருத்துப்படி, மனமானது ஒன்றும் தனக்குள் கொள்ளாத களிமண் போன்றது. வெளிப்பதிவுகள் இதன்மேல் பதிகின்றன. அவை ஏறத்தாழ சிறப்பான பதிவுகளையே விட்டுச் செல்கின்றன. அனுபவங்கள் தாம் மனதை உருவாக்குகின்றன என்பது அவரது கருத்தாகும். அனுபவம் என்ன செய்கின்றதோ அதேபோல ஆகின்றான் மனிதன். ஆதலால் பொருத்தமான அனுபவங்களைத் தரக்கூடிய அமைப்பை ஏற்பாடு செய்தால் மனிதனை உருவாக்கி விடலாம் என்பது மொன்ரிசோரி அம்மையாரின் கருத்தாகும்.நம்மைச் சூழவுள்ள எல்லாப் பொருள்களும் நமது கவனத்தைக் கவர்வதில்லை. நம்முடைய விருப்பங்களுக்கு ஒத்தவையே கவனத்தை ஈர்க்கின்றன. நம்முடைய அக்கறையை எவை தூண்டி விடுகின்றதோ அவையே நம் வாழ்வுக்கு பயன்தரக் கூடியனவாகும். குழந்தைகளது அக்கறையைக் கண்டுபிடிப்பது, அதைத் தூண்டுவது, அதன் மூலமாக கவன ஈர்ப்பை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகளை சிறந்த ஆசிரியர் கையாளுகின்றார். குழந்தைகள் ஒரு பொருளின் மீது கவனத்தைக் கொண்டிருந்தார்களென்றால் அவர்கள் எத்தகைய புறச் செயல்களையும் கவனிக்கமாட்டார்கள்.குழந்தைகளிடம் காணப்படுகின்ற கருத்தூண்டலை ஆசிரியரும் பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருமத்தில் பிள்ளை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சுற்றுப்புறச் சூழலில் நடக்கும் செயற்பாடுகள் தெரிவதில்லை. உலகமேதைகளான ஆர்க்கிமிடீஸ், நியூட்டன் போன்றவர்கள் தம்மை மறந்து ஆய்வில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகின்றது. சிறந்த ஆசிரியரினால்கூட அக்கறையூட்டக் கூடியவராக இருந்தாலும் சில குழந்தைகளுக்கு இயல்பாகவே மன ஒருமைப்பாடு காணப்படுகின்றது. ஆயினும் கூடிய வீதமான குழந்தைகள் ஆசிரியர்களால் கவனம் ஊட்டப்பட வேண்டியவர்களாக உள்ளனர். வகுப்பறை எப்போதும் குழந்தைகளின் மனதைக் கவரக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு எவற்றில் கவனம் ஏற்படுகின்றது என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுவது நன்று.மூன்று தொடக்கம் ஐந்து வயதுப் பிள்ளைகள் முன்பள்ளிகளில் காணப்படுவதால் அந்த வயதுக்கேற்ப கவர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதிகமான குழந்தைகள் சிவப்பு நிறத்தை விரும்புகின்றனர். பெரிய படங்களில் குழந்தைகளது கவனம் திரும்புகின்றது. விளையாட்டுப் பொருட்களில் விருப்பம் ஏற்படுகின்றது. கதைகூறல், பாட்டு, நடனம் போன்றவைகளில் கவனம் ஏற்படுகின்றது. குழந்தைகளது சுதந்திர உணர்வைத் தூண்டி அவர்களது உள்ளத்தை அறியும்போது அவர்களது கவனப் பொருட்களையும் அறியலாம். குழந்தைகளது புலன் உணர்வுகளுக்கு முதல் வித்திட வேண்டும். குழந்தை கற்கின்ற போது ஆசிரியர்பால் இணைந்திருந்தாலும் மனம் நோக்கமின்றி இங்குமங்கும் தாவி அலைகின்றது. குழந்தையை அறிந்ததிலிருந்து சிக்கலான விடயங்களுக்கு அழைத்துச் செல்கின்ற போது அவர்களுக்கு கவனத்தை ஊட்ட வேண்டும். சிறந்த கற்பித்தல் முறைகளைக் கையாள்வது குழந்தையை நம்பால் ஈர்ப்பதற்கு நல்ல வழிமுறையாகும்.ஆசிரியர் ஒருவர் அவருடைய தெளிவான எளிய பாடத்தைக் கற்பிக்கும் பொழுது இது நீளம், இது குட்டை, இது சிவப்பு, இது மஞ்சள் என்று பலவற்றையும் கூறுகின்றார். வார்த்தையைக் கொண்டு உணர்ச்சிகளின் ஒழுங்கைப் பதியவைத்து விடுகின்றார் என்பது உண்மைதான். வெறும் வார்த்தை ஜாலங்களுக்கு பிள்ளைகள் இணங்கிப் போவதில்லை. பொருள்களைப் பற்றிக் கூறும் போது சிறார்களும் காட்சிப்படுத்தல் அவசியமாகின்றது. சொற்களின் மீது கவனம் திரும்புவதைவிட பொருட்களின் மீது கவனம் திரும்புவது எளிதாகும்.வகுப்பறையில் குழந்தைகள் எதை எதிர்பார்க்கின்றன? சாதாரணமான தொனியில் சொல்வோமானால் கற்றலை எதிர்பார்க்கின்றன என்பதாகும். உண்மையில் குழந்தைகள் அவ்வாறில்லை, சுதந்திரமாக நடமாட விரும்புகின்றன. ஆசிரியர் இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும்? சிறிய குழந்தைகளை கவர்ந்து இழுக்க வேண்டும். ஆசிரியரது பக்கம் கவனம் திரும்ப வேண்டும். அப்போதுதான் கற்றல் நடைபெற வாய்ப்புண்டு. குழந்தைகள் எப்போதும் கவர்ச்சிக்கு உட்படுபவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வகுப்பறை மேசை, கதிரை, சுவர்கள், சுற்றாடல் என்பன எப்போதும் கவனத்தை ஈர்க்கத்தக்க வகையில் அழகுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். பிள்ளைகள் விரும்பக் கூடிய பல்வேறு முறைகளைக் கையாண்டு கற்பிக்க வேண்டும். கவர்ச்சிகரமான முறையில் கற்பிக்கும்போதுதான் பிள்ளைகளும் ஈடுபாடு கொண்டு கற்பர்.-தினகரன்-