அறிமுகம்
இன்று உயர் கல்விக்கான வாய்ப்பு வசதிகள் அதிகரித்துள்ளதால், பலர் உயர் கல்வியில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர். உயர் கல்விப் பாடப்பரப்புக்கள், மாணவர்களை ஆய்வு சார்ந்த விடயங்களிலும், சுய வாசிப்பு, தேடல்களை உறுதி செய்யும் வகையிலான பல்வேறு ஒப்படைகளின்பாலும் ஈடுபடுத்துகின்றன. மேலும், உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற நாடுவோர், ஆய்வு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன. உயர்கல்வியில் ஈடுபடும் மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல், அவற்றை ஆய்வு மாநாடுகளுக்கு சமர்ப்பித்தல், ஆய்வுச் சஞ்சிகைகளுக்கு அவற்றை அனுப்பி வெளியிடல் போன்றவற்றில் அதிகம் ஈடுபட வேண்டியுள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில், அநேகர் தடுமாறும், அதிகம் தவறுகளை விடும் பகுதியாக உசாத்துணை பகுதி காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு, இக்கட்டுரையில், உசாத்துணையிடல் தொடர்பான அடிப்படை விடயங்கள் விளக்கிக் கூறப்படுகின்றன.
மேற்கோள் காட்டல், உசாத்துணை மற்றும் நூல்விபரப்பட்டியல் (Citation, Reference and Bibliography)
உசாத்துணையிடல் தொடர்பாக விரிவாக நோக்க முதல், மேற்கோள் காட்டல் (Citation) உசாத்துணை (Reference) மற்றும் நூற்பட்டியல் (Bibliography) ஆகியன பற்றி அறிந்து கொள்வோம். மேற்கோள் காட்டல், என்பதனை ஆங்கிலத்தில் Citation என்றழைப்பர். Reference எனும் போது அது உசாத்துணை எனவும் Bibliography என்பது நூல்விபரப்பட்டியல் அல்லது நூற்றொகை என்றும் அழைக்கப்படுகின்றன. கல்வி சார்ந்த ஆக்கங்களை குறிப்பாக, கட்டுரைகள், ஒப்படைகள், ஆய்வு முன்மொழிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றை எழுதும் போது, அவற்றில் நாம் எழுதும் அநேக கருத்துக்கள், எமது வாசிப்பின் ஊடகவோ, கேட்பொலி, காணொலிகள் ஆகியவற்றின் ஊடாகவோ பெற்றுக்கொண்ட அறிவு, தகவல்கள், தரவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்படும். மட்டுமன்றி, எமது கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எமது வாசிப்பினூடான பல்வேறு சான்றுகளை முன்வைக்க வேண்டிய தேவைகளும் ஏற்படும். எமது வாசிப்பினூடாக பெற்றுக்கொண்ட பிறரது சிந்தனைகள், கருத்துக்கள், தரவுகள் ஆகியவற்றை எமது கட்டுரைகளில் எழுதும் போது, அவற்றை எங்கிருந்து வாசித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்டோமோ அவற்றின் மூலங்களை குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியமாகும். இன்றேல், பிறர் கருத்துகளை நாம் நகலாக்கம் செய்த குற்றத்துக்கு ஆளாகி விடுவோம். கல்வி சார்ந்த பல்வேறு ஆக்கங்களில் இத்தகைய நகலாக்க குற்றத்தை தவிர்க்கும் பொருட்டு குறித்த கருத்துக்களை எழுதும் போது அதன் மூலத்தினை (source) அதாவது அக்கருத்துக்கு உரிய உண்மையான ஆசிரியர் பெயரினை குறிப்பிட்டுக் காட்டுவது மேற்கோள் காட்டல் எனப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் In-text citation என்று கூறுவர். இதில் சில வகைகள் காணப்படுகின்றன. பின்வரும் உதாரணங்கள் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்:
உதாரணம் 1: இன்றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்சிக்கான முக்கிய கருவியாக விளங்குகிறது (கரீம்தீன், 2016).
உதாரணம் 2: கரீம்தீன் (2016) என்பவர் இன்றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்சிக்கான முக்கிய கருவியாக விளங்குகிறது எனக் கூறுகிறார்.
உதாரணம் 3: இன்றைய காலத்தில் கல்வி சமூகப் பெயர்ச்சிக்கான முக்கிய கருவியாக விளங்குகிறது (1).
உதாரணம் 4: சமூகப் பெயர்ச்சி என்பது கைத்தொழில் சமூகத்தில் மிக விரைவாக ஏற்படுகின்றது எனவும் இந்த சமூகப் பெயர்ச்சியினை ஏற்படுத்தும் மிகப் பிரதான கருவி கல்வி என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் (கரீம்தீன், 2016, ப. 79).
மேற்காட்டப்பட்ட உதாரணங்களில், முதல் மூன்றும் நேரடியற்ற மேற்கோள் காட்டல்கள் ஆகும். நான்காம் உதாரணம், நேரடியான மேற்கோள் காட்டல் ஆகும். மேற்கோள் காட்டலில் நூலாசிரியர் பெயரும் வருடமும் மட்டுமே குறிப்பிடப்படும். அல்லது இலக்கங்கள் இடப்பட்டு, அதன் விரிவான விவரம் கடைசியில் உசாத்துணையில் தரப்படும். நேரடியான மேற்கோள்களில் மாத்திரம் நூலாசிரியர் பெயரும் வருடமும், குறித்த மேற்கோள் காணப்படும் பக்கங்களும் குறிப்பிடப்படும். அதாவது பிறர் கருத்தில் எந்த வித மாற்றமுமின்றி அப்படியே எழுதுவதனை இது குறிக்கிறது. இதனை நாம் எடுத்துக்காட்டு (Quotation) எனக் கூறுகிறோம்.
கல்வி சார்ந்த ஆக்கங்களான கட்டுரைகள், ஒப்படைகள், ஆய்வு முன்மொழிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றின் உட்பந்திகளில் (In-text) மேற்கோள் காட்டிய அனைத்தினதும் முழுமையான விவரங்களை அதாவது, நூலாசிரியர் பெயர், வருடத்துடன், குறித்த ஆக்கத்தின் பிரசுர விடயங்களை முழுமையாக, எமது கல்விசார் ஆக்கங்களின் இறுதி பக்கத்தில் பட்டியலிட்டு காட்டுவதையே, உசாத்துணை (Reference) எனப்படுகிறது.
எனவே, உசாத்துணை என்ற தலைப்பில் பட்டியல் இடும் நூல்கள், கட்டுரைகள் என்பனவற்றின் உட்பகுதிகளில், மேற்கோள் இடப்பட்டதாகவோ, எடுத்துக்காட்டப்பட்டதாகவோ இருத்தல் வேண்டும். மாறாக, எமது கல்விசார் கட்டுரைகளின் உட் பந்திகளில் மேற்கோள் காட்டியவற்றுடன், மேற்கோள் காட்டாத நூல் விவரங்களையும் இணைத்து வரும் பட்டியல், நூல்விபரப்பட்டியல் அல்லது நூற்றொகை (Bibliography) என்றழைக்கப்படும். அதிகமான ஆய்வு மாணவர்கள், இவ்வேறுபாட்டினை புரிந்து கொள்ளாமல் உசாத்துணை பட்டியல் கோரப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் நூல் விபரப் பட்டியல் அல்லது நூற்றொகையினை எழுதி விடுகின்றனர். ஆய்வுகளில் ஈடுபடுவோர், பல்வேறு கட்டுரைகளை எழுதுவோர், உசாத்துணை மற்றும் நூல் விபரப் பட்டியல் ஆகியவற்றிலுள்ள இந்த வேறுபாட்டை அறிந்து செயற்படுவது முக்கியமாகும்.
குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Annotated Bibliography)
உசாத்துணை மற்றும் நூல்விபரப்பட்டியல் தவிர குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Annotated Bibliography) என்ற வகையும் பயன்பாட்டில் உள்ளது. இந்த குறிப்புரை நூல் விவரப் பட்டியலினை ஒரு தலைப்பின் கீழ் ஆழமான புரிதலையோ, வாசிப்பினையோ உறுதி செய்யும் வகையில் பல உயர்கற்கை நெறிகள் பயிற்சியாக வழங்குவதுண்டு. ஆய்வாளர்கள், இலக்கிய மீளாய்வில் ஈடுபடும் போதும், குறிப்புரை நூல் விவரப் பட்டியலினை தயாரித்துக் கொள்வதுண்டு. இதில், நூல்விபரப்பட்டியலுக்கு (Bibliography) மேலதிகமாக வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும், ஒவ்வொரு நூல், கட்டுரைகள் பற்றிய விவரங்கள், சுருக்கமாக (Summary) தொகுக்கப்படும். இதன் மூலம், ஒவ்வொரு நூல் அல்லது, கட்டுரை பற்றிய சிறிய அறிமுகக்குறிப்பு பெறப்படும். இதில், குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரையின் முழுமையான நூல் விவரப் பட்டியலுடன் ஆசிரியர்களின் பின்னணி, குறித்த பிரசுரத்தின் நோக்கமும் பரப்பும், அதன் மையக் கருத்துக்கள், யாருக்காக எழுதப்பட்டது, நூலின் முறையியல், ஆசிரியரின் அணுகுமுறை, பயன்படுத்தப்பட்டுள்ள மூலங்கள், மூலங்களின் நம்பகத்தன்மை, வலிமைகளும் பலவீனங்களும், ஏனைய கட்டுரைகளுடனான ஒப்பீடு, குறித்த பிரசுரம் தொடர்பான வாசிப்பாளனின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஓரு சுருக்க விமர்சனப் பகுதியாக இது விளங்கும்.
இக்குறிப்புரை நூல் விவரப் பட்டியல் தயாரிக்கும் நோக்கம், பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இதில் மேலும் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன: சுருக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Summary annotations), மதிப்பீட்டு குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Evaluative annotations), சுருக்கமான மற்றும் மதிப்பீட்டு வகைகள் இரண்டும் கலந்த குறிப்புரை நூல் விவரப் பட்டியல் என்பனவே அவைகளாகும். சுருக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியலில் குறிப்பிட்ட பிரசுர உள்ளடக்கம் பற்றிய சுருக்கம், அதில் காணப்படும் முனைப்பான அம்சங்கள், ஆசிரியரின் முறையியல், அணுகுமுறை, என்பன குறிப்பிடப்பட்டு இருக்கும். சுருக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியல், விளக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Informative annotations) சுட்டும் குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (indicative annotations) என மேலும் இரண்டு உப பிரிவுகளைக் கொண்டுள்ளது. விளக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியல் (Informative annotations) ஒரு பிரசுரத்தின் நேரடியான சுருக்கத்தைக் கொண்டிருக்கும். மாறாக சுட்டும் குறிப்புரை நூல் விவரப் பட்டியல், குறித்த மூலத்தின் அல்லது பிரசுரத்தில் இருந்து உண்மையான தகவலை தரமாட்டாது. குறித்த பிரசுரம் அல்லது மூலத்தில் எத்தகைய எழுவினாக்கள் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளன என ஒரு மேற்போக்கான விபரிப்பையே கொண்டிருக்கும்.
மதிப்பீட்டு குறிப்புரை நூல் விவரப் பட்டியல், சுருக்க குறிப்புரை நூல் விவரப் பட்டியலில் உள்ளடக்கும் விடயங்களை கொண்டிருப்பதுடன், விமர்சன ரீதியான நோக்கினையும் உள்ளடக்கி இருக்கும். அதாவது குறித்த பிரசுரத்தின் வலிமைகள், பலவீனங்கள், பயன்படுதன்மை, தரம் போன்ற பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும். அநேகமான குறிப்புரை நூல் விவரப் பட்டியல்கள் மேலே காட்டப்பட்ட இரண்டு வகைகளினதும் கலவையாகவே காணப்படும். இதுவே, மூன்றாவது வகையான குறிப்புரை நூல் விவரப் பட்டியலாக கருத்திற்கொள்ளப்படுகிறது.
உசாத்துணையிடல் பாணிகள் (Referencing Styles)
உசாத்துணையிடலில் ஓர் ஒழுங்குமுறையினை பின்பற்றும் பொருட்டு பல்வேறு அமைப்புக்கள் உசாத்துணையிடலில் சில நியமங்களை உருவாக்கி பின்பற்றி வருகின்றன. அதாவது, பிறரது சிந்தனைகள், அபிப்பிராயங்கள், கருமங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டதொரு வழியில் எவ்வாறு ஒப்புக்கொள்வது என்பதற்கான ஒழுங்கு விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனையே, உசாத்துணையிடல் பாணி (Referencing style) என்பர். பல்வேறு கல்விசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தமது நிறுவனம் அல்லது அமைப்பு சார்ந்த வெளியீடுகளில் ஓர் சீர்தன்மையினை பராமரித்தல், பிற நிறுவன வெளியீடுகளில் இருந்து தமது தனித்துவத்தை வேறுபடுத்தி காட்டுதல், என்ற நோக்கங்களில் உசாத்துணையிடல் பாணிகளை உருவாக்கி நடைமுறைப் படுத்துகின்றன. இரசாயனவியல், பொறியியல், பொருளியல், வானவியல், உளவியல், சமூக விஞ்ஞானம், தாவரவியல் என துறை வாரியாக நூற்றுக்கணக்கான உசாத்துணையிடல் பாணிகள் காணப்படுகின்றன. பொதுவாக, ஆங்கில மொழி மூல ஆய்வு இலக்கியங்களை கருத்திற் கொண்டே இத்தகைய உசாத்துணையிடல் பாணிகள் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கம் பெற்றன. காலப்போக்கில், சுதேசிய மொழிகளில் வளர்ந்து வரும் ஆய்வு சார் பரப்புக்களில், ஆங்கில மொழியிலான ஆய்வு இலக்கியங்கள் பெற்ற முக்கியத்துவம் காரணமாக, மேலைத்தேய உசாத்துணையிடல் பாணிகளும் கீழைத்தேய ஆய்வு இலக்கியங்களில் ஊடுருவியுள்ளன. இவற்றில் மிகப் பிரசித்தமான சில பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
அட்டவணை 1:
பிரசித்தமான சில உசாத்துணையிடல் வகைகள்
ACS (American Chemical Society) என்ற அமெரிக்க இரசாயனவியல் சங்கத்தின் உசாத்துணையிடல் வகை. இரசாயனவியல் மற்றும் அதோடு இணைந்த துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
• AGLC (Australian Guide to Legal Citation). இந்த வகை உசாத்துணையிடல் வகை, சட்டத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
• AMA (American Medical Association): இது மருத்துவ துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது
• AMJ (Academy of Management style) முகாமைத்துவ துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உசாத்துணையிடல் முறையாகும்
• APA (American Psychological Association): உளவியலில் பயன்படுத்தப்படும் ஓர் உசாத்துணையிடல் முறையாக உள்ள போதிலும், ஏனைய பல துறைகளிலும், குறிப்பாக சமூக விஞ்ஞானத் துறைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏனையவற்றை விடவும் சற்று பிரபல்யமானது.
• Harvard—இது ஒரு பொதுவான முறையாகும். ஏனைய உசாத்துணையிடல் முறைகள் போன்று இதற்கு உத்தியோகபூர்வ வழிகாட்டல் கையேடுகள் கிடைக்கப் பெறுவதில்லை. ஆயினும் இந்த முறையில் சில மாற்றங்களை செய்து சில நிறுவனங்கள் ஹாவர்ட் என்ற பெயருடன் தமது பெயர்களையும், இணைத்து வழிகாட்டல் கையேடுகளை வழங்குவதுண்டு. உதாரணம்: UQ Harvard Style (குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஹாவர்ட் முறை). கட்டுரைப் பந்திகளில் மேற்கோள் காட்டும் போது ஆசிரியர் பெயர் மற்றும் வருடத்தை குறிப்பிட்டால் அது ஹாவர்ட் முறை என்று அழைக்கப்படுவதுண்டு. இதுவே APA போன்ற ஏனைய உசாத்துணையிடல்முறைகளுக்கு அடிப்படியாக அமைந்துள்ளது.
• IEEE (Institute of Electrical and Electronics Engineers): உலக பிரசித்தி பெற்ற மின்சார, இலத்திரனியல் பொறியியலாளர் நிறுவனம் (IEEE) வெளியிட்டுள்ள உசாத்துணையிடல் முறையாகும். இது பொறியியல், கணினி விஞ்ஞானம் போன்ற துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
• MLA (Modern Language Association of America): நவீன மொழிகள் தொடர்பான சம்மேளத்தினால் மொழித்துறை சார்ந்த துறைகளில் பயன்படுத்தவென வெளியிட்டுள்ள உசாத்துணையிடல் முறையே. இதுவாகும்..
• Vancouver: ஹாவர்ட் முறை போன்று இதுவும் ஒரு பொதுவான உசாத்துணையிடல் முறை ஆகும். எனினும் இது அதிகமாக சுகாதார விஞ்ஞான துறைகளில் பயன்பாட்டில் உள்ளது.
எந்த உசாத்துணை முறையினைப் பயன்படுத்துவது?
பல்வேறு உசாத்துணையிடல்முறைகளைப் பற்றி வாசிக்கும் உங்களுக்கு இவற்றில் எதனை பயன்படுத்த வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. பின்வரும் சந்தர்ப்பங்களில் இந்த வினா உங்களில் எழக் கூடும்:
· ஒரு நிறுவனத்தில், பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்காக ஆய்வு முன்மொழிவை அனுப்ப வேண்டிய தேவை உருவாகும் போது,
· ஓர் ஆய்வுச் சஞ்சிகைக்காக ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிக்கும் போது,
· ஒரு ஆய்வு மாநாட்டிற்காக ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிக்கும் போது,
· பட்ட படிப்புக்களுக்காக ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் போது.
மேலே கூறிய சந்தர்ப்பங்களின் போது சம்பந்தப்பட்ட நிறுவனம், பல்கலைக்கழகம் எந்த உசாத்துணையிடல் முறையினை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டல் குறிப்புக்களை நிச்சயம் வழங்கி இருப்பார்கள். அதனை பின்பற்றி ஆக்கங்களை தயாரிக்க முடியும். குறிப்பிட்ட வழிகாட்டல்களை கவனத்தில் கொள்ளாமல் அனுப்பப்படும் ஆக்கங்கள் அதிகமான வேளைகளில் நிராகரிக்கப்படுவதுண்டு.
உசாத்துணை பாணிகளும் நவீன தொழிநுட்பமும்
தகவல் தொழிநுட்பம் வளர்ச்சியடையாத காலங்களில், பல்வேறு கல்விசார் ஆக்கங்களை எழுதும் போது, உசாத்துணையிடல் முறையினை கைகளினால் செய்ய வேண்டி இருந்தது. தகவல் தொழிநுட்பம் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற இக்காலகட்டத்தில் உசாத்துணையிடல் முறைகளை மேற்கோள்ளவென பல புதிய நுட்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
பல்வேறு மென்பொருட்கள் பல காணப்படுகின்றன. இவற்றுள் RefWorks, Zotero, EndNote, Mendeley மற்றும் CiteULike போன்றன மிகப் பிரபல்யம் பெற்ற உசாத்துணையிடல் மென்பொருள்கள் ஆகும். இவற்றுள் RefWorks, EndNote என்பன விலை கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள்கள் ஆகும். ஏனையவை, இலவச திறந்த மென்பொருள்கள் ஆகும். இவைமாத்திரமன்றி தற்போது இதற்கென பல்வேறு செயலிகளும் பாவனைக்கு வந்துள்ளன. Easy Harvard Referencing, APA Referencing style, Easy APA Referencing, Citation Maker, Mandely, Reference Generator எனப் பல்வேறு வகையான செயலிகள் பாவனையில் உள்ளன. ஸ்மார்ட்போன்களைக் கொண்டு இவற்றை தரவிறக்கம் செய்து எமக்கு தேவையான வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். எமது கணினிகளில் உள்ள Microsoft Word யிலும் இது தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
ஆய்வுகளில், உயர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு வகையான படைப்புக்களை உருவாக்க வேண்டி இருக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில், தமது வாசிப்பினூடாக பெற்றுக் கொண்ட வற்றை மேற்கோள் காட்டல், எடுத்துக்காட்டல் செய்வதனூடாக பிறர் கருத்துக்கள், கருமங்களை உரிய முறையில் ஒப்புக் கொள்ள வேண்டிய முறைமை பற்றியே, இங்கு எடுத்து நோக்கப்பட்டது. கடந்த காலங்களை விட, உசாத்துணையிடல் முறைமைகளில் நவீன தொழில்நுட்பங்களின் பிரயோகங்கள் அதிகரித்து வருவதானால், இதில் இருந்து வந்த சிரமங்கள் பல குறைந்துவருகின்றன.
ஆய்வில் கரிசனை கட்டுவோர், உயர் கற்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் இந்த முறைமைகளை நன்கு அறிந்து செயற்படுவது முக்கியமாகும்.
கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
சிரேஸ்ட விரிவுரையாளர்
கல்விப் பீடம், இலங்கை திறந்த
பல்கலைக்கழகம், நாவல
உசாத்துணையிடல் பாணிகள் நூல் அறிமுகம்
ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரைகளின் தொகுப்பு ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரைகளின் தொகுப்பு