பாடசாலைகளில் பாடம்சாரா திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதிலுள்ள பிரச்சினைகள்.

Teachmore

கலைத்திட்டத்துடன் தொடர்புபடுத்தி இணைக் கலைத்திட்டம் என்பதனை நோக்கும்போது பாடசாலையின் வகுப்பறைப் போதனைக்கு அப்பால் உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, சமூக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்ககூடிய பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களில் மாணவர்களை பங்கு பெறச் செய்வதன் மூலம் அவர்களை ஒரு முழு மனிதனாக்கும் செயற்றிட்டமே இணைப்பாட விதானம் என வரையறை செய்யலாம். இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலமே பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடம் சாரா திறன்கள் வழங்கப்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் பாடம் சாரா திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதில் பொதுக்கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் நடைமுறையில் காணப்படுகின்றன.

பாடசாலைகள் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளை புறந்தள்ளிவிட்டு சமநிலை ஆளுமை என்ற கருத்தியலை சிறிதேனும் சிந்தித்து பார்க்க முடியாது. எனினும் உடல் வளர்ச்சி, சமநிலை ஆளுமை உருவாக்கம் என்ற கருத்தியல்கள் ஓரங்கட்டப்பட்டு பரீட்சைகளையும் பரீட்சைப் பெறுபேறுகளையும் மையப்படுத்திய கலைத்திட்டமும் பரீட்சையை மட்டுமே மையமாகக் கொண்ட மதிப்பீட்டு முறைகளும் பாடசாலைகளில் இணைக்கலைத்திட்டத்தினூடாக பாடம்சாரா திறன்களை வழங்குவதை மட்டுப்படுத்தி வருகின்றன. பரீட்சைகளை மாத்திரம் நோக்காக்கொண்டு கல்வியினை கற்காது இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்றுவதனூடாகவே சுயநம்பிக்கை, சுயகட்டுப்பாடு போன்றவற்றை கட்டியெழுப்ப முடியும். (Romakas,1992) பாடசாலைகளில் பாடம் சாரா திறன்களை வழங்குவதிலுள்ள மற்றொரு பிரச்சினையாக சில அதிபர், ஆசிரியர்களுக்கு இணைப்பாடவிதானம் பற்றிய போதிய விளக்கமின்மையும் ஆர்வமின்மையையும் சுட்டிக்காட்டலாம். பெரும்பாலன பாடசாலைகளில் இந்நிலைமை வேரூன்றி காணப்படுகின்றது.

அறிவுத்தொகுதியின் வேகமான விரிவாக்கத்தினையும் புதிய அறிவுமைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாணவர்களை வளர்தெடுக்கவும் தொழில் உலகுடன் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் தேசிய சர்வதேச அளவில் கல்வியையும் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கும் பாடம் சாரா திறன்களின் தேவையும் இணைக்கலைத்திட்ட செற்பாடுகளின் மீதான பங்கேற்பும் இன்றியமையாத விடயங்களாகும். ஒவ்வொரு மாணவரும் தமது விருப்பு, திறன், வாய்ப்பு என்பவற்றிற்கு அமைய பொருத்தமான இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் பங்குபற்றி பாடம் சாரா சமூகத்திறன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை பாடசாலைகள் வழங்க வேண்டும். குறிப்பாக பெருமளவான மாணவர்கள் பங்குபற்றக்கூடிய வெவ்வேறுவிதமான செயற்பாடுகளை பாடசாலைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். எனினும் இதற்கென பாடசாலைகளில் போதியளவு பௌதிக வளங்கள் மற்றும் ஆளணி வளங்கள் இல்லாமையை பிரச்சினையாக குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாது இச்செயற்பாடுகளுக்கென பாடசாலைகளில்; போதியளவு நேரம் ஒதுக்கப்படாமை இன்னுமொரு குறைபாடாகவும் உள்ளது.

சில ஆசிரியர்கள் கற்பித்தலுடன் பாடசாலையிலுள்ள ஏனைய பதிவுகளை பூரணப்படுத்தி அதனை சரியாகப் பேணவேண்டும் எனவும் இதனையே ஒரு சுமையாகவும் கருதிக்கொள்கின்றனர். இந்த நிலைமை பாடம் சாரா திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அத்துடன் கற்றல் கற்பித்தல் செற்பாடுகளுடன் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளிலும் தம்மை முழுமையாக அற்பணித்து ஆர்வத்துடன் செயற்படும் ஆசிரியர்களுக்கு ஏனைய ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகளால் பொருத்தமான கணிப்பு மற்றும் உற்சாகமூட்டல்கள் வழங்கப்படுவதில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே இருந்து வருகின்றது. இந்நிலைமையும் பாடம்சாரா திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை சில ஆசிரியர்களும், சக மாணவர்களும் விமர்சிப்பதுடன் உளரீதியான துன்பத்திற்கும் உள்ளாக்கும் நிலைமைகளும் பாடசாலைகளில் அரங்கேற்றப்படுகின்றன.

இலங்கையின் பாடசாலை கலைத்திட்ட அமைப்பினைப் பொறுத்து அது பாடமைய கலைத்திட்டத்தையே முன்னிலைப்படுத்தியதாய் அமைந்துள்ளது. இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளுக்கு போதுமான ஊக்குவிப்பை வழங்குவதாகத் தெரியவில்லை. தேர்வுகளுக்கு மிகையான அழுத்தம் கொடுக்கப்பட்டதால் கல்வியின் உள்ளடக்கம் வளம் குன்றி வறியதாகிவிட்டது. கலைத்திட்ட, இணைப்பாடவிதான முயற்சிகள் வாயிலாக வரும் பெறுபேறுகள் அருகிவிட்டன. (Anushiya.S, 2010) இன்று படித்து பட்டம் பெற்று வெளியேறுபவர்களில் அனேகர் போதுமான சமூகத்திறன்கள், வாழ்க்கைத்திறன்களை பெற்றிராதவர்களாகவும் காணப்படுகிறார்கள். தன்னம்பிக்கையின்மை, சவால்களை வெற்றிகொள்ளும் திறன்கள் போதாமை, தலைமைத்துவ ஆற்றலின்மை போன்றதான பிரச்சினையுடையோராக காணப்படுகின்றனர். இதனாலேயே தனியார் துறை தொழில் வாய்ப்புக்களை பெறமுடியாதவர்களாகவுள்ளனர் என்பதுடன் தொழிலுக்காக அரசினை நம்பியிருக்க வேண்டியவர்களாகவும் அதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.

பெற்றோர் தமது பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளில் இணைப்பாட செயற்பாடுகள் தாக்கம் செலுத்தும் என பயம்கொள்வது மாணவர்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் பாடம் சாரா திறன்களை பெற்றுக்கொள்வதில் தடையை ஏற்படுத்துகிறது. அத்துடன் பொதுவாக இச்செயற்பாடுகளில் விருப்புடன் பங்குபற்றும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பிரத்தியேக வகுப்புக்களும் தனியார் வகுப்புக்களும் தடை செய்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளின் உடல், உள விருத்தியில் போதிய கவனமின்றி செயற்படுகின்றனர். இவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளின் முக்கியத்துவம் பற்றிய அறியாமையால் பொதுப் பரீட்சைகளில் தமது பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதில் மட்டும் அதீத அக்கறை காட்டுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடம் சாரா திறன்களை வழங்குவதில் பாடசாலைகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றன.

பாடம் சாரா திறன்களை வழங்குவதில் மாணவர் தொகையை குறைவாகக் கொண்ட பாடசாலைகளை விட மாணவர் தொகையை உயர்வாகக் கொண்ட பாடசாலைகள் எல்லா மாணவர்களுக்கும் சந்தர்ப்பமளிக்காத போக்கையே காட்டுகின்றது. இந்நிலைமை அண்மைய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றி பாடம் சாரா திறன்களைப் பெற்றுக் கொள்வதில் குடும்ப வறுமை கணிசமான செல்வாக்குச் செலுத்துகின்றது. தமது ஆளுமை விருத்திக்கும், குதூகலத்திற்கும், சமூக மதிப்பிற்கும் துணை செய்யக்கூடிய பாடசாலை சுற்றுலாக்கள், பொருட்காட்சிகள் போன்றவற்றில்கூட வறிய பெற்றோரின் பிள்ளைகள் கலந்துகொள்வதில்லை. அதன் பயன்களும் திறன்களும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. நல்ல ஆடைகள்கூட அவர்களிடம் இல்லை. பாடசாலை சீருடைதான் அவர்களிடமுள்ள சிறந்த ஆடைகளாகும். பரிசுத்தினங்களில் நல்ல ஆடை இல்லாததால் பல சிறுமியர் தமக்குரிய பரிசுகளை வாங்குவதற்குகூட வருவதில்லை. (Sinnathampi.M, 2008) எனவே பாடம்சாரா திறன்களை பெற்றுக்கொள்வதில் வறுமை மிகுந்த செல்வாக்குச் செலுத்துகிறது.

பால்நிலை சார்பான தடைகளும் பாடம் சாரா திறன்களை வழங்குவதில் செல்வாக்குப் பெறுவதைக்காணலாம். பாடசாலை இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் ஆண்களே கூடியளவு ஈடுபாடுடையவர்களாகவுள்ளனர். ஒப்பீட்டளவில் பெண்ணியம் சார்பான சமூகப்பார்வை மிகக்குறைந்த ஊக்கலை வழங்குவதே இதற்கான காரணமெனலாம். அத்துடன் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மத்தியில் காணப்படும் தேவையற்ற பீதிகளும் பிள்ளைகள் இணைப்படவிதான செயற்பாடுகளில் பற்குபெறுதலை தடைசெய்கின்றது. மேலும் பாடசாலைக்கும் வீட்டிற்குமுள்ள தூரம், பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளின் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்குவிக்காமை, அதிபர் ஆசிரியர்களிடையே நல்லுறவும் இணக்கப்பாடின்மையும், ஆசிரியர் வளப்பங்கீட்டிலுள்ள ஏற்றத்தாழ்வு, வளப்பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகள் பொதுக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு பாடம்சாரா திறன்களை வழங்குவதில் தடையாக இருந்து வருகின்றன. 

இலங்கையின் பொதுக்கல்வியில் காணப்படும் பாடம் சாரா திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், வலயமட்ட நிருவாகம், மாகாண கல்வி நிருவாகம், கல்வி அமைச்சு மட்டம், கலைத்திட்ட ஆக்கம் மற்றும் அமுல்படுத்தல்கள் என பல்வேறு துறையினர் மீதும் பரந்து காணப்படுவதால் பொறுப்புவாய்ந்த இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு பாடம் சாரா திறன்களை வழங்குவதில் சிறந்த உபாய வழிமுறைகளை திட்டமிட்டு செயற்படுத்தாதவரைக்கும் இந்நிலைமைகள் தொடர்கதையாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை.

திரு நாகமணி இராமேஸ்வரன் 

(National Dip.in Teach, BA, PGDE, M.Ed )

அதிபர் ( SLPS III )

மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயம்

மட்டக்களப்பு


crhj;Jizfs;

· Ginige.I.L, The Vision of the new Curriculum and the expected Paradigm shift in School Education 2008, Centre for Educational Professional Competency Development, padukka.

 

· Karunanithy.M, Kattal katpiththal Mempaddukkna valimuraikal, 2008, Chemamadu Poththakasalai, Colombo 11.

 

· Thevasakayam.S, Padasalaikalil Inaikalaithiddam, Aasiriyam, Ithal 003 July 2011.

 

·   Sri Lanka National Education Commission Report 2016

 

·   Aasiriyam, Ithal 005 September 2011.

 

பிற்குறிப்பு

கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு. 

கட்டுரைகள் teachmore வின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில்லை.

 

 

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!