விளைதிறன் மிக்க கற்பித்தல்: பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையின் பயன்பாடுகள்
Mr.K.Punniyamoorthy
President
Addalaichenai NCOE BA (Peradeniya), LLB(SL), PGDE-Merit (NIE), PGDEM-Merit (NIE), MEd (NIE),MATE (OUSL),Mphil in Edu (Colombo)
மாணவர்கள் தமது வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பொருத்தமான தீர்வுகளைக் கண்டறியும் திறனை வளர்க்க பிரச்சினை தீர்க்கும் முறை பெரிதும் உதவுகிறது.
தமக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தாமே தீர்ப்பதற்குரிய பயிற்சிகளைப் பாடசாலை மட்டத்திலேயே வழங்குதல் வேண்டும் என்பதற்காகவே கலைத்திட்டங்களில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இக் கற்பித்தல் முறை அல்பிரட் வைட் (Alfred white) என்ற கல்வி அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரச்சினை தீர்ப்பதற்குப் பொதுவாக இரு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவையாவன
1. ஒரு பிரச்சினை ஏற்படும் போது அதற்குத் தீர்வு காண்பதற்காக அப் பிரச்சினையை ஆராய்ந்து பொருத்தமானவற்றை ஏற்றுப் பொருத்தமற்றவை விலக்குதல் வேண்டும். இச் செயன்முறை எதிர்த்தெறிப்புச் சிந்தனை எனப்படும். இவ் எதிர்த்தெறிப்புச் சிந்தனையானது ஒரு பிரச்சினையை நன்கு விளங்கிக் கொள்ளவும் அப் பிரச்சினைகளுக்கேற்ற தீர்வுகளைக் காணவும் அவற்றுள் சிறந்த தீர்வு எது என முடிவு செய்யவும் அத் தீர்வினை நடைமுறைப்படுத்தவும் உதவுகின்றது.
2. பிரச்சினை தீர்த்தலில் அடுத்த முறையாகக் கொள்ளக்கூடியது பிரச்சினை பற்றி நன்கு சிந்தித்து முறையாகத் திட்டமிட்டு அத் திட்டத்தின் மூலம் சிக்கல்களைத் தீர்த்தலாகும். இம் முறையில் அதிகளவு பயிற்சிகளை மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வழங்குதல் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தமது வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும் இலகுவில் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
இம் முறைகள் இரண்டையும் அல்பிரட் வைட்
1. விதி வருவித்தல் முறை (Idductive Method)
2. விதி விளக்க முறை (Deductive Method) என்கிறார்.
விதி வருவித்தல் முறை
விதி வருவித்தல் முறை என்பது பல்வேறு உதாரணங்கள், எடுத்துக்காட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்திப் பிரச்சினைகளை விடுவிப்பதற்குரிய ஒரு பொதுவான விதியை மாணவர்கள் கண்டறிவதாகும். மாணவன் இம்முறையில் உண்மைகளைச் சுயமாகவே கண்டறிவான். உய்த்தறி முறையில் பல்வேறு செயன்முறைகள் உள்ளடங்கியுள்ளன. அவையாவன
1. வழங்கப்பட்ட பொருட்களை அவதானித்தல்
2. அவற்றுக்கிடையிலான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் ஆய்ந்தறிதலும் பகுப்பாய்வு செய்தலும்
3. வகைப்படுத்தல்
4. பண்பு பிரித்தறிதலும் பொதுமையாக்கலும்.
5. பிரயோகித்தல் அல்லது உறுதிப்படுத்தல்
மாணவர்கள் சிறப்பான விடயங்களிலிருந்து பொதுவான விடயங்களுக்குச் செல்வதற்கு விதி வருவித்தல் முறை பெரிதும் உதவுகிறது. விஞ்ஞானம், புவியியல், கணிதம், மொழி போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கு இம்முறை பெரிதும் உதவுகிறது. உதாரணமாக விஞ்ஞானத்தில் பரிசோதனைகளைச் செய்து முடிவுகளைக் காண்பதற்கும் கேத்திர கணிதத்தில் கோணங்களை, முக்கோணங்களை அளவிட்டு முடிவுக்கு வருதல், புவியியில் பாடத்தில் உயரமான இடத்தின் வெப்பநிலையை அளவிட்டறிதல் (நுவரெலியா, பதுளை).
நாம் ஒவ்வோரிடமும் காணும் கிளிகள் பச்சை என்றால் கிளிகள் யாவும் பச்சை என்ற முடிவுக்கு வருவதைக் குறிப்பிடலாம்.
தொகுத்தறி முறையின் முக்கியத்துவம்
1. அறிவைச் சுயமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
2. கற்றல் கற்பித்தல் செயன் முறையில்மாணவர்களின் ஈர்ப்பான பங்குபற்றலுக்கு இம்முறை உதவுகிறது.
3. மாணவர்களுக்குச் சவாலான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாக இம் முறை அமைகிறது.
4. மாணவர்களுக்குச் சுய நம்பிக்கையை விருத்தி செய்வதற்கு இம் முறை உதவுகிறது.
5. இம்முறை ஒரு இயற்கையான முறையாகும்.
6. இம் முறை ஆழமான உளவியல் அடிப்படைகளை மையமாகக் கொண்டதாகும். குறிப்பாக செய்வதற்காகக் கற்றல் என்பதே இம்முறையின் அடிப்படையாகும்
7. பிள்ளை எவ்வாறு பிரச்சினைகளைச் சமாளிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதாக இம் முறை அமைந்து காணப்படுகிறது. குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக் கற்றுக் கொள்ள இம்முறை உதவுகிறது.
தொகுத்தறி முறையின் நலிவுகள்
1. இம்முறை மிகவும் நீண்டதும் மெதுவானதுமாகும்.
2. சிறிய மாணவர்களுக்கு இம்முறை பொருத்தமற்றதாகும்
3. சில பாடவிடயங்களைக் கற்பிப்பதற்கு இம்முறை பொருத்தமற்றதாகும். உதாரணமாக
வரலாறு போன்ற பாடங்களைக் குறிப்பிடலாம்.
4. தொகுத்தறி முறை ஒரு பூரணமான முறையல்ல. ஏனெனில் தொகுத்தறி முறையில் எதுவும் புதிதாக நிரூபிக்கப்படுவதில்லை மாறாக வழங்கப்படுகின்ற விடயங்கைளை ஆராய்ந்து நிரூபிப்பதாகவே அமைகிறது.
உய்த்தறி முறையின் முக்கியத்துவம்
இம்முறையில் பல்வேறு கட்டங்கள் உள்ளடங்கியிருக்கும் குறிப்பாக
1. விதிகள் பொதுமைப்படுத்தல்கள், கோட்பாடுகள் என்பன மாணவர்களுக்கு ஆசிரியரால்
வழங்கப்படும்.
2. அதன் பின் கோட்பாடுகளுக்குத் துணையாக உதாரணங்கள் வழங்கப்படும்
3. அதன்பின் அவ் உதாரணங்களைக் குறித்த சூழ்நிலைகளை அடிப்படையாகக்
கொண்டு சரி, பிழை பார்க்குமாறு மாணவர்கள் கேட்கப்படுவார்கள்
4. இறுதியில் முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
உய்த்தறி முறையின் முக்கியத்துவம்
1. ஆசிரியரின் வேலை இம் முறையில் இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவர் பொதுவான கோட்பாடுகளையே மாணவர்களுக்கு வழங்குவார் மாணவர்களே அவற்றைச் சரி.பிழை பார்ப்பர் ஆகவே இம் முறையில் மாணவர்களுக்கே வேலை அதிகம்.
2. இம் முறை மிகவும் சிக்கனமானது. இது மாணவர்களது ஆசிரியரதும் நேரத்தையும்
சக்தியையும் மீதப்படுத்துகிறது.
3. இது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவர்கள்
சுயமாக உண்மைகளைக் கண்டறியமாட்டார்கள். அவர்களால் உடனடியாக விடையைக் கண்டுபிடிப்பதே இயலுமானதாக இருக்கும்.
நலிவுகள்
1. அறிவை இம் முறையில் சுயமாகப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கும். அதாவது
முறையாகத் தன்னமைவாக்கிக் கொள்ளமுடியாமலிருக்கும்.
2. மாணவனுக்கு வழங்கப்படும் உடனடி விதிகள், கோட்பாடுகள், மற்றும் சூத்திரங்கள் என்பவற்றின் மூலம் அவர்களது மகிழ்ச்சிகரமான சுய முயற்சி, சுய செயற்பாடு என்பவற்றை இழப்பவர்களாக இருப்பார்கள்.
3. இம் முறை ஞாபகப்படுத்தலை ஊக்கப்படுத்துவதாக உள்ளது அதனால் மாணவர்கள் ஞாபகப்படுத்துபவற்றில் பெருமளவை மறந்துவிடுவார்கள். ஆகவே இம்முறை மூலம் பெறும் அறிவு பயனற்றதாக அமைந்துவிடும்.
4. இம்முறை இயற்கைக்கு மாறானதாகும் உளவியல் சாராததாகவும் உள்ளது.
5. இம்முறை கற்றலை ஊக்கப்படுத்துவதாகவோ விருத்தி செய்வதாகவோ பெருமளவில் காணப்படவில்லை.
6. மாணவர்களின் சுய நம்பிக்கையை உருவாக்கும் முறையாக இம் முறை காணப்படவில்லை.
I.E மில்லரின் (I.E.Miller) கூற்றுப்படி தொகுத்தறிமுறை உபகரணங்களை உருவாக்குவதாகும் ஆனால் உய்த்தறி முறை உபகரணங்களைப் பயன்படுத்துகின்ற ஒரு முறையாகும். ஆனால் இரு முறைகளும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல இரண்டும் உண்மைகளைக் கண்டறிவதையே வேண்டி நிற்கின்றன. அவை நடப்பதற்குப் பயன்படும் இரு கால்களை ஒத்தவைகளாகும்.
தொகுத்தறி , உய்த்தறி முறைகளின் ஒப்பீடு
விதி விளக்க முறை
விதி விளக்க முறை என்பது பொதுவான ஒரு முடிவில் இருந்து சிறப்பான ஒரு முடிவைத் தீர்மானிக்க உதவும் ஒரு முறையாகும்.
கற்பித்தல் செயற்பாட்டின்போது ஆசிரியர் மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு அதற்கேற்பவே பிரச்சினைகளைக் கொடுத்தல் வேண்டும் குறிப்பாக மாணவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மொறிசன் என்னும் அறிஞர் பிரச்சினை தீர்த்துக் கற்பிக்கும் முறை ஒன்றை உருவாக்கினார் இது மொறிசனின் கற்பித்தல் வட்டம் (Morrisonian Teaching Cycle) எனப்படுகிறது. இது
* ஆராய்ந்து தேடல்,
* முகஞ் செய்தல்,
* ஒருமைப்படுத்தல், (Assimitation)
* ஒழுங்காக்குதல் (Organization)
* மீளக்கூறுதல் (Recitation)
என்னும் ஐந்து படிமுறைகளைக் கொண்டுள்ளது. இப் படிமுறைகளின் விளக்கங்களை மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கி அவர்களைத் தவறாது கடைப்பிடிக்குமாறு பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும். பிரச்சினை தீர்த்தல் கற்பித்தல் முறை அனைத்துப் பாட உள்ளடக்கத்தினையும் கற்பிப்பதற்கு உதவுவதாக உள்ளது.
விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்குரிய சிறந்த முறையாகப் பிரச்சினை தீர்க்கும் முறையைக் குறிப்பிடலாம். தனியாட்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முழுமையான கல்வியை வழங்குவதற்கு இம் முறை பெரிதும் உதவுகிறது. இம் முறையைப் பின்பற்றும் மாணவன் படிப்படியாக இயங்கி ஒரு பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுக் கொள்வான்.
பிரச்சினை தீர்க்கும் வகையில் மாணவனுக்கு அனுபவங்களை ஆசிரியர் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாணவனை விஞ்ஞானப் படிமுறைகளின் படி செயற்பட ஊக்குவித்தல் வேண்டும். அப் படிமுறைகளாவன
1. பிரச்சினையை இனங்காணல்
2. தரவுகளைச் சேகரித்தல்
3. கருதுகோளை உருவாக்குதல்
4. தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்
5. முடிவுகளுக்கு வருதல்
பிரச்சினை தீர்க்கும் முறையைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
* பாடத்திற்குரிய தலைப்பிற்குப் பொருத்தமான பிரச்சினையைத் தெரிவு செய்தல் வேண்டும்.
* அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தெரிவு செய்தல் வேண்டும்.
* பிரச்சினைகளை இனங்காணும் போதும் அவற்றை வரையறை செய்யும்போதும் தேவையான ஆலோசனைகளை வழங்குதல் வேண்டும். குறிப்பாக பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட எண்ணக் கருக்களையும் அறிவையும் வழங்கலாம்.
* பிரச்சினையுடன் தொடர்புபட்ட வேறு தரவுகளைப் பெற்றுக் கொடுக்கலாம். இதற்காக தரவு சேகரிக்கும் முறைகளை விளக்கலாம் உதாரணமாக அவதானிப்பு முறை , வினாக்கொத்து முறை, பேட்டி முறை போன்றவற்றைக் குறிப்பிடலாம்
* பிரச்சினைகளுடன் தொடர்புடைய எளிய பரிசோதனைகளைச் செய்விக்கலாம்
* கருதுகோள்களை உருவாக்கும் போது தேவையாக இருக்கும் உதவிகளை வழங்கலாம்
* கருதுகோள்களின் உண்மைத் தன்மையைப் பரீட்சிக்கும் போது மாணவர்களுக்கு உதவியவாறு அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு அவர்களோடு சேர்ந்து அப் பரிசோதனைகளைத் திட்டமிட உதவலாம். கருதுகோள்களின் வகைகளை விளக்கலாம்.
* தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும்போது பகுப்பாய்வு முறைகளை விளக்கலாம் உதாரணமாகப் புள்ளிவிபரப் பகுப்பாய்வு முறையை எடுத்து விளக்கலாம்
* முடிவுகளை எடுக்கும்போது தர்க்க ரீதியாகச் சிந்தனையை வழிநடத்திச் செயற்படுவதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும்.
பிரச்சினைகள் படிப்படியாகச் சிக்கலாகவும் ஆய்வுச் சிந்தனையாகவும் மாறுகின்றன. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகளைக் கொடுப்பது பாடசாலைகளின் முக்கிய பொறுப்பாகும்.மாணவனின் நடத்தையில் ஏற்படுத்தும் மாற்றமே கற்றலாகும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உபயோகிக்கப்படும் சிறந்த முறைகளையே கற்பித்தலுக்கும் உபயோகித்தல் வேண்டும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு ஆசிரியர் எப்போதும் உதவுபவராக இருத்தல் வேண்டும்.
பிரச்சினை தீர்ப்பதின் அடிப்படையாக சிந்தனை உள்ளது. ஜோன் டூயி சிந்தனை முறைகளை நான்காக வகுத்துள்ளார்.
1. முதலாவது கட்டத்தில் சிந்தனை சாதாரண உளச் செயற்பாடாக ஆரம்பித்து சிக்கலான அறிவு சார்ந்த நடத்தையாக விருத்தி பெற்றுச் செல்கிறது. அதாவது சிந்தனையின் மிகத் தாழ்ந்த அறிவு சார்ந்த நடத்தைகளையும் எவ்வித தொடர்புமில்லாததும் உள்ளத்தில் விரைவாகத் தோன்றி மறையும் எண்ணங்களையும் கொண்டிருக்கும்.
2. சிந்தனையின் இரண்டாவது கட்டத்தில் உடலின் புலனுறுப்புகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொண்டிருக்கும். கற்பனைக் கதைகள் ,சம்பவங்கள் இதனுள் அடங்கும். பொதுவாக இவை உண்மையாக நிகழ்ந்தனவாக இருக்கமாட்டாது.
3. மூன்றாவது கட்டம் ஒருவித சான்றுமில்லாத விடயங்களில் நம்பிக்கை கொண்டிருப்பதைக் குறிக்கும். இந் நம்பிக்கைகளில் சில எவ்வித கேள்விகளும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவற்றில் நம்பிக்கை உடையவர்கள் கிடைக்கக்கூடிய சான்றுகளை ஆராய்ந்து பார்ப்பதில்லை. இதற்கு உதாரணமாகப் பேய், பிசாசுகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளைக் கூறலாம்.
4. இறுதிக் கட்டத்தில் புரட்சிகரமான ஊகங்களையும் கருதுகோள்களையும் கூறுவதற்கான ஆயத்தமும் ஆற்றலும். உள்ளடங்கும். போதிய சான்றுகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் இவ்வாறான ஊகங்களையும் கருதுகோள்களையும் கூறி அவற்றின் அடிப்படையில் பரிசோதனைகளைச் செய்வது சிறந்ததாகும்.
மாணவர்களிடம் காணப்பட வேண்டிய பிரச்சினை தீர்க்கும் ஆற்றல்கள்
* மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளை உணரும் ஆற்றல் அதாவது உளச் செயற்பாட்டைத் தூண்டுவதற்குரிய சிக்கலானதும் பிரச்சினைக்குரியதுமான விடயம் இருந்தாலொழிய ஆய்வுச் சிந்தித்தலுக்கு அவசியமான உளச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படமாட்டாது.
* பிரச்சினையின் தன்மையைத் தெளிவாக அறியக் கூடிய ஆற்றல் அதாவது பிரச்சினையின் தன்மையைத் தெளிவாக அறிந்தால்தான் அதனைத் தீர்க்கக்கூடிய வழிகளைக் கண்டறிய முடியும்.
* ஆய்வுக் கெடுத்துக் கொண்ட பிரச்சினையில் மாத்திரமே கவனத்தைச் செலுத்தும் ஆற்றல். அதாவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும் போது வேறு உப பிரச்சினைகள் தோற்றம் பெறக் கூடும் அவற்றுக்குப் பின்னால் சென்றால் நாம் நோக்கத்துக்கு அப்பால் சென்று விடுவோம் அதனால் ஆய்வுக்கெடுத்துக் கொண்ட பிரச்சினையில் மாத்திரமே கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.
* ஏற்கக் கூடிய கருதுகோள்களையும், முடிபுகளையும் எடுத்துக் கூறுவதற்கான ஆற்றல்.
* தேவையேற்படும் போது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் ஏற்கக்கூடிய கருதுகோள்களையும் கூறக் கூடிய ஆற்றல்.
* எடுத்துக் கூறிய முடிவுகளை நுணுக்கமாக ஆராய்வதற்கான ஆற்றல்.
* ஒரு பிரச்சினைக்குத் தீர்ப்பைக் கூறுவதற்கு உதவியாக இருந்த காரணிகள் அத் தீர்ப்புக்கு எவ்வளவு தூரம் பொருத்தமானவை என அறிவதற்குப் பல நியமங்களை மனதில் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றல்.
* தகுதியற்ற கருதுகோள்களை விலக்குவதற்கான ஆற்றல். அதாவது பிரச்சினைக்குத் தீர்வாக நாம் முன்வைத்த கருதுகோள் தவறானது எனத் தெரியவரும்போது அதனை நீக்குவதற்குத் தயங்குதல் கூடாது.
* உடனடியாகத் தீர்ப்பைக் கூறாமல் எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்னரே தீர்ப்புக் கூறும் உளப்பாங்கைக் கொண்டிருக்கும் ஆற்றல். அதாவது ஒரு கருதுகோளைப் பற்றிய தீர்ப்பினை முன்கூட்டியே கூறினால் அக் கருதுகோளைப் பாரபட்சமின்றி ஆராய முடியாது. அதனால் சகல ஆய்வுச் செயற்பாடுகளும் முடிவுற்ற பின்னரே தீர்ப்புக் கூறும் நடவடிக்கைகளில் இறங்குதல் வேண்டும்.
* முடிவுகள் தகுதியுள்ளனவா? என மறு பரிசீலனை செய்வதற்கான ஆற்றல். அதாவது நாம் முடிவைப் பெறுவதற்கு முயற்சி செய்த விடயங்களைப் பரிசீலனை செய்து எமது சிந்தனைகளில் ஏதாவது தவறுகள் விடப்பட்டுள்ளனவா? எனக் கண்டறிதல் வேண்டும்.
ஆய்வுச் சிந்தனையும் பிரச்சினை தீர்த்தலும்
ஒருவர் தான் பின்பற்றும் செயன்முறைகளினால் தனது இலக்கை அடைய முடியாமல் போனால் அது அவனுக்கு பிரச்சினையாகும். ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில் இரு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. புதுப் புதுப் பிரச்சினை நிலைகளை எதிர்நோக்கும் போது அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குப் புது வழிகளையும் முறைகளையும் வகுக்க வேண்டும்.
2. பிரச்சினைகளின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதாவது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கும் முயற்சியினால் தத்துவங்களையும் பொதுக் கோட்பாடுகளையும் மாணவர்கள் கண்டறிவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படும்.
பிரச்சினை தீர்க்கும் சில முறைகள்
• ஹேபார்ட் என்பவரின் கற்பித்தல் படிகள்
படி 1 ஆயத்தம் செய்தல்
இக் கட்டத்தில் மாணவனிடம் முதலில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஊக்கலை ஏற்படுத்த வேண்டும். பின் அப் பிரச்சினையைத் தெளிவாக இனங்காணவும் விளங்கவும் வழிகாட்ட வேண்டும். மாணவரின் பழைய அனுபவங்களை உதவியாகக் கொண்டு பிரச்சினையை நன்கு விளங்கச் செய்தல் வேண்டும்.
படி-2 எடுத்துக்கூறல்
இது விதி விளக்க முறையில் தரவுகளைச் சேகரிப்பதற்குச் சமமானதாகும். இதில் மாணவர்கள் கற்க வேண்டிய புது விடயங்களை (தரவுகள், சம்பவங்கள், உதாரணங்கள்)
வழங்குதல் வேண்டும். முதலாவது படியில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் நன்கு தூண்டப்பட்டிருந்தால் இக் கட்டத்தில் அளிக்கப்படும் புதிய தரவுகளையும் விளக்கங்களையும் நன்கு கிரகித்துக் கொள்வார்கள்.
படி-3 ஒப்பிடுதலும் பொதுமை காண்பதும்.
இதில் வழங்கப்பட்ட தரவுகளைப் பாகுபடுத்தி அவற்றுக்கிடையிலான தொடர்புகளைக் காட்டும் வகையில் ஒழுங்கமைத்தலாகும். இங்கு ஆசிரியர் செய்து காட்டலில் ஈடுபடுவார். மாணவர்கள் அதனை நன்கு அவதானித்து இடையிடையே வினாக்களைக் கேட்பர் இது விதி வருவித்தல் முறையின் 3ம் கட்டத்தை ஒத்ததாகும்.
ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதனால் பெற்ற அறிவையும் விளக்கத்தையும் வேறு ஒரு பிரச்சினை நிலையில் உபயோகித்து அதற்குத் தீர்வு காண உதவும்.
மொறிசனின் கற்பித்தல் வட்டமும் பிரச்சினை தீர்த்தலும்
மொறிசன் வெளிப்படுத்திய பிரச்சினை தீரத்தல் படிமுறைகள் ஹேபார்ட்டின் படிமுறைகளை ஒத்ததாகும். இவரும் விதி வருவித்தல் முறையை அடிப்படையாக வைத்தே விளக்கமளித்துள்ளார். ஆனால் ஹேபார்டுடன் ஒப்பிடும்போது சில வேறுபாடுகளையும் இவரது மாதிரியில் அவதானிக்க முடிகிறது. மொறிசன் 5 கட்டங்களைக் கொண்டுள்ளார்.
1வது கட்டம் – ஆராய்தல்
இதில் ஆசிரியர், மாணவர்கள் இதுவரை அறிந்த விடயங்களையும் அவர்களது கல்விப் பின்னணிகளையும் ஆராய்ந்தறிவார். கலந்துரையாடல்கள், வாய்மொழிப் பரீட்சைகள், எழுத்துப் பரீட்சைகள், போன்றவற்றால் ஆசிரியர் இவ் ஆய்வினை மேற்கொள்ள முடியும். இவ்வாறு ஆராய்வதால் முன்னர் செய்த செயற்பாட்டை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. அத்துடன் மாணவர்கள் கற்க வேண்டிய விடயத்திற்கு நேரடியாகவே செல்லக் கூடியதாகவும் இருக்கும்.
2வது கட்டம் – எடுத்துக் கூறல்
இப் படியில் ஆசிரியரால் ஒரு அலகின் முக்கிய கருத்துக்கள் எடுத்துக் காட்டப்படும். இதற்காக அவர் பல்வேறு கற்பித்தல் முறைகளைப் பிரயோகிப்பார். ஆனால் இதில் முழு விபரமும் கூறப்படாது. வழங்கப்படும் விபரங்கள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும். ஆசிரியரால் கருத்துக்கள் வழங்கப்பட்ட பின் அக் கருத்துக்களை அவர்கள் எந்தளவு தூரம் கிரகித்திருக்கிறார்கள் என்பதை ஒரு பரீட்சை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
3வது கட்டம் – தரவு திரட்டல்
இப் பருவத்தில் மாணவர் தாம் அறிய வேண்டிய விளக்கங்களுக்கான மேலதிக விபரங்களை அறிவதில் ஈடுபடுவர். இச் சந்தர்ப்பத்தில் ஆசிரியர் மாணவர்களின் தேடல்களுக்காக நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அறிக்கைகளை வழங்குதல் வேண்டும். இக் கட்டம் விதி வருவித்தல் முறையின் 2ம், 3ம் படிகளை ஒத்ததாகவுள்ளது.
4வது கட்டம் – முடிவை முன்வைத்தல்
இக் கட்டம் ஏற்கனவேயுள்ள 3 கட்டங்களிலும் எடுக்கப்பட்ட செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினையை விளக்குவதற்குத் தேவையான ஒரு தர்க்க ரீதியான முடிவைக் கூறுவதாகும். இம் முடிவிலிருந்து மாணவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை எடுக்கத் தீர்மானித்துள்ளார்கள் என்பதை அறிய முடியும். இக் கட்டம் விதி வருவித்தல் முறையின் 4ம் படியை ஒத்ததாகவுள்ளது.
5வது கட்டம் – ஒழுங்கமைத்தல்
இக் கட்டம் ஒருவனது சிந்தனையில் இறுதியான தெளிவையும் உறுதிப்பாட்டையும் தரும் ஆனால் இக் கட்டம் பிரச்சினைக்கான தீர்வுக்குப் பயனளிக்காது. இக் கட்டத்தில் தனது ஆய்வின் முடிவை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் போது பிரச்சினைகளுக்குரிய விளக்கம் நன்கு மனதில் பதியக்கூடியதாக இருக்கும். இக் கட்டத்தில் மாணவர்களால் விளக்கங்கள் முன் வைக்கப்பட்ட பின்னர் கலந்துரையாடல் இடம்பெறும். இக் கலந்துரையாடலின் மூலம் முடிவுகள் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தப்படும்.
மொறிசனின் கற்பித்தல் வட்டத்தில் ஆசிரியரும் மாணவர்களும் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் ஒரு ஆலோசகராகச் செயற்பட்டால் போதுமானது என்று ஹேபார்ட் குறிபிடுவதும் இங்கு நோக்கத்தக்கது.
இக் கட்டத்தில் நம்பிக்கை எவ்வளவு சரியானது அல்லது பிழையானது என ஆராயப்படுகின்றது. இது சிந்தனையின் உயர்ந்த நிலையாகும். ஏதாவதொரு நம்பிக்கையை அல்லது கருத்தை கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அந் நம்பிக்கைகள் சரியெனக் காணப்படின் ஏற்கப்படுகின்றன. பிழையெனக் காணப்படின் அது நிராகரிக்கப்படும். இதனால் இதுவரை காலமுமிருந்து வந்த நம்பிக்கைகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அதனைச் செய்வதே ஆய்வுச் சிந்தனையாகும். என டூயி குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினை தீர்க்கும் முறையில் ஆசிரியரின் வகிபாகம்
வலன்டைஸ் டேவிஸ் (Valentine Davis) பிரச்சினை தீர்த்தல் தொடர்பாக முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளதாக பேராசிரியர் பாஸர் (Prof.Pasher) குறிப்பிட்டுள்ளார். அவையாவன
1. மாணவர்களை, பிரச்சினையைத் தெளிவாக விளக்கச் செய்தல் வேண்டும்.
2. பிரச்சினையை மனதினுள் பதிக்கச் செய்தல் வேண்டும்.
3. மாணவர்களை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு ஆலோசனைகளை அவர்களுக்கு
வழங்குதல் வேண்டும்.
4. பிரச்சினைகளை முன்வைப்பதற்கான முன் வரைபுகளை (Out line) வழங்குதல் வேண்டும். 5. வரைபுகளையும், படங்களையும் பயன்படுத்துதல் வேண்டும்.
பிரச்சினை தீர்க்கும் முறையிலுள்ள நன்மைகள்
1. தூண்டல் சிந்தனைக்கு உதவும்.
2. காரணங் கூறும் ஆற்றலை விருத்தி செய்யும்.
3. மாணவர்களின் அறிவு விருத்திக்கு உதவும்.
4. மாணவர்களின் கற்கும் ஆற்றலை விருத்தி செய்ய உதவும்.
5. சமூகச் செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கான ஆர்வம் ஏற்படும்.
6. சுய ஊக்கலுடன் மாணவர்கள் கற்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படும்
7. மாணவர்களின் வெளிப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்வதற்குப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் உதவும்.
8. மாணவர்களின் விபரங்களை ஆசிரியர் அறிந்து கொள்ள இம்முறை பெரிதும் உதவும். எந்த மாணவன் ஆற்றலுள்ளவனாக இருக்கிறான், எந்த மாணவன் வெட்கப்படுபவனாக அல்லது கூச்ச சுபாவமுடையவனாக இருக்கிறான் என்பது போன்ற விபரங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
9. கற்றல் மகிழ்ச்சிகரமாக அமைய இம்முறை உதவும்.
10. புதிய சூழ்நிலைக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இம் முறை உதவும்.
11. ஒரு கருத்தை அல்லது அபிப்பிராயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள இம்முறை உதவும்.
குறைபாடுகள்
• பிரச்சினை தீர்த்தல் முறை பெருமளவு உளச் செயற்பாடாகவே அமையும். இதில் குறைந்தளவே உடல் செயற்பாடு காணப்படும்.
• ஆரம்பப் பிரிவு மாணவர்களால் இம் முறையினூடாகத் தகவல் சேகரிக்கவோ கலந்துரையாடலில் ஈடுபடவோ இயலாமல் இருக்கும்.
• பொருத்தமான நூல்கள், உபகரணங்கள் இல்லாதவிடத்து இம்முறையைச் செயற்படுத்த முடியாது.
• இம் முறையைப் பயன்படுத்தவதற்கு ஆசிரியருக்கு அதிகளவு நேரம் தேவைப்படும் இதனால் தனது பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கோ மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்துவதற்கோ ஆசிரியருக்கு இயலாமல் இருக்கும்.
• நன்கு பயிற்சியும், பரிச்சயமும் உள்ள ஆசிரியர் இல்லாவிட்டால் இம் முறையைச் செயற்படுத்துவது சிரமமானதாக இருக்கும்.
• மாணவர்கள் உணர்வு பூர்வமான அல்லது மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளைத் தெரிவு செய்யும் போது அவை அவர்களைச் சில வேளை உளரீதியாகப் பாதிக்கக் கூடியதாக அமையலாம்.
-காண்பியம்-