41 வருடங்களின் பின்னர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியை தோற்றகடித்து கொழும்பு ரோயல் கல்லூரி காற்பந்துச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
18 வயதுக்குட்பட்ட பாடசாலை காற்பந்துத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கும் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் இடையிலான போட்டி அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் 4-3 என்ற அடிப்படையில் பெனால்டி முறையில் கொழும்பு ரோயல் கல்லூரி வெற்றியீட்டியது.
போட்டியின் குறிப்பிட்ட காலம் முடியும் வரை இரு அணிகளும் 1 -1 என்ற அடிப்படையில் கோல்களைப் பெற்றிருந்தன.
போட்டியின் முதல் பாகத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களும் பெற்றிருக்கவில்லை. போட்டியின் 22 நிமிடத்தில் ஸாஹிராக் கல்லூரியின் மொஹமட் ஸாஜித் போட்ட கோல் ‘ஓப் சைட்’ ஆக அடையாளப்படுத்தப்பட்டது.
போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் ஸாஹிராவின் ஸாஜித் மீண்டும் ஒரு கோலை போட்டதும் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. எனினும் 66 ஆவது நிமிடத்தில் ரோயல் கல்லூரியின் உஸ்மான் அஹமட் போட்ட கோலின் காரணமாக போட்டி சமநிலை ஆனது.
இதன் பிறகு வழங்கப்பட்ட பெனால்டியில் 4-3 என்ற அடிப்படையில் ரோயல் கல்லூரி வெற்றி பெற்றது.
ஸாஹிராவின் ஹஸன் ராஸா, ஸாஜித் மற்றும் ஸாஹில் அஹமட் ஆகியோரும் ரோயல் கல்லூரியின் கவிஷ்க, டயஸ், ஆசாத் மற்றும் பிரபுத்த ஆகியோரும் பெனல்டியை வெற்றிவெற்றியாக்கினர்.
கொழும்பு ஸாஹிராவின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ரூமி ரோயல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்டு சுமார் 12 மாதங்களில் ரோயல் கல்லூரி, ஸாஹிராவையே வெற்றி கொண்டு கொண்டுள்ளமை கவனத்திற்குரியது.
41 வருடங்களின் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்ட இவ்வெற்றிக்கு பங்களித்த பயிற்றுவிப்பாளர் ரூமி கொழும்பு ஸாஹிராவின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 13 ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரியை எதிர்த்து கொழும்பு புனித ஜோஸப் கல்லூரி ஆடவுள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் கொழும்பு புனித ஜோஸப் கல்லூரி கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தை 4-0 என்ற அடிப்படையில் தோற்கடித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.