அதிபர்களின், கல்வி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஆசிரியர்கள் பாடசாலை செல்லத் தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வியின் பாதிப்புக்கள் தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அரசாங்கத்திற்கு கல்வி அத்தியவசியத் தேவையாக இல்லை. அரசாங்கம் கல்வி தொடர்பாக எந்த உருப்படியான எந்தத் தீர்மானமும் எடுக்க வில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
மாணவர்களின் கல்வியை வழங்க அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதன் காரணமாக, ஆசிரியர்களும் மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பாடசாலைகள் அனைத்தையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக பொதுத் தீர்மானத்தை அரசாங்கத்தினால் வெளியிடவில்லை. முன்னுக்கு பின் முரணான தீர்மானங்களை அறிவிக்கின்றது. இதன் காரணமாக சில மாகாண அதிகாரிகள், அதிபர்கள் கல்வி அமைச்சின் தீர்மானத்தை மீறி செயற்படுகின்றனர்.
பாடசாலை வரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையில் பதிய வேண்டாமன்று அறிவித்திருப்பினும் அதிபர்கள் சிலர் ஆசிரியர்களின் விடுமுறையை தனிப்பட்ட விடுமுறையாகப் பதிவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.