கல்வி அமைச்சின் தீர்மானத்தின் ஒரு பகுதியை ஏற்று நடாத்துவற்கு கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு மாத்திரம் பாடசாலைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom ஊடாக இடம்பெற்ற கூட்டத்தில் ஆளுநர் இந்த தீர்மானம் குறித்து அறிவித்துள்ளார்.
செவ்வாய், புதன், வியாழக்கிழமை நாட்களிலே ஆசிரியர்களையும் மாணவர்களையும் முழுமையாக வரவழைத்து, மாணவர்களுக்கு முழு நேரசூசி வழங்கி, முழு அளவிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார் .
முடியுமானால் மூன்று மாவட்ட அரசாங்க அதிபர் உடன் பேசி எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் யூலை மாதம் திங்கட்கிழமை 4 ஆம் திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன் பின்பு எவ்வாறு பாடசாலையை நடத்துவது என்று பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதே வேளை, கல்வி அமைச்சு நகர்ப்புறப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என்றும், கிராமப் புறப் பாடசாலைகளை நடாத்துவது சிரமம் இல்லை என்றிருப்பின் மூன்று நாட்கள் பாடசாலைகளை நடாத்துமாறு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் தீவிரம் காரணமாக, ஜுலை 10 வரை அத்தியவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் எனவும், நகர்ப்புறப் பாடசாலைகள் ஜுலை 10 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தீர்மானிக்கப்பட்டு்ளதாக பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் தீர்மானத்தை பல ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பலமாக எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தன. இலங்கை ஆசிரியர் சங்கம் , இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்கள் சங்கம் என்பன இந்த எதிர்ப்புக்களை தீவிரமாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.