நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் முடங்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நியூஸ்நைட் நிகழ்ச்சிக்கே இக்கருத்தை வீரசிங்க கூறியுள்ளார்.
அத்தியாவசியமான பெற்றோலியத்துக்குச் செலுத்துவதற்கு போதுமான வெளிநாட்டு நாணயமாற்றைக் கண்டறிவதில் நிச்சயமில்லாத தன்மை நிலவுவதாக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மீட்புப் பொதியொன்றைப் பெறுவதற்கான முன்னேற்றம், நிலையான அரசியல் நிர்வாகமொன்றைக் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தங்களால் இம்மாத இறுதி வரையில் குறைந்தது மூன்று தொகுதி டீசல்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு தொகுதி பெற்றோலுக்கும் நிதியளிக்க முடிந்ததாகவும், அதற்கப்பால் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பெற்றோலியத்துக்கு தேவையான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தை தங்களால் வழங்க முடியுமா என நிச்சயமில்லாத தன்மை காணப்படுவதாக வீரசிங்க கூறியுள்ளார்.
அதானேலேயே தனக்கு பிரதமொருவர், ஜனாதிபதி, முடிவுகளை எடுக்கக் கூடிய அமைச்சரவை தேவைப்படுவதாகவும், அதில்லாமல் அனைத்து மக்களும் பாதிக்கப்படப் போவதாக வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான அரசாங்கமொன்று அமையுமானால் நெருக்கடியிலிருந்து மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இலங்கை வெளிவருமென வீரசிங்க தெரிவித்துள்ளார்.