தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த ஆலோசனைக் குழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, எரிபொருள் கொள்வனவின் போது நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள் National Fuel Pass – QR Code வேலைத்திட்டம் மூலம் அடுத்த மாதத்திலிருந்து இலகுவாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், QR Code தொழிநுட்ப முறையானது தற்போது மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இதனால் இதுவரை 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றார்.
இதற்கமைய இந்த முறையை செயற்படுத்திய 245 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 70,123 வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொண்டது என்றார்.
இந்த QR Code முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மேலதிகமாக தனியார் பஸ்கள், பாடசாலை சேவைகள், அம்பியூலன்ஸ்கள் என்பவற்றுக்கு 107 டிப்போக்கள் மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து ஓட்டோக்கள் மற்றும் விவசாய கைத்தொழில் இயந்திரங்களை அந்த மாகாணங்களின் பொலிஸ் மற்றும் பிராந்திய செயலாளர்கள் மூலம் பதிவு செய்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் பெற்றோலிய அமைச்சுக்கு தரவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு பெற்றோலிய அமைச்சர் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் அந்நிய செலாவணி பிரச்சனைகள் இருந்தாலும் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் எனவே எரிபொருளை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.