சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் 173பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று(10) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்ற 105பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
அத்துடன் 2020-.08-.28ஆம் திகதி கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய அதில் சித்தி பெற்ற சிங்கள மொழி மூல பட்டதாரிகள் 39பேர் கணித பாடத்திற்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் ஆங்கில பாடம் மற்றும் ஏனைய பாடங்களுக்கான பட்டதாரிகள் உட்பட மொத்தம் 173பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,
நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தங்களின் நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பாடசாலையில் கட்டாயம் 5வருடம் சேவையாற்ற வேண்டும்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் ஆசிரியர் குறைப்பாடுகள் காணப்படும் பாடசாலைகளுக்கே கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன உட்பட கல்வி அதிகாரிகள் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.