அரச வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதங்களை அதிகரிப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும் கடிதத்தில் உள்ளடங்கிய விடயங்களாக,
01. அரச வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு விதமான கடன் திட்டங்களில் இதுவரை பெற்றிருக்கும் கடன்களின் மாதாந்த வட்டி விகிதத்தில் எதிர்பாராத அதிகரிப்பு தொடர்பாக பரவி வரும் செய்திகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.
02. இத்தகவல் தொடர்பாக கடனை பெற்றுக் கொண்டவர்கள் வங்கி முகாமையாளரை அணுகியபோது வட்டி விகிதம் அதிகரிக்க கூடும் எனவும் மீள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் தொடர்பாகவும் தகவல்கள் வழங்கியுள்ளனர்.
03. விசேடமாக அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு கடன்களை வழங்குவதில் முறையான நிபந்தனைகள் காணப்படுவதோடு சம்பளத்தின் அடிப்படையில் பெறக்கூடிய கடன் எல்லைகளில் வரையறைகள் காணப்பட வேண்டும் என்பது தொடர்பாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
04. இருந்தபோதிலும், நாட்டில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், வட்டி விகிதங்களை அதிகரிப்பது பாரிய சுமையாக அமைவதோடு பல சிக்கலான நிலைமைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். அத்தோடு கடனை மீள் செலுத்த தவறும் பட்சத்தில் சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றோம்.
எனவே இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி வட்டி விகித திருத்தம் தொடர்பிலான தெளிவான அறிக்கையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாட்டில் நிலவும் இத்தகைய அசாதாரண சூழ்நிலைக்கு எவ்விதத்திலும் கடனாளிகள் பொறுப்பானவர்கள் அல்ல என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கடனாளிகள் மீது இத்தகைய சுமைகளை சுமத்த முற்படின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதோடு கடிதத்தின் பிரதிகளை மத்திய வங்கியின் ஆளுநருக்கு மற்றும் அனைத்து வங்கிகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்