எதிர்வரும் வாரங்களில் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட்டமை மற்றும் விசேட பாடசாலை பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமையினால் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பில் 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய கல்வி அமைச்சர், இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் 15 ஆம் திகதி பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக நடைமுறைப் பரீட்சைகள் குறித்த திகதியில் நடத்தப்படவில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இரண்டு வருடங்களில் 400 நாட்களும் பாடசாலைகள் திட்டமிடப்பட்டன. இந்த வருடம் மேல்மாகாணத்திற்கு வெளியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக 309 நாட்களும் மேல்மாகாண மாணவர்களுக்கு 245 நாட்களும் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.