பெப்ரவரி 15 இல் திறக்கும் தீர்மானம் மாற்றம்
– தற்போது திறக்கப்பட்டுள்ள பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்
– மாணவர், ஆசிரியர் வருகை சுகாதார பாதுகாப்பின் நம்பிக்கையை காட்டுகிறது
மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்க மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது மூடப்பட்டுள்ள மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 01 முதல் அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்திலுள்ள 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர, நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1,576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் கடந்த ஜனவரி 25ஆம் திகதி முதல் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்திலுள்ள 412 பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்திற்காக அனுப்பி வைத்துள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று (09) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,
“இது தொடர்பாக பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். பாடசாலைக்கு பாடசாலை நிலைமை மாறுபடுவதால் பொதுவாக கல்வி அமைச்சு முடிவெடுப்பது பொருத்தமானதல்ல என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி பாடசாலைகளின் குழுக்களின் மூலம் அதிபர்கள் உள்ளிட்ட குழுக்களின் கருத்துக்களைப் பெற்றோம். அந்தக் குழுக்களின் முடிவின்படி, மேல் மாகாணத்தில் பெரும்பான்மையான பாடசாலைளை பெப்ரவரி 15 ஆம் திகதி திறக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். இருப்பினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு குறித்த பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் எனும் நிலைப்பாட்டில் நாம் இருந்தோம். இன்று காலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையைப் பெற்றோம். அதன்படி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் மார்ச் 01 முதல் 11 வரை நடைபெறுவதால், மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பாடசாலைளையும் பரீட்சைகள் முடிவடைந்த உடனேயே, மார்ச் 15 ஆம் திகதியே ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன எமக்கு அறிவித்திருந்தார். பாடசாலைள் ஆரம்பிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க நாங்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம். அவ்வாறான முடிவுகளை தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு எடுப்பதன் மூலம் பாடசாலைளில் சுகாதார பாதுகாப்பான சூழலை உருவாக்க முடிந்தது.” என்றார்.
மேல் மாகாணத்தில் 11 கல்வி வலயங்கள் மற்றும் 38 பிரிவுகள் உள்ளதோடு, இவை அனைவற்றினதும் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவருந்தன. அதிபர்கள் மற்றும் பாடசாலை குழுக்கள் இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட்டனர். இதன் பலனாக பாடசாலைகளை மிக விரைவாக ஆரம்பிப்பதற்கான ஒரு சூழல் மற்றும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைளும் மார்ச் 15 முதல் அனைத்து தரங்களுக்கும் தொடங்க வேண்டுமென்பது, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையாக காணப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டில் தரம் 1 இல் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான பாடசாலைகளும் மார்ச் 15 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த முடிவு மேல் மாகாணத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கும் செல்லுபடியாகும் என்பதோடு, தற்போது இயங்கி வருகின்ற, நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இது பொருந்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மேல் மாகாணத்தில் தங்களது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள தரம் 11 தரத்திலுள்ள மாணவர்கள் வழக்கம் போல் அந்நடவடிக்கைகளைத் தொடருவார்கள் என்பதோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைளில் மாணவர்களின் வருகை வீதம் 72% ஆகவும், ஆசிரியர்களின் வருகை 88% ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், பாடசாலைள் ஆரோக்கியமான முறையில் காணப்படுகின்றன என்பற்கான, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துவதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.