ஹோமாகம பாடசாலை நிகழ்வில் பிரதமர் Zoom ஊடாக உரை
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பை பெற்றோர் மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம, மஹிந்த ராஜபக் ஷ வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் Zoom தொழில்நுட்பம் மூலம் தொடர்புகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வில் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்:- கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மழு உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எவர் எதை கூறினாலும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தாமதிக்க அல்லது அதில் பின்னடைவுகளை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளில் பிள்ளைகளின் வரவு குறைந்து காணப்படுவதாக அறியமுடிகிறது. இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு பாரிய பொறுப்புள்ளது. அதன்படி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் பிள்ளைகள் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழல் இயல்பாக உருவாக்கப்படுவது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)