இவ்வருட உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவைகள் தோற்றவுள்ள மாணவர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
பரீட்சை திகதியில் மாற்றம் ஏற்பட்டால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ. த சாதாரண தரப் பரீட்சையை மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நவம்பரில் திட்டமிடப்பட்ட பரீட்சை டிசம்பரிற்கு பிற்போடப்பட்டது. இதனை மீண்டும் பிற்போடும் போது பாடசாலை நாட்காட்டியுடன் முரண்படும். பாடசாலைகள் மூடப்படவேண்டும். அவ்வாறான பிரச்சினை எழும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல பிரச்சினைகள் எழுவதன் காரணமாக இது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
எனினும் நான் இதனை பரீட்சைத்திணைக்களத்திற்கு முன்வைக்கிறேன். அவர்கள் இதுதொடர்பாக தீர்மானிப்பார்கள் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இன்று பாராளுன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.