விசேட தேவையுடைய சகோதர சகோதரிகளின் எதிர்காலம் போன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாளைய தினத்தை உருவாக்குவோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஆண்டுதோறும் டிசம்பர் 03ஆம் திகதி உலகின் பல நாடுகள் விசேட தேவையுடையோருக்கான தினத்தை கொண்டாடி வருகின்றது. இலங்கையும் தொடர்ச்சியாக அதில் பங்குபற்றி வருவதுடன், அது ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணை பெற்ற சர்வதேச நிகழ்வாகும்.
விசேட தேவையுடையோர் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொள்ளல், விசேட தேவையுடையோரின் பெருமை, உரிமைகள், நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அனுசரணை வழங்குவது என்பன இத்தினத்தை கொண்டாடுவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட தேவையற்ற சாதாரண குடிமகன் போன்று, விசேட தேவையுடையவர்களும் சம உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அனுபவித்து சமூகத்தில் வாழ முடியும். தற்போது உலகளாவிய ரீதியில் முகங்கொடுத்துள்ள கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும், விசேட தேவையுடையோரின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
உலகின் விசேட தேவையுடைய ஒரு பில்லியன் மக்கள் தொகையில் 80 வீதமானோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதில் 60 வயதிற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோரினதும் எண்ணிக்கை 46
சதவீதமாகும் என யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியுளளது.
விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகரித்தல், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி செயற்பாடுகளை சீர்குலைக்கும் செயல் என்றபோதிலும், அதனை நாம் நேர்மறையான வழியில் நாட்டின் அபிவிருத்திக்காக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய விசேட நிர்மாணத் திறன் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை மையமாகக் கொண்டு அபிவிருத்தியின் புதிய பாதையில் இலங்கை நுழைந்துள்ள ஒரு சூழ்நிலையில், விசேட தேவையுடைய சகோதர சகோதரிகளின் எதிர்காலம் போன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாளைய தினத்தை உருவாக்குவோம் என தெரிவிக்க விரும்புகிறேன்.
.