அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்
60,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்தின் கீழ் 49,478 பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஏனையோருக்கும் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 2019 நல்லாட்சி அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட எனினும் பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்களில் குறைபாடுகள் நிலவிய முதற்கட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து மேன்முறையீட்டு கடிதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அதற்கான பரிசீலனை நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களுக்கும் உரிய காலத்தில் இதன் பிரதிபலனை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்துடன் சில சலுகைகளை அவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
அரசாங்கத்தில் 60,000 தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின்கீழ் 49 ஆயிரத்து 478 பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய 1175 பட்டதாரிகள் இதுவரை நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சம்பந்தப்பட்ட பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வில்லை. சுகாதாரத் துறையினரின் பரிந்துரைக்கு அமைய அவர்களுக்கான பயிற்சிகளை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் – தினகரன்