வெற்று பேனாக்கள் மற்றும் பற்தூரிகைகளை சேகரிப்பதற்கு பாடசாலை மற்றும் அரச தனியார் நிறுவனங்களை மையப்படுத்தி புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மை தீர்ந்த பேனை மற்றும் பற்தூரிகைகள் ஆகியவை பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த சுற்றுச்சூழல் அபாயத்தை அகற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஒரு திட்டத்தை தயார் செய்துள்ளார்.
சராசரியாக, ஒரு நாளைக்கு மட்டும் பாடசாலைக் கட்டமைப்பில் அகற்றப்படும் வெற்று கார்பன் பேனாக்களின் அளவு சுமார் 80 கிலோ ஆகும். அதன்படி, ஆண்டுக்கு பாடசாலை முறைமையில் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும் வெற்று கார்பன் பேனா குழாய்களின் அளவு 29,000 கிலோவை தாண்டியுள்ளது. இருப்பினும், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளால் தினமும் வெளியேற்றப்படும் கார்பன் டை ஒக்சைட் அளவு குறித்து இதில் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அவ்வாறே பயன்படுத்தப்பட்ட பல் துலக்கிளை சுற்றுச் சூழலுக்கு வீசுவதும் அதிகரித்து வருகிறது.
எனினும், வெற்றுப் பேனை மற்றும் பல்துலக்கி உக்கிப் போவதற்கு 100-150 வருடங்கள் தேவைப்படுவதாகவும் அது வரை அவை மண்வளத்தை பெரிதும் பாதிப்புச் செய்வதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின் படி, வெற்றுப் பேனா மற்றும் பயன்படுத்தப்பட்ட பற்தூரிகை என்பவற்றை சேகரிப்பதற்கு தனியான பெட்டி ஒன்றை பாடசாலைகளில் பொருத்தி வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பெட்டிகளில் 2OOO பேனாக்கள் மற்றும் 500 பல் தூரிகைகள் இட முடியும்.
இந்த பெட்டி நிரம்பியதும் அது தொடர்பாக அறிவிக்கப்படும் போது அவற்றை வொக்ஸ் இண்டஸ்ட்ரி ப்லாஸ்டிக் நிறுவனம் கொள்வனவு செய்யும்.
மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்த சிறப்புத் திட்டத்திற்கு நாமும் வளர்ந்து நாட்டை வளர்ப்போம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்புத் திட்டம் 26 ஆம் திகதி ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பபட்டு வேலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுயுள்ளார்.
அப்புறப்படுத்தப்பட்டும் பேனைகள் மற்றும் பற்தூரிககைளை சேமித்து மறுசுழற்சி செய்யும் திட்டம் நாட்டில் இதுவே முதல் முறையாக அமுல்படுத்தப்படுகிறது. எனவே, அனைத்து பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் அமைச்சரவைத் தீர்மானத்தைப் பெறுவதற்கு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.