மரபணு திருத்தத்திற்கான கருவிகளை மேம்படுத்தியதற்காக இரு பெண் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசு ஒன்றை வெல்லும் முதல் இரு பெண்களாக பிரான்சின் எம்மானுவெல்லே கார்பென்டியர் மற்றும் அமெரிக்காவின் ஜெனிபர் டவுட்னா இடம்பெற்றுள்ளனர். மரபணு திருத்த தொழில்நுட்பத்தில் இவர்களின் பங்களிப்புக்காகவே இந்த விருதை வென்றுள்ளனர்.
மரபணு செல்களை துண்டித்து சேர்க்கும் ஆய்வில், இவ்விரு விஞ்ஞானிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் இனி அளப்பறிய முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பரம்பரையாக வரும் நோய்களைக் குணப்படுத்துதல், தடுத்தல் போன்றவற்றில் இந்த ஆய்வு பலன்களை கொடுக்கக்கூடும்.
“மரபணு திருத்தம் வாழ்க்கைக்கான விஞ்ஞானத்தை ஒரு புதிய சகாப்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் பல வழிகளில் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை தருகிறது” என்று நேற்று இந்த பரிசை அறிவித்த நோபல் குழு தெரிவித்துள்ளது.
மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏவை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு பதக்கமும், சான்றும் 11 இலட்சம் அமெரிக்க டொலர்களும் சம அளவில் பிரித்துத் தரப்படும்.
இரசாயனவியலில் பெண்களுக்கு இதுவரை 5 நோபல் பரிசுகளே வழங்கப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞானி மேரி கியூரி முதன்முதலாக இரசாயனவியலில் பெண்களுக்கான நோபல் பரிசை வென்றார். இருமுறை நோபல் பரிசையும் மேரி பெற்றுள்ளார். அதில் ஒன்று பெளதீகவியலுக்கு பெற்றதாகும்.
இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கும், நாளை அமைதிக்கான நோபல் பரிசும், எதிர்வரும் 10ஆம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது.
Thinakaran