அமைய லீவினை(Casual Leave) தவணை தொடக்கத்திலும், முடிவிலும் எடுக்க முடியுமா?
இது எனது உட்பெட்டிக்கு வந்த கேள்வி இதற்கு நான் தேடித் தெளிவடைந்த தமிழ், ஆங்கில, சிங்கள மொழிமூலமாக சுற்றுநிருபங்களிலிருந்ததும், தாபன விதிக்கோவையிலிருந்தும் ஒரு பதிலை வழங்குகிறேன்.
தபான விதிக்கோவையின் அத்தியாயம் XII (5.3) பகுதியில் குறிப்பிடப்படுகின்ற விடயம் ” தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் தவிர ஓய்வுவிடுமுறைக்கு முன்னரோ பின்னரோ அமைய விடுமுறையினை அனுமதிக்க முடியாது.
மேலே கூறப்பட்ட விடயமானது ஓய்வு விடுமுறைக்கு முன்னரோ பின்னரோ அமைய விமுறையை அனுமதிக்க முடியாது என்பதை மட்டும் சொல்லவில்லை. மாறாக தவிர்க்கப்படமுடியாத காரணங்களினால் அவ்வாறு அனுமதிக்கப்படமுடியும். என்பதையுமே கூறிநிற்கின்றது. அந்தவகையில் தவிர்க்கப்பட முடியாத காரணங்களாக சிலவற்றைக் கூறுகிறேன்.
1. உறவினரின் மரணம்
2. உறவினரின் சுகவீனம்
3. நீதிமன்ற வழக்குகள்
4. யுத்தம் அல்லது போராட்டங்கள்
5. கடையடைப்பு அல்லது ஹர்த்தால்
6. இயற்கை அனர்த்தம்
7. போக்குவரத்தில் வாகனம் பழுதடைதல்
8. விபத்து ஏற்படல்
இவ்வாறு சில விடயங்களைக் கூறிக்கொண்டு போகலாம். இந்த நிலைமைகளின்போது ஒரு அரச அலுவலர் அமைய விடுமுறையினை அவசர நிலைமைகளின்போது லீவினை அறிவித்தல் என்ற ஏற்பாட்டிற்கமைவாக பெற்றுக்கொள்ள முடியும்.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருகிறேன். இங்கு சர்ச்சையிலுள்ள சில விடயங்களில் ஒரு ஆசிரியருக்கு ஓய்வு விமுறை என்பது யாது? இதுதான் சர்ச்சையான விடயம்.
பலர் பாடசாலை தவணை விடுமுறைதான் ஓய்வு விடுமுறை எனக் கூறுகின்றர். ஆனால் அது உண்மையில் ஓய்வு விமுறை இல்லை. ஓய்வு விடுமுறையை ஏனைய அரச அலுவலர்கள் அனுபவிப்பது போன்று ஆசிரியர்கள் அனுபவிக்கமுடியாது என்பதற்காக காட்டப்படுகின்ற காரணமாக அதாவது தவணை விடுமுறைகள் இருப்பதனால் ஆசிரியர்களுக்கு ஓய்வு விடுமுறை இல்லை என்றுதான் கூறப்படுகின்றது.
ஏனெனில் தவணை விடுமுறைகள் ஆசிரியர்களுக்கில்லை. மாணவர்களுக்குத்தான் என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறாத காரணத்தினால் ஆசிரியர்களுக்கு அதனை விடுமுறையாக அனுபவிக்க முடிகின்றது.
எனவே ஆசிரியர்கள் தவணை தொடங்கும்போது அல்லது தவணை முடிவடையும்போது தவிர்க்கப்படமுடியாத சந்தர்ப்பங்களில் அமைய விடுமுறையினை அவசர நிலைமைகளில் லீவினை அறிவித்தல் என்ற 24/2013 என்ற பொ.நி. சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதியுடன் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதேவேளை பொ.நி. சுற்றுநிருபம் 24/2023 இன் அடிப்படையில் வருடத்தின் முதல்வேளைநாளில் ( first working day of the calendar year) அமைய விடுமுறையினை பெறமுடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், முந்தைய வருடத்தின் பயன்படுத்தப்படாத ஓய்வு லீவுகள் இருப்பின் அனுமதிக்கலாம் என அச்சுற்றுநிருபத்தின் திருத்தம் குறிப்பிடுகின்றது.
ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் வருடத்தின் முதல் வேலைநாளில் (தவணை முதல்நாள் அல்ல) ஓய்வு லீவுகள் இல்லாத காரணத்தினால் அமைய லீவு பெறக்கூடிய சந்தர்ப்பம் இல்லை. இருந்தபோதிலும் அவசர நிலைமைகள் காணப்படும்போது இந்த நாளிலும் அமைய லீவினைப் பெறலாம்.
மேலதிகமாக ஏதாவது விளக்கம் இருக்குமானால் தமிழ், சிங்கள, ஆங்கில சுற்றுநிருபங்களையும் வாசித்து தெளிவுபடுத்தல்களை இங்கே பதிவிடலாம்.
லீவு என்பது உரிமையல்ல. சலுகை என்பதுடன், திணைக்களத் தலைவரால் அனுமதிக்கப்பட்டால் மாத்திரமே உரிய விமுறையயாகக் கருதப்படும் என்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும்.
– ஓய்வுநிலை அதிபர் இனியவன்.