வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டமும் (Enhanced Programme for School Improvement – EPSI) அதனுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகளும் அதற்கான சில தீர்வுகளும்
A.M.Mahir, LLB, MDE , SLAuS
முன்னைய கட்டுரைகள் பாடசாலை மதிப்பீட்டுச் செயன்முறையும் சமகாலப் பிரச்சினைகளும் பாடசாலையில் தாக்கம் செலுத்தும் ஏனைய குழுக்கள் பாடசாலையின் உள்ளக் குழுக்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் தொடர்பான பிரச்சினைகளும் தீர்வுகளும் DOWNLOAD -வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டம்
பாடசாலைகள் சுயாதீன முகாமைத்துவ அலகொன்றாக செயற்பட வேண்டுமென, தேசிய கல்வி ஆணைக்குழுவானது காலத்திற்குக் காலம் தனது அறிக்கைகளில் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றது. இதற்கமைய பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பின்வரும் எண்ணக்கருக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
1998 – பாடசாலை முகாமைத்துவத் திட்டம் (Programme for School Managment – PSM)
2008 – பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் (Programme for School Improvement – PSI )
2018 – வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் (Enhanced Programme for School Improvement – EPSI)
- உலக வங்கியின் அனுசரைனையுடன் கல்வித்துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டத்தின் (Education Sector Development Framework & Programme – ESDFP) கீழ் பாடசாலைத் தொகுதியினுள் 35/2008 ஆம் இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தினூடாக PSI திட்டம் அமுல்படுத்தப்பட்டு 07/2013 ஆம் இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தின் மூலம் வலுவூட்டப் பட்டது. (தற்போது 07/2013 ஆம் இலக்க சுற்றுநிருபம் ரத்துச்செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக 26/2018 மற்றும் 19/2019 ஆம் இலக்க சுற்றுநிருபங்கள் அமுலில் உள்ளது.)
- பத்தாண்டுகளாக நடைமுறையிலிருந்த PSI திட்டத்தை மேலும் வலுவூட்டுவதற்காக பொதுக் கல்வி மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் (2018-2025) EPSI அறிமுகப்படுத்தப்பட்டது.
EPSI இன் பாடசாலை முகாமையினை முறைமையாக வலுப்படுத்தும் அமுலாக்கல் செயற்பாடுகள்
- பாடசாலை செயற்பாடுகளில் உள்ளக நெகிழ்வினை உருவாக்குதல்.
- அதன் மூலம் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பினை அபிவிருத்தி செய்தல்.
- அதன் மூலம் பாடசாலையின் இலக்கினை அடைந்துகொள்ளும் பொருட்டு சமூக ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்தல்.
- அதற்காக மாணவர்களின் மென்திறன்களை விருத்தி செய்தல்.
- அதற்காக பாடசாலைக் கல்வியின் பண்புத்தர மேம்பாட்டினை ஏற்படுத்துதல். (பிரதானமானது)
- இவற்றிற்காக பாடசாலை முகாமையினை வலுவூட்டுதல்.
EPSI இன் நோக்கங்கள் / குறிக்கோள்கள்
- சகல மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குதல்.
- ஒன்றுபட்ட கல்விப்பரப்பினுள் சகல மாணவர்களுக்குமான மாறுபட்ட, வேறுபட்ட தேவைகளை வெவ்வேறாக அடையாளம் கண்டு அதன் பிரகாரம் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல்.
- பாடசாலை உள்ளக செயற்பாடுகளில் நெகிழ்வுத்தன்மையையும் சனநாயக பண்புகளையும் உருவாக்குதல்.
- மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சமூகத்திற்கிடையே பாடசாலை தன்னுடையது என்கின்ற உணர்வை விருத்தி செய்தல்.
- மாணவர்கள் மற்றும் பெற்றௌர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகூடிய கரிசனையை வழங்குதல்.
- பாடசாலையின் சகல கருமங்களுக்கும் நேரடியாக சமூகத்தின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
- பிரதேச மற்றும் சமூகத்தினுடைய தேவைகளுக்காக பாடசாலையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளுதல்.
- பாடசாலைகளின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதலும் அதிகபட்ச பொறுப்புக்கூறலை பாடசாலை பெற்றுக்கொள்ளலும்.
- வளப்பாவனையை அதிஉச்ச மட்டத்தில் பேணுதல் மற்றும் வளங்களை உருவாக்குதல்.
- பாடசாலை பங்குதாரர்களின் மென்திறன்களை அபிவிருத்தி செய்தல்.
- சமூக இணக்கப்பாட்டினை உறுதி செய்தல்.
- பாடசாலை மட்டத்திலான தொழில்சார் ஆசிரிய அபிவிருத்தியினை மேலும் விருத்தி செய்தல்.
EPSI இன் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயங்கள்
- பாடசாலை செயற்பாடுகளை நவீனமயப்படுத்தல்.
- மாணவ அடைவை மேலோங்கச் செய்தல்.
- சவால்களை வெற்றி கொண்டு பாடசாலையின் கல்வியின் பண்புத்தரத்தை அபிவிருத்தி செய்தல்.
- பங்குபற்றல் முகாமைத்துவத்தை உறுதிசெய்தல்.
- பாடசாலையை பலமாக்குதல்.
- பாடசாலையின் சகல செயற்பாடுகளினதும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மையினை உருவாக்குதல்.
- அதன்மூலம் பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டத்தினை மேலும் வலுவாக்குதல்.
EPSI ஊடாக பாடசாலைக்கு கிடைக்கும் சில உதவிகள்
(மேலதிக விபரங்களுக்கு நுPளுஐ கைந்நூலை வாசிக்க)
- தேசிய கல்விக் குறிக்கோள்கள், பொதுத் தேர்ச்சிகள் தொடர்பாகவும் உரிய கவனத்தை செலுத்துதல்.
- மாற்றங்கள் மற்றும் புதுமைகளுக்கு இசைவாகும் சந்தர்ப்பங்களை வழங்குதல்.
- உயர் மாணவ அடைவுமட்டத்திற்கு வழிகாட்டுகின்ற உறுதியான கல்விச் செயற்பாடுகளுக்கு உட்படுத்தல்.
- பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் ஆசிரியர்களுக்கிடையிலான தொடர்பினை வலுவூட்டல்.
- கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செயற்பாடுகளை வலுவூட்டல்.
- மாணவர்களின் இயற்திறன், மென்திறன் என்பவற்றை விருத்தி செய்வதன் வாயிலாக சமூக சகவாழ்விற்கு சந்தர்ப்பத்தை வழங்கள்.
- பாடசாலை மட்டத்திலான பொருத்தமான தொடர் ஆளணி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுலாக்கல்.
குறிப்பு :
- பாடசாலைகளில் EPSI திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான வசதியளிப்பை மேற்கொள்ள வலயக் கல்வி அலுவலகத்தால், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஒருவர் வசதியளிப்பாளராக (Facilitator) நியமிக்கப்படல் வேண்டும். இவர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் வலயக்கல்வி அலுவலக பிரதிநிதியான கல்வி உத்தியோகத்தராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
வசதியளிப்பு (Facilitation)
குழுவொன்றின் பொது இலக்கினை அடையாளம் கண்டு திறமையாக ஒத்தாசைகளை அவர்களுக்கு வழங்கி இலக்கினை அடையும் பொருட்டு திட்டமிடலும், நடுநிலையாகவும் தொழிற்படுதல் வேண்டும்.
வசதியளிப்பாளரின் கடமைகள்
- பாடசாலை தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தரவுத்தொகுதி ஒன்றினைக் கொண்டிருத்தல்.
- கூட்டு நடவடிக்கைகளை வெவ்வேறாக அடையாளம் காணல்.
- முன் ஆயத்தத்துடன் கூடிய பாடசாலைப் பங்காளிகளை ஊக்கமளித்து அவர்களுடன் சிறந்த உறவைப் பேணல்.
- சந்தர்ப்பத்தினையும் நேரத்தினையும் சிறப்பாகப் பயன்படுத்துதல்.
- புத்தாக்கத்தையும் பங்குபற்றலையும் சிறப்பாக வெளிப்படுத்துதல்.
- குழுக்களின் திறன்களை கௌரவித்தல்.
- நோக்கத்தினை பாதுகாத்துக்கொள்ள முடியுமாதல்.
- குழுக்களில் ஒளிந்திருக்கின்ற தரங்களை அடையாளம் காணுதல்.
- செயற்பாடுகளுக்குள்ள தடைகளை நீக்குதல்.
- மாற்றம் பெறுகின்ற நிலைமைகளுக்கேற்ப குரல் கொடுத்தல்.
- குழுக்களின் ஆலோசனைகளை செவிமடுத்து செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புகளுக்கு பங்குதாரர்களாகுதல்.
- தொழில்வாண்மை, தன்னம்பிக்கை, யதார்த்த நிலை என்பவற்றை வெளிப்படுத்தல்.
வசதியளிப்பு நுட்பங்கள்
- கூட்டங்கள் (Meetings)
- நேர்முகத் தேர்வுகள் (Interviews)
- வினாக்கொத்து (Questionnaire)
- அவதானிப்பு (Observation)
- செவ்வைப் பட்டியல் (Check List)
- குறுஞ்செய்தி (SMS)
- மின்னஞ்சல் (e-mail)
- புதிய தொழிநுட்ப வடிவங்கள் (New Technical Forms)
EPSI அமுலாகத்திற்காக வசதியளிப்பாளருடன் இணைய வேண்டிய பாடசாலை பங்குதாரர்கள்
- அதிபர்
- பிரதி / உதவி அதிபர்கள்
- ஆசிரியர்கள்
- மாணவர்கள்
- பழைய மாணவர்கள்
- பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு
- பாடசாலை முகாமைத்துவக் குழு
- பாடசாலை பெறுகைக் குழு
- பாடசாலை தொழிநுட்பக் குழு
- கல்வி அதிகாரிகள்
- பெற்றோர்
- சமூகமும் நலன்விரும்பிகளும்
EPSI வசதியளிப்பு செயற்பாடு
EPSI வசதியளிப்பு செயற்பாடுகளின் 07 படிமுறைகளும் சுழற்சி முறையில் நடைபெறல் வேண்டும். அப்படிமுறைகள் பின்வருமாறு :
- பாடசாலை தொடர்பாக அறிந்துகொண்டு வசதியளிப்பு செயற்பாடுகளுக்கு ஆயத்தமாதல்.
- முறைமையான வசதியளிப்பு வேலைத்திட்டத்தின் வெற்றி தங்கியிருப்பது, பாடசாலைக்கும் வசதியளிப்பிற்கும் இடையில் கட்டி எழுப்பப்படுகின்ற தொடர்பிலேயே ஆகும்.
- தனது வசதியளிப்புத் திட்டம் தொடர்பாகவும், அதன் நோக்கங்கள் தொடர்பாகவும் பாடசாலை பங்குதாரர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும், வசதியளிப்பிற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கும் தான் வருகை தரவுள்ள தினம், நேரம் என்பவற்றை பாடசாலைக் குழாமிற்கு அறியப்படுத்துதல் வேண்டும்.
- அதற்கேற்ற வகையில் அவர்கள் தங்களது பாடசாலை செயற்பாடுகளை ஒழுங்கமைத்து நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வசதியளிப்பு தொடர்பாக ஆயத்தமாவதற்கான மனநிலையையும் சந்தர்ப்பத்தையும், பெற்றுக்கொள்வார்கள்.
- பாடசாலையின் வரலாறு, பின்னணி, மூலத்தரவுகள் போன்ற அடிப்படைத் தகவல்களை பாடசாலை உள்ளக மதிப்பீட்டின் போதான அறிக்கைகள் மூலமும் வேறு விதங்களிலும் பெற்றுக் கொள்வதுடன், EPSI வசதியளிப்புப் படிவங்களையும் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
2. வசதியளிப்பிற்காக பாடசாலை சென்று, தகவல்களை திரட்டி, பகுப்பாய்வு செய்து, பலங்களையும் பலவீனங்களையும் இனம்கண்டு துரித மீளாய்வின் பின்னர் வசதியளிப்பிற்குத் திட்டமிடல்.
- ஆரம்பத்தில் ஏற்படுத்தப்படும் எண்ணப்பதிவு நீண்டகாலம் நிலைக்கும் (first impressions are the most lasting) என்பதற்கேற்ப வசதியளிப்பாளர் முதல் தடவை பாடசாலை ஒன்றிற்கு செல்லும் போது தனது வசதியளிப்பு நோக்கங்கள், திட்டங்கள், ஆயத்தங்கள், தொடர்பாக சிறந்த அறிமுகம் ஒன்றினை பாடசாலைப் பங்குதாரர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
- முதல் தடவையிலே பின்வரும் இரு நோக்கங்களை வசதியளிப்பாளர் அடைந்துகொள்ள வேண்டும்.
- EPSI தொடர்பாக அதிபர், பிரதி அதிபர் அல்லது உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவத் தைலவர்கள், பெற்றோர்களுடன் இயன்றவு நட்புடனும், இணக்கப்பாட்டுடனும் உரையாடி தகவல்கைளப் பெற்றுக் கொள்வதுடன் EPSI இன் பலம் பலவீனம், சவால்களையும் அடையாளம் காணுதல் வேண்டும்.
- வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தை உபயோகித்து பாடசாலையின் பல்வேறுபட்ட விடயப்பரப்புக்களை அவதானித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- பாடசாலையின் நிலைமனை விளங்கிக்கொள்ள மேற்பார்வை சிறந்த ஒரு கலை ஆகும். உண்மையான நிலைமை EPSI இல் முக்கியமாகையால் தெளிவான ஒரு மேற்பார்வை அறிக்கை அவசியமாகின்றது. எனவே மேற்பார்வையாளராக செயற்படும் வசதியளிப்பாளர் மேற்பார்வை செய்யும் போது பின்வரும் விடயங்களை கருத்தில்கொள்ள வேண்டும்.
- மேற்பார்வை செய்யும் விடயத்தை தெளிவாக வரையறுத்திருத்தல்.
- அவ்விடயங்களில் எது முக்கியமானது, எது முக்கியமற்றது என இனம்காணுதல்.
- வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தினை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப மேற்பார்வையில் ஈடுபடல்.
- மேற்பார்வையில் அவதானிக்கின்ற விடயப்பரப்புக்களை தௌpவாக விளங்கிக் கொள்ளுதல்.
- சந்தர்ப்பங்களை சிறந்த முறையில் விளங்கிக்கொள்ளுதல்.
- அவதானிப்புப் பத்திரத்தில் பொருத்தமான கூட்டில் புள்ளியிடுதல்.
- அவதானிப்பின் பின்னர் வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தினை துல்லியமாக மீளாய்வுசெய்வதன் மூலம் ஒவ்வொரு விடயப்பரப்பிலும் பாடசாலையின் நிலைமையினை மதிப்பீடு செய்து தேவையான அபிவிருத்திசார் பின்னூட்டலை வழங்குதல் வேண்டும்.
3. பாடசாலைகளில் வசதியளிப்பு
- பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை துரித மீளாய்வுக்குட்படுத்தி பாடசாலையின் பலம், பலவீனம், சவால்களை அடையாளம் கண்டு, அதிபர், ஆசிரியர் குழாம் உள்ளடங்கலான கூட்டம் ஒன்றை கூட்டி, அதில் வசதியளிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான விபரங்களையும், ஆலோசனைகளையும் வழங்குதல் வேண்டும்.
- வசதியளிப்பு நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் ஆழமான விவரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- ஆரம்ப அறிவுறுத்தலின் பின்னர் விவரமான வசதியளிப்பு அறிக்கையினை பாடசாலை அதிபர்கள் அனுப்ப நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
4. மீளாய்வு (வலய EPSI உத்தியோகத்தர்களுக்கும், பாடசாலைக்கும் அறிக்கையிடல்)
- தனது பாடசாலையினால் வழங்கப்பட்ட தகவல்களைகளையும், வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தினையும் முறையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
- மாதிரிப் படிவங்களைப் பாவித்து அதிபருக்கும், வலய / மாகாண இணைப்பு உத்தியோகத்தர்களுக்கும் அறிக்கை தயாரித்து அனுப்புதல் வேண்டும்.
5. மீண்டும் பாடசாலைக்கு விஜயம் செய்தல்.
- முதலாவது அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள் மீண்டும் பாடசாலைக்கு செல்வதற்கு வசதியளிப்பாளர் எதிர்பார்க்கப்படுகின்றார்.
- இதன் போது முதல் தடவையிலேயே கலந்துரையாடல் வாயிலாக வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தினைப் பாவித்து பாடசாலை பற்றிய தகவல்களை திரட்டுதல் வேண்டும்.
6. வசதியளிப்பு அடைவுகளை மதிப்பிடல். (வலய EPSI இணைப்பு உத்தியோகத்தர்களுக்கும், பாடசாலைக்கும் அறிக்கையிடல்)
வசதியளிப்பு நடவடிக்கைகளின் பின்னர் இரண்டாவது சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் தனது வசதியளிப்பு தொடர்பான மதிப்பீட்டினை பின்வரும் முடிவுகளில் ஒன்றிற்கு தீர்மானிக்க வேண்டும்.
- மிகத்திருப்தி, மிகக்குறைந்த அளவில் வசதியளிப்பு நடவடிக்கைகள் வேண்டும்.
- திருப்தி, ஓரளவிலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வேண்டும்.
- ஓரளவு திருப்தி, வசதியளிப்பு முக்கியம்.
- திருப்தியின்மை, கூடுதலான வசதியளிப்பு நடவடிக்கைகள் தேவை.
7. மீண்டும் பாடசாலைக்குச் செல்லுதல்.
மேலே படிமுறை 6 இல் குறிப்பிடப்பட்ட முடிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னூட்டலின் பிரகாரம் வசதியளிப்பாளர் இரு விதங்களில் செயற்பட வேண்டும்.
- பாடசாலை நிலைமை மிகத்திருப்தியானது அல்லது திருப்தியானது எனின் வசதியளிப்பாளர் அப்பாடசாலைக்கு உரியவாறு செல்லல் வேண்டும்.
- பாடசாலை நிலைமை ஓரளவு திருப்தி அல்லது திருப்தியின்மை எனின் தேவைகேற்ப மேலதிக வசதியளிப்பு செயற்பாடுகளுக்கு அப்பாடசாலைக்கு செல்லல் வேண்டும்.
மேற்படி படிமுறைகளுக்கேற்ப வசதியளிப்பவர், தொடர்தேர்ச்சியான முறையில் ஒரு பாடசாலையின் நடவடிக்கைகளை அவதானிப்பவராக, மதிப்பீடு செய்பவராக, வசதியளிப்பவராக செயற்படுதல் வேண்டும்.
EPSI க்காக பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய குழுக்கள்
- பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு – (School Development Executive Committee – SDEC )
- பாடசாலை முகாமைத்துவக் குழு – (School Management Committee – SMC )
- பாடசாலை கொள்வனவூக் குழு (School Procurement Committee – SPC)
- தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு (Technical & Evaluation Committee – TEC)
மேற்படி நான்கு குழுக்கள் தொடர்பாக தௌpவான விளக்கங்கள் எனது முன்னைய தொடர்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு மேலதிகமாக உபகுழுக்கள் ஒழுங்கமைக்கப்படுதல் வேண்டும்.
- SDEC இனால் SMC இனது அனுசரணையுடன் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க அல்லது சில கருமங்களை நிறைவேற்ற மூன்று வகையான குழுக்கள் உருவாக்கப்படலாம்.
- வகுப்பு வட்டம் : வகுப்பு வட்டத்திற்காக உரிய வகுப்பு மாணவர்களது பெற்றௌர்கள் அனைவரும் பங்கேற்றல் வேண்டும். மாணவர்களின் கற்றல் தேர்ச்சி மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் பங்காற்ற வேண்டியது வகுப்பு வட்டம் அமைப்பதன் முக்கியத்துவமும் நோக்கமுமாகும். ஓர் வகுப்பு வட்டம் உரிய நடைமுறை ஆண்டிற்கு மட்டுமே வரையறுக்கப்படும்.
- உபகுழுக்கள் : உப குழு ஒன்றில் குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும். உபகுழுக்கள் தேவைக்கேற்ப உருவாக்கப்பட வேண்டியதுடன், உப குழுச்செயற்பாட்டின் மூலம் கிடைக்கப்பட வேண்டிய பெறுபேறு வெற்றி பெறுவதற்கேற்ற வகையில் பொருத்தமான நபர்களை தெரிவு செய்தல் வேண்டும். உதாரணமாக ஆசிரியர்களுக்கான கணினிப்பயிற்சி வழங்குதல் தொடர்பான திட்டத்திற்கு கணினி அறிவுடன் கூடிய நபர்களைத் தெரிவு செய்தல்.
- செயற்திட்டக் குழுக்கள்: பாடசாலையின் தேவை கருதி விசேட தேவைகளுக்காக சிறுவர் நேய பாடசாலைக்குழு, பாடசாலை திட்டமிடல் குழு, ஆசிரியர் அபிவிருத்திக்குழு, பாடசாலை சுகாதார மேம்பாட்டுக்குழு போன்ற செயற்திட்டக் குழுக்களை உரிய சுற்றுநிருபங்களையும் கருத்தில் கொண்டு நியமிக்க வேண்டும்.
மேற்படி வகுப்பு வட்டம், உபகுழு, செயற்திட்ட குழு என்பவற்றுக்கு தலைவர் ஒருவர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டியதுடன், அவசியமாயின் மாத்திரம் செயலாளர் ஒருவரை நியமித்துக்கொள்ளலாம்.
இவற்றின் சகல நிதிச் செயற்பாடுகளும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் பொருளாளரினால் இடம்பெற வேண்டும்.
EPSI அமுலாக்கல் இடம்பெற வேண்டிய துறைகள்
• பாடசாலை மட்டத் திட்டமிடல்
• பாடவிதான அமுலாக்கம்
• பாடசாலை மட்ட தொழில்சார் ஆசிரிய அபிவிருத்தி (SBPTD)
• வள முகாமைத்துவம்
• மாணவர் நலன்புரி, உதவிச்சேவைகள்
• சமூகத் தொடர்பாடல்
• தரமான கல்விக்கான வகை கூறல்.
மேற்படி 7 துறைகளில் EPSI அமுலாக்கல் இடம்பெறுவதற்காக வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தில் இதற்கு மேலதிகமாக இரு விடயங்கள் உள்ளன.
• EPSI அறிவூட்டும் தன்மை
• குழுக்கூட்டங்கள் தொடர்பான விடயங்கள்.
இவ் ஒன்பது விடயங்கள் தொடர்பாக,
சிறப்பு எனின் – 04 புள்ளிகள்
நன்று எனின் – 03 புள்ளிகள்
சாதாரணம் எனின் – 02 புள்ளிகள்
அபிவிருத்தியடைதல் வேண்டும் எனின் – 01 புள்ளி
எனும் அடிப்படையில், புள்ளி இடப்பட வேண்டிய மாதிரிப்படிவம் EPSI வழிகாட்டல் கைநூலில் தரப்பட்டுள்ளது. வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தில் புள்ளியிடப்பட வேண்டிய விடயங்களை எடுத்து நோக்குவோம்.
1. EPSI அறிவூட்டும் தன்மை
• குழு (SDEC / SMC / SPC / TEC )
• ஆசிரியர் குழாம்
• பாடசாலையின் ஏனைய பங்குதாரர்கள்
2. குழுக்கூட்டம் முறையான நிகழ்ச்சி நிரலுடன் கூட்டப்பட்டு அறிக்கை இடப்படுகின்றது
• பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு
• பாடசாலை முகாமைத்துவக் குழு
• பாடசாலை கொள்வனவுக் குழு
• தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு
உப குழுக்கள்
கூட்டங்கள் நடாத்தப்பட்டு பெறப்பட்ட தீர்மானங்கள் அமுலாக்கி எட்டப்பட்ட அடைவு தொடர்பான அறிக்கை.
3. பாடசாலை மட்டத் திட்டமிடல்
• சந்தர்ப்பங்களை மதிப்பீடு செய்து முன்னுரிமை அடிப்படையில் உரிய படிவத்தில் திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
• உரிய படிவத்தில் ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்து அனுமதி பெற்றிருத்தல்.
• உரிய படிவத்தில் வருடாந்த திட்டம் தயாரித்து அனுமதி பெற்றிருத்தல்.
• வருடாந்த அமுலாக்கல் திட்டத்தின் மூலம் வரவு – செலவுத் திட்டத்தினை தயாரித்து அனுமதி பெற்றிருத்தல்.
• திட்டத்தினை மதிப்பீடு செய்ய உரிய முறைமை ஒன்றைத் தயாரித்திருத்தல்.
• திருத்தம் செய்யப்பட திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்தியிருத்தல்.
4. கலைத்திட்ட அமுலாக்கம்
- Iஅடைவு மட்டத்தினை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்தல்.
- குழு ஊடாக மாணவர் வேறுபாடுகளை மையப்படுத்தி வேலைத்திட்டங்களை அமுலாக்கல்.
- இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு விஷேட வேலைத்திட்ட அமுலாக்கம்.
- சமய வேலைத்திட்ட அமுலாக்கம்.
- அழகியல் வேலைத்திட்ட அமுலாக்கம்.
- விளையாட்டு வேலைத்திட்ட அமுலாக்கம்.
- தொழில் வழிகாட்டல் அமுலாக்கம்.
- சமூக இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்தை அமுலாக்கல்.
- பாடசாலை வளத்தினை கலைத்திட்ட அமுலாக்கத்திற்கு உத்தமமாகப் பயன்படுத்த வழிமுறை ஒன்றை உருவாக்குதல்.
- சமூக மற்றும் பிரதேச தேவைகளுக்கேற்ப கலைத்திட்டத்தினை அமுலாக்க வழிமுறை ஒன்றைக்கொண்டிருத்தல்.
- இணைப்பாடவிதான செயற்பாடுகள் அமுலாக்கி வெற்றிவாகை பெற்றிருத்தல். (கோட்டம் / வலயம் / மாகாணம் / அகில இலங்கை)
5. பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி வேலைத்திட்டம்
- பயிற்சித் தேவையின் படி உரிய திட்டம் தயாரித்தல்.
- பாடசாலை மட்ட தொழில்சார் ஆசிரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் அமுலாக்கல்.
- SBPTD ஊடாக முறைப்படியான கண்காணித்தல் மற்றும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான வழிமுறையினைக் கொண்டிருத்தல்.
6. வள முகாமைத்துவம்
- வள முகாமைத்துவக் குழு இருத்தல்.
- பௌதீக, மானிட வளம் தொடர்பான தகவல் தொடர்பாடலைத் தயாரித்தல்.
- வளங்களின் தேவைகளை இனம்கண்டு முன்னுரிமைப்படுத்துதல்.
- வளப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல்.
- வளங்களை உருவாக்குதல் தொடர்பான வேலைத்திட்டத்தை அமுலாக்கல்.
7. மாணவர் சேர்ப்பு, பங்குபற்றுதல், நலன்புரி மற்றும் உதவிச்சேவை
- நலன்புரி உதவிச்சேவை தொடர்பான சந்தர்ப்பங்களை அடையாளம் காணுதல்.
- நலனோம்பு மற்றும் உதவிச்சேவை தொடர்பான பொறுப்பினை உரியவாறு ஒப்படைத்தல்.
- உரிய அளவுத்திட்டத்தின் படி பாடசாலைக்குரித்தான நீர் மற்றும் சுகாதார வசதிகள் இருத்தல்.
- மாணவர் வரவினைக் கண்காணித்தல், அபிவிருத்தி செய்தல் தொடர்பான ஒழுங்கான வேலைத்திட்டம்.
- மாணவர் தொடர்பான தகவல் விபரங்களை முறையாகப் பேணுதல்.
8. சமூகத்தொடர்பு
- சமூகத்தில் பாடசாலைக்குக் கிடைக்கக் கூடிய அனுகூலங்களை அடையாளப்படுத்துதல்.
- சமூகத் தேவைகளுக்கான பாடசாலைத் தொடர்பாடல்.
- பெற்றோர் வட்டம் அமுலாக்கம்.
- பெற்றோருக்கு பாடசாலை தொடர்பான மதிப்பீட்டுக்கு சந்தர்ப்பம் வழங்குதல்.
9. பண்புத்தரக் கல்வியை பொறுப்புக்கூறல்.
- நிதி முகாமைத்துவம்
- பாடசாலை அபிவிருத்தி நிதியத்தினை நடாத்திச்செல்லல்.
- வசதிகள், சேவைகள் கட்டணத்தினை நடைமுறைப்படுத்துதல்.
- உரிய நல் ஒழுக்கங்களை நடைமுறைப்படுத்துதல்.
- பாடசாலையின் நிதி முகாமைத்துவம் வெளிப்படைத் தன்மையூடன் செயற்படுத்தல்.
- வரவு – செலவுத் திட்டத்தின் எதிர்பார்க்கக் கூடிய இலக்கினை எட்டியுள்ளமை.
- பாடசாலையில் பொதுவான முகாமைக்காக பங்குபற்றல் முறைமையினை பின்பற்றுதல்.
(உதாரணம் : பங்குதாரர்கள் முன்வைத்துள்ள சிபாரிசுகளை அமுலாக்கல்)
மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் அவதானித்து இடப்பட்ட புள்ளிகளுக்கேற்ப ஒவ்வொரு விடயங்கள் தொடர்பாகவூம் வசதியளிப்பு படிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
மேற்படி துறைகளுக்கான வசதியளிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய / பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நூல்கள் சில பின்வருமாறு :
- பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியிலான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச்செயற்பாடுகள் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல் கைந்நூல். (26/2018 சுற்றறிக்கை)
- எமது பாடசாலை எந்தளவு தரமானது? ஆலோசனைக் கைந்நூல். (31/2014 சுற்றறிக்கையுடன் சேர்த்து வாசிக்க வேண்டும்.
- பாடசாலையை அடிப்படையாகக்கொண்ட தொழில்சார் ஆசிரிய அபிவிருத்தி ((SBPTD) தொடர்பான வழிகாட்டல் கைந்நூல்.
- பாடசாலை திட்டமிடல் வழிகாட்டி.
- பாடசாலை தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய தேர்ச்சிச் சட்டகம். (NCFSLM)
- ஒவ்வொரு பாடத்துறைக்குமான கல்வி அமைச்சினூடாக வெளியிடப்பட்ட சுற்றுநிருபமும் ஆலோசனை வழிகாட்டலும்.
மேற்படி ஒவ்வொரு துறைகளுக்கான விளக்கங்கள் EPSI வழிகாட்டல் கைந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. வாசித்து அறிக. ஆனாலும் அத்துறைகள் பற்றி மேலதிக விளக்கங்களைப் பெற்று செயற்பாடுகளை மேற்கொள்ள மேலே குறிப்பிடப்பட்ட ஆலோசனை வழிகாட்டி நூல்களை தெளிவாக விளங்கி பின்பற்ற வேண்டியதும் அவசியமாகும்.
EPSI தொடர்பாக எளிய உதாரணம் ஒன்றை மேற்படி EPSI கோட்பாடுகளை அமுல்படுத்தும் வகையில் தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.
படிமுறை – 01 : வலயக் கல்வி அலுவலகத்தால், அவ்வலயத்திற்குட்பட்ட 1 AB பாடசாலைக்கு EPSI வசதியளிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட பாடசாலையில் அடிக்கடி பல முரண்பாடுகள் தோன்றுவதாகவும், அதனால் அப்பாடசாலையின் அபிவிருத்தி தடைப்பட்டு வருவதாகவும், அப்பாடசாலையின் SDEC, SMC உரிய வசதியளிப்பாளர் ஆகியோர்களுக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட இயலுமை விருத்தி நிகழ்ச்சியில் (Capacity Building Programme) வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்நிகழ்ச்சியில் EPSI பற்றிய தெளிவான சுருக்கமான விளக்கம் ஒன்றினையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியின் பின்னர் தனது பாடசாலைத் தரிசிப்பு தொடர்பாக வசதியளிப்பாளர் பாடசாலை பங்குதாரர்களை முதன் முறையாக சந்திப்பதற்கான திகதியையும் நேரத்தையும் வழங்கி முன்னனுமதி ஒன்றை அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதற்கிடைப்பட்ட காலப்பகுதிக்குள் வசதியளிப்பு தொடர்பாக ஆயத்தமாவதற்கான சந்தர்ப்பம் பாடசாலைக் குழாமிற்கு வழங்கப்பட்டது. அதாவது உள்ளக மதிப்பீடு ஒன்றினை அதிபர் மேற்கொள்வதற்கும், பாடசாலையின் உள்ளக, வெளியக குழுக்கள் (பங்குதாரர்களை) உரிய திகதியில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஒன்று சேர்வதற்குமான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் இவ்விடைப்பட்ட காலப்பகுதி அவசியமாகின்றது.
வசதியளிப்பாளரைப் பொறுத்தவரை இக்காலப் பகுதிக்குள் குறிப்பிட்ட பாடசாலை சம்பந்தமாக தகவல்களை சேகரித்துக்கொள்ள இயலுமானதாக அமைந்தது. பாடசாலையின் மாணவர், ஆசிரியர் தொகை, பொதுப்பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வுகள், பாடசாலையில் இடம்பெற்ற கணக்காய்வுகளின் போதான ஐய வினாக்களும், அதற்காக வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பான விபரங்கள், சமகாலத்தில் பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள், பாடசாலையின் சூழல் பின்னணி, கலாச்சாரப் பின்னணி, பாடசாலை அமைந்துள்ள சமூகப் பின்னணி போன்ற இன்னோரன்ன தகவல்களை வலயக்கல்வி அலுவலகத்தின் உரிய பிரிவுகளிடமிருந்து பெற்று குறிப்பிட்ட பாடசாலை தொடர்பான நேர், எதிர் மறையான எண்ணக்கருக்களையும், அதனைக் கையாள வேண்டிய விதம் தொடர்பான சில வழிமுறைகளையும் தயார்படுத்திக்கொள்ள முடியுமானதாகவிருந்தது.
படிமுறை – 02 : குறிப்பிட்ட திகதியில், குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகமளித்த வசதியளிப்பாளர் தனது வசதியளிப்புத் திட்டத்தின் படி அதிபர், பிரதி / உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் பெற்றார்களுடன் கூட்டத்தில் கலந்துரையாடி, பாடசாலை தொடர்பாக மேலும் பல தகவல்களைப் பெற்றுக்கொண்டார். அதில் மேற்கூறப்பட்ட ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியாக தான் தயாரித்த வினாக்கொத்துகள் அடங்கிய பிரதிகளை கூட்டத்தில் பங்குபற்றியோருக்கு வழங்கி தனக்கு தேவையான குறிப்பான விடயங்களையும் பெற்றுக்கொண்டார். வினாக்கொத்தில் அடங்கியிருந்த சில வினாக்கள் பின்வருமாறு.
- ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் வருடாந்த பொதுக்கூட்டம் இடம் பெறுகின்றதா ?
- அதில் AIP தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படுகின்றதா?
- வருடாந்த செயலாற்றுகை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றதா?
- வரவு செலவூத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றதா?
- அது AIP யுடன் பொருத்தமான வகையில் அமைந்துள்ளதா?
- பெற்றோருடன் அதிபர் சுமூகமான உறவைக் கொண்டுள்ளாரா?
- ஆசிரியர்களுடன் அதிபர் சுமூகமான உறவைக் கொண்டுள்ளாரா?
- மாணவர்களுடன் அதிபர் சுமூகமான உறவைக் கொண்டுள்ளாரா?
- முகாமைத்துவக் குழுவின் செயற்பாடுகள் கிரமாமாக இடம்பெறுகின்றனவா?
- பழைய மாணவர் சங்கம் பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றதா?
- கற்பித்தலுக்குத் தேவையான தர உள்ளீடுகள்இ கிடைக்கப் பெறுகின்றனவா?
- SDEC குழுவினரும் SMC குழுவினரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்படுகின்றனரா?
- மலசலகூட வசதிகள் பற்றி பூரண திருப்தி அடைகின்றீர்களா?
- பாடசாலையின் சுற்றுச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக உள்ளதா?
- பூரண திருப்தியுடனும் விருப்பத்துடனும் பாடசாலைக்கு சமூகமளிக்கின்றீர்களா?
- ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் பணியை தலைவர் என்ற வகையில் அதிபர் சரியாக நடைமுறைப்படுத்துகின்றாரா?
- வேலைப்பங்கீடுகளையும், பொறுப்புக்களையும் அதிபர் பகிர்ந்தளித்துள்ள முறை திருப்திகரமானதா?
- பெற்றோர், சமூகம் பாடசாலைக்கு ஆதரவு வழங்குகின்றனரா?
இவ்வாறான வினாக்களை பொருத்தமான அடிப்படையில் அதிபர், பிரதி/உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் பெற்றோர்கள் ஆகிய பிரிவினர்களுக்கு வழங்கி தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
அதன்பின்னர் வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவத்தினை பூர்த்தி செய்யும் வகையில் மேற்பார்வை ஒன்றினை பங்குதாரர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார். முதற்கட்டமாக மேற்பார்வையில் அவதானிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டு புள்ளியிடப்பட்ட மதிப்பீட்டுப் படிவத்தை மீளாய்வு செய்து பாடசாலையின் நிலைமையினை மதிப்பீடு செய்தார்.
EPSI க்காக பாடசாலை ஒழுங்கமைக்கப்பட வேண்டிய விதத்தில் SDEC, SMC, SPC, TEC ஆகிய குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றின் செயற்பாடுகள் உறங்கு நிலையில் காணப்பட்டமையை வசதியளிப்பாளர் அவதானித்தார். EPSI இனது 07 மதிப்பீட்டுத் துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய நிலைமையில் அப்பாடசாலையின் செயற்பாடுகள் காணப்படுவதை வசதியளிப்பாளர் அறிந்துகொண்டார். அதற்கேற்ப வசதியளிப்பு நடவடிக்கைகளுக்கு ஆயத்தமானார்.
படிமுறை – 03 : வசதியளிப்பு நடவடிக்கைகளுக்காக, முதலாவது துறையான பாடசாலைத் திட்டமிடலின் பகுதிகளையும், விடயங்களையும் பங்குதாரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
- குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒரு பாடசாலையின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உச்ச அளவில் பாவிப்பதன் வாயிலாக அடையாளம் காணப்பட்ட நோக்கத்தினை அடைந்துகொள்ளும் பொருட்டு எடுக்கப்படும் நடைமுறை செயற்பாடுகளை உள்ளடக்கிய திட்டம் பாடசாலை மட்ட திட்டமிடல் (School Level Planning) ஆகும்.
- பாடசாலையொன்றின் கொள்கைகளையும் நோக்கங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட தூர நோக்கினை அடைந்துகொள்வதற்காக எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளை இனங்காணல் தந்திரோபாய திட்டமிடல் (strategic planning) எனப்படும்.
- பாடசாலையின் நீண்டகால அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் மட்டம் தூரநோக்கு (Vision) ஆகும்.
தூரநோக்கானது,
- சாதகமானதாக (Positive)
- எதிர்காலத்தை நோக்கியதாக (Futuristic)
- ஊக்கப்பாடு கொண்டதாக (Motivation)
- இறுதிப் பெறுபேற்றை அடைவதற்காக (End Result)
இருத்தல் வேண்டும்.
பாடசாலையின் தூரநோக்கினை பயணிக்கும் மார்க்கமாகவும், பாடசாலையின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தக் கூடியவாறும் தயார் செய்யப்படும் விடயம் பணிக்கூற்று (Mission) ஆகும்.
பணிக்கூற்றானது, யாருக்கு? என்ன சேவை? எவ்வாறு? என்ற விடயங்களை கவனிக்கத்தக்கவாறு தயார் செய்யப்படுவதுடன் பின்வரும் விடயங்களில் ஒன்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
- சமூகப் பொறுப்பு (Social Responsibilities)
- ஒழுக்கக் கோவை (Moral Code)
- பாடசாலையின் குறிக்கோள் (Objectives of the School)
- பாடசாலையின் திட்டங்கள் ஊடாக நீண்ட காலத்தின் அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படும் இறுதி எதிர்பார்ப்பான பெருவெற்றி பாடசாலையின் பெருமையாகும் (Pride of the School)
- திட்டமிடல் பெருவெற்றி, நோக்கு மற்றும் இலக்கினை அடைந்துகொள்ளக்கூடிய வழிமுறைகள் தந்திரோபாயம் ( Strategies ) ஆகும்.
- மத்தியகால திட்டமிடலை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, பாடசாலை ஒன்று எட்டக்கூடிய, எதிர்பார்க்கப்படும் பெறுபெறுகள் நோக்கங்கள் (Goals) ஆகும்.
- நோக்கங்கள்,
- விஷேடத்துவமானதாக – Specific
- அளவீடு செய்யக் கூடியதாக – Measurable
- அடையக் கூடியனவாக – Achievable
- யதார்த்தபூர்வமானதாக – Realistic
- கால எல்லை கொண்டதாக – Timely
சுருக்கமாக “SMART” ஆக இருத்தல் வேண்டும்.
பாடசாலைத் திட்டமிடலின் படிமுறைகள்
மேற்படி படிமுறைகளினூடாக பாடசாலைத் திட்டமிடலை மேற்கொள்ள வசதியளிப்பாளர் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். உரிய தலைப்புக்களின் கீழ் உரிய படிவங்களில் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தினையும் அதற்கமைய தயாரிக்கப்பட வேண்டிய வரவு செலவுத்திட்ட வரைபையும் ஆக்கிக்கொள்ள வசதியளிப்புக்கள் வளவாளர்களினதும், நிபுணர்களினதும் உதவியுடன் அப்பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
- EPSI இனது இரண்டாவது துறையான கலைத்திட்ட முகாமைத்துவம் தொடர்பாக, குறிப்பிட்ட அப்பாடசாலையில் பாடவிதான அமுலாக்கம் நடைமுறைப்படுத்தும் வதற்கான வளங்கள் சரியான திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்படாமையும், கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் பாரம்பரிய கற்பித்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தமையும் வசதியளிப்பாளரினால் அவதானிக்கப்பட்டிருந்தது.
“Smart’ வகுப்பறை காணப்பட்ட போதிலும் அதன் பயன்பாடு பூச்சியமாக இருந்தது. எனவே
- EPSI இனது மூன்றாவது துறையான பாடசாலை மட்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்திக்காக (School Based Professional Teacher Development – SBPTD ) “Smart’ வகுப்பறைக் கற்பித்தல் முறைமைகள் தொடர்பான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்க வசதியளிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அத்துடன் பற்றாக்குறையாக இருந்த சில ஆசிரிய வழிகாட்டல் கையேடு, பாடத்திட்டம், பாடப்புத்தகம் போன்றவற்றையும், வலய, மாகாணக் கல்வி அலுவலகம் ஊடாகவும், கல்வி அமைச்சின் ஊடாகவும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
“SBPTD” இற்கான குழுவை நியமிக்க அதிபருக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், அமைக்கப்பட்ட குழுவிற்கு தேவையான வழிகாட்டல்களை வளவாளர்களைக் கொண்டு நடாத்தினார்.
ளுடீPவூனு தொடர்பான விடயங்களையும், அது தொடர்பான சமகாலப் பிரச்சினைகளையும் அடுத்தடுத்த எனது தொடர்களில் எதிர்பாருங்கள்.
- EPSI இனது நான்காவது துறையான வள முகாமைத்துவம் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல வள முகாமைத்துவக் குழு ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் வசதியளிப்பாளரினால் முன்வைக்கப்பட்டு அக்குழு தாபிக்கப்பட்டது. அதனூடாக பௌதீக, மனிதவள தேவைகள் அப்பாடசாலையில் அறிக்கைப்படுத்தப்பட்டது. அவற்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருடன் விஷேட சந்திப்பு ஒன்றை SDEC, SMC வள முகாமைத்துவக் குழு அங்கத்தவர்களுடன் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் எதிர்காலத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தினம்தோறும் பாடசாலைச் சூழலை சிறப்பாகவும், தூய்மையாகவும் பேணும் முறையில் பெற்றோரையும் இணைத்துக்கொண்டு சுழற்சி முறையிலான வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது.
- அதாவது தினமும் பாடசாலையிலுள்ள ஒவ்வொரு வகுப்பிலும் தினவரவு இடாப்பிலுள்ள மாணவர்களின் ஒழுங்கின் படி இரு பெற்றோர்கள் சுழற்சி முறையில் மாணவர்களுடன் இணைந்து உரிய வகுப்பறையும் அதன் சுற்றுச்சூழலையும் சுத்தப்படுத்துதல் வேண்டும். காலை 06.45 தொடக்கம் காலை 07.15 வரை அரை மணித்தியாலம் இதற்காக செலவிடப்படுதல் வேண்டும். இவர்களுடன் பாடசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்களும் இணைந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் கழிவுகள் உரிய முறைப்படி தொட்டிகளில் சேகரிக்கப்படுவதுடன், அதனை கொண்டு செல்வதற்காக மாநகர கழிவு முகாமைத்துவப்பிரிவின் உதவியும் பெறப்படுதல் வேண்டும்.
- EPSI இனது ஐந்தாவது துறையான மாணவர் அனுமதி, பங்குபற்றல், பொது நலனோம்பல் மற்றும் உதவி சேவைகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பின்வரும் குழுக்களை அமைக்கவேண்டிய தேவை அப்பாடசாலையில் ஏற்பட்டிருந்தது.
கட்டாயக் கல்விக் குழு
நலநோம்பல் குழு
சுகாதார மேம்பாட்டுக் குழு
அனர்த்த பாதுகாப்புக் குழு
மாணவர் ஆலோசனைக் குழு
மாணவர் அனுமதிக் குழு
அத்துடன் பங்குபற்றல் முகாமைத்துவத்தினைக் (Participatory Management) கட்டி எழுப்புவதற்காக பொறுப்புக்களைப் பட்டியலிட்டு பொருத்தமான வகையில் கையளிக்கப்படுவதற்கு தேவையான முன்னெடுப்புக்களை வசதியளிப்பாளர் மேற்கொண்டார். அத்துடன் அவற்றின் அமுலாக்கல் தொடர்பாகவும் அவதானித்து மதிப்பீடு செய்தார்.
போசாக்கு, குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், நலநோம்பல் உதவிச் சேவைகள் அப்பாடசாலையில் போதுமான அளவு காணப்பட்டமையினால், அவ்வசதிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாடசாலை ஆளணியினரை பாராட்டி ஊக்குவித்தார்.
EPSI இனது ஆறாவது துறையான பாடசாலை, சமூக தொடர்பாடலும் பங்குபற்றுதலும் தொடர்பாக பின்னடைவான ஒரு நிலைமை குறிப்பிட்ட பாடசாலையில் காணப்பட்டது. அதாவது சமூகம் பற்றிய தகவல் தொகுதி ஒன்று அப்பாடசாலையில் காணப்படவில்லை. பாடசாலையின் நடவடிக்கைகளுக்காக சமூகத்தின் உதவிகள் போதுமானளவு கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறே பாடசாலை மூலம் சமூகத் தேவைகளும் போதிய அளவில் நிறைவேற்றப்படவில்லை.
மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு சமூகத்தை போதியளவு பாடசாலையினுள் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நிகழ்வாக பாடசாலை மாணவர் ஆசிரியர்கள் இணைந்து தயாரித்த பல்வேறு உணவு வகைகள், கைவினைப்பொருட்கள், புதிய கண்டுபிடிப்புக்கள், பூஞ்செடிகள், இயற்கை மருத்துவப் பொருட்கள் கொண்ட கண்காட்சி ஒன்றினையும், விற்பனையையும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. இவ்விற்பனையில் சமூகத்தில் சிற்றுண்டி வகைகள், பலகாரங்கள், கைவினைப்பொருட்கள், பூஞ்செடிகள், இயற்கை மருத்துவப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியாருக்காகவும் ஒரு காட்சிக் கூடமும் விற்பனைக் கூடமும் ஒதுக்கப்பட்டது.
பெற்றோர் வட்டம் மூலம் மேற்படி உணவு வகைகளை மாணவர்கள் தயாரிக்க அவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அப்பிரதேசத்தில் காணப்பட்ட பாரம்பரிய உணவு, பலகார தயாரிப்பு, கைவினைப்பொருட்கள், பூஞ்செடிகள், இயற்கை மருத்துவப் பொருட்கள் விற்பனை தொடர்பாக எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை மாற்றிக் கொடுக்கும் வகையிலும் சில விழிப்புணர்வூட்டல்களும் உரிய விற்பனையாளர்களால் வழங்கப்பட்டது.
சமூகப் பிரச்சினையாக மாறியுள்ள கைத்தொலைபேசிப் பாவனையை குறைத்து இவ்வாறான பொழுது போக்குகளில் மாணவர் சமுதாயத்தை ஈடுபடச் செய்வதற்கும், சுயதொழில் முயற்சி ஒன்றில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழி வகுத்தது.
EPSI இனது ஏழாவது துறையான தரமான கல்விக்காக பொறுப்புக் கூறலை எடுத்து நோக்கும் போது பாடசாலை கல்வியின் தர உறுதிப்பாடே EPSI இனது பிரதான நோக்கமாகும். அதனூடாக மாணவர் சமூகம் உயரிய பண்புத்தரம் கொண்ட பிரஜைகளாக உருவாக முடியும். இதற்காக குறிப்பிட்ட பாடசாலையில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியளிப்பாளர் வசதியளிப்பு நடவடிக்ககைகளை முன்னெடுக்க உரிய வளவாளர்களைக் கொண்டு வழிகாட்டல், ஆலோசனைகளை வழங்கினார்.
- அமுலாக்கல் திட்ட, வரவு செலவுத்திட்ட அனுமதியினைப் பெற்று அதற்கேற்ப அமுலாக்குதலும் கண்காணித்தலும்.
- வெளிப்படைத்தன்மையான நிதி, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள், தரவட்டம் என்பவற்றை நடாத்துதல்.
- பாடசாலையின் தரவுகள், ஆவணங்கள் பேணலும், முறைமைப்படுத்தலும், தேவையான பொது உரிய மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் வகையில் தயார்நிலையில் இருத்தலும்.
- வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, தரம் கணிப்பீட்டு அறிக்கை, கணக்கறிக்கைகள் போன்றவற்றை பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் முன்வைத்தலும் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கையிடலும்.
- பாடசாலையின் உள்வாரி மதிப்பீட்டுச் செயன்முறையும், அறிக்கைப்படுத்தலும், “SEQI” இனை உயர் மட்டத்தில் பேணுதலும் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிக்கையிடுதலும்.
- சுற்று நிருபங்களுக்கேற்ப பாடசாலை மட்டத்தில் கட்டி எழுப்பப்பட்ட மாணவர், ஆசிரியர் ஒழுக்கக்கோவை ஒன்றை நடைமுறைப்படுத்தல்.
- வெளிவாரிக் கண்காணிப்பு, கணக்காய்வுகள் ஊடாக பாடசாலை கண்காணிப்பு செய்யப்படுவதற்கும், பரிந்துரை செய்வதற்கும் உரிய பகுதியினருக்கு அறிக்கை அனுப்புதல்.
படிமுறை – 04 : மீளாய்வு
குறிப்பிட்ட பாடசாலையில் தன்னால் வழங்கப்பட்ட வசதியளிப்புக்களின் பின்னரான நிலைப்பாடுகள் தொடர்பாக பாடசாலையினால் வழங்கப்பட்ட தகவல்களை உரிய வசதியளிப்பாளர் விளங்கி மதிப்பீட்டுப் படிவத்தின் மூலம் அறிக்கை தயாரித்து வலய EPSI உத்தியோகத்தர், அதிபருக்கு அறிக்கையிட்டார். அதில் மேலும் குறைபாடுடைய விடயங்களை வேறாக குறித்துக்கொண்டார்.
படிமுறை – 05 : மீண்டும் பாடசாலைக்கு விஜயம் செய்தல்.
மேலும் முன்னேற்றப்பட வேண்டிய, அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்களை கலந்துரையாடல் மூலம் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது வசதியளிப்புத் திட்டத்தில் இடைக்கால திருத்தங்களை மேற்கொண்டார்.
படிமுறை – 06 : வசதியளிப்பு அடைவுகளை மதிப்பிடல்.
இரண்டாவது தடவையாகவும், தன்னுடைய வசதியளிப்பு தொடர்பான மதிப்பீட்டினை வசதியளிப்பாளர் மேற்கொண்டார். அதன்போது பாடசாலையின் நிலைமை, திருப்தி, ஓரளவிலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் போதுமானதாகும் எனும் முடிவிற்கு வந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
படிமுறை – 07 : மேற்படி திருப்தியான முடிவினை மிகத் திருப்தியான முடிவாக மாற்றுவதற்காக தான் அளித்த வசதியளிப்புக்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் வசதியளிப்பாளர் மீண்டும் மீண்டும் மேற்படி படிமுறைகளில் தனது வசதியளிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்திட்டங்களையும் அமுல்படுத்துவதற்கான வசதியளிப்புக்களையும் வசதியளிப்பாளர் செய்து வருகின்றார்.
தற்போது நடைமுறையிலிருக்கும் / நடைமுறையிலிருந்த கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும், செயற்திட்டங்களும்