• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home கட்டுரைகள்

பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை தொடர்பான சமகாலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

May 25, 2023
in கட்டுரைகள்
Reading Time: 1 min read
பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை தொடர்பான சமகாலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை (School Supervision / Evaluation of Quality of Education) தொடர்பான சமகாலப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்

By: A.M.Mahir (LLB , MDE , SLAuS)

முன்னைய தொடர் – 04 இல் பாடசாலை மேற்பார்வை மற்றும் பாடசாலை உள்ளக / வெளியக மதிப்பீட்டு முறை தொடர்பான கோட்பாடுகள் மற்றும் சுற்றறிக்கை ஏற்பாடுகளை விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக தொடர் – 05 இல் அவை தொடர்பான சமகாலப் பிரச்சனைகளை விரிவாக ஆராய்வோம்.

• பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டுச் செயன்முறையானது கல்வி அமைச்சின் 31/2014 சுற்றுநிருபத்தின் பிரகாரம் இடம்பெறுதல் வேண்டும். ஆனால் தற்போது சில வலயங்களில் “Zonal Monitoring Panel – ZMP” எனும் பெயரில், அதற்காக வலயமட்டத்தில் குழு ஒன்றை நியமித்து அதன் மூலம் மேற்பார்வை / மதிப்பீடு செய்யப்படுகின்றது.

• அத்துடன் அம்மேற்பார்வை மதிப்பீட்டில் பெறப்படும் புள்ளியினை ஆசிரியர்களின் சம்பள உயர்ச்சிப் படிவங்களில் குறிப்பிட்டே சம்பள உயர்ச்சியும் வழங்கப்படுகின்றது.

• இந்த “ZMP” தொடர்பாக எந்தவொரு அறிவுறுத்தல்களோ, வழிகாட்டல்களோ கல்வி அமைச்சினால் வழங்கப்படவில்லை. இது சில வலயக் கல்வி அலுவலகங்களின் தனிப்பட்ட உள்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதுமையான கண்காணிப்புத் திட்டம் “ZMP” ஆகும். இது பின்வரும் விடயங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலகங்கள் கூறுகின்றன. ஆனால் எழுத்திலான சான்றுகள் காணப்படவில்லை.

  • குறித்த பாடசாலைக்கு “ZMP” தரிசிப்பு தொடர்பாக தகவல் வழங்கல்.
  • குறித்த பாடசாலையில் உயர்தரப்பிரிவிலுள்ள பாடங்களுக்கேற்ப தெரிவு செய்யப்பட்ட வளவாளர்களை மதிப்பீட்டிற்கு அழைத்தல்.
  • ஆசிரியர்களின் கற்றல் – கற்பித்தல் தொடர்பில் மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கல்.
  • பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்தல்.
  • மாணவர்களின் தவணைப்புள்ளிகள் மற்றும் கடந்தகால புள்ளிப் பகுப்பாய்வுகளையும் ஆய்வு செய்தல்.
  • மதிப்பீடு செய்யப்பட்ட பரப்புகள் தொடர்பாக பலம், பலவீனங்களை கலந்துரையாடல்.
  • மதிப்பீட்டு அறிக்கையை வழங்கல்.

மாறாக, கல்வி அமைச்சின் (2018) வலயக் கல்விப் பணிமனைகளைத் தரப்படுத்துதல் (Standarizing Zonal Education Offices) தொடர்பான கைந்நூலில் வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரிவு பின்வரும் பணிகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இப் பணிகள் முறையாக ஆற்றப்பட்டிருக்கவில்லை.

(அ) பாடசாலைத் தொகுதியில் முழுமையானதொரு கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக பாடசாலைக் கலைத்திட்டத்தை அமுலாக்குவதற்குப் பங்களிப்புச் செய்தல். இதில் பின்வரும் விடயங்கள் அடங்கும்.

  • பாட அபிவிருத்திக்குரிய திட்டமிட்ட ஒரு வேலைத் திட்டத்தை வலயப் பாடசாலை முறைமையினுள் அமுலாக்குதல்.
  • இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை விளைதிறன்மிக்கதாக நடத்திச் செல்ல வழிகாட்டலும் வசதிகளை வழங்கலும்.
  • முறைசாரா மற்றும் விசேட கல்வி நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்துதல்.
  • கல்விப்புலத்தினுள் ஆய்வூகளில் ஈடுபடுதல் மற்றும் ஆய்வு முடிவுகளை விளைதிறன் மிக்க வகையில் பயன்படுத்துதல்.

(ஆ) பாடசாலைக் கல்வியில் உயர் பண்புத்தரமொன்றை பராமரித்துச் செல்ல உதவுதல்.

  • பாடசாலை உள்ளக வெளிவாரி மதிப்பீட்டு செயற்பாடுகளை முறையாக நடத்திச் செல்வதற்கான பொறிமுறையொன்றை தயாரித்தல், வழிகாட்டல் மற்றும் செயற்படுத்துதல்.
  • உள்ளக மற்றும் வெளிவாரி மதிப்பீட்டு பெறுபேற்றின் அடிப்படையில் தேவையான பின்னூட்டல்களை வழங்குதல்.
  • கல்விப் பண்புத் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பைப் பேணி வருதல்.
  • தரமான கல்விக்குத் தேவையான மனிதவள அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுத்தல்.
  • கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பகுப்பாய்வுத் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளல்.

(இ) கல்விப் புலத்தினுள் மதிப்பிடல் மற்றும் கணிப்பீட்டுச் செயன்முறை சிறப்பாகச் செயற்படுத்துதல்.

  • பாடசாலை முறைமையினுள் பரீட்சைகள், மதிப்பீடு மற்றும் கணிப்பீட்டு வேலைத்திட்ட ஒழுங்கமைப்பு, ஒன்றிணைப்பு, வழிநடத்துதல் மற்றும் மேற்பார்வை.
  • மதிப்பீடு மற்றும் கணிப்பீடுகளுக்கேற்ப அடைவு மட்டப் பகுப்பாய்வை மேற்கொள்ளல், தகவல்களை அறிக்கைப்படுத்தல், அனுமானங்களும் பின்னூட்டலும்.

• 31/2014 ஆம் இலக்க சுற்று நிருபத்தின் பிரகாரம் பாடசாலையினது ஒட்டுமொத்த செயற்பாடுகளின் பண்புத்தரம் ஒரே பார்வையில் மதிப்பிடப்படுதல் வேண்டும். அவ்வகையிலேயே அச்செயன்முறை ஒழுங்கமைக்கப்பட்டும் உள்ளது. ஆனால் “ZMP” எனும் இந்த புதுமையான கண்காணிப்புத் திட்டத்தில் உயர்தர கலை, வர்த்தக, விஞ்ஞான, தொழிநுட்ப பிரிவுகள் தனியாக கண்காணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

• “ZMP” எனும் வலயக் கல்வி அலுவலக குழுவில் இடம்பெறும் தகுதி குறைந்த ஒரு ஆசிரியர், பாடசாலைகளில் தகுதி கூடிய ஒரு ஆசிரியரை மேற்பார்வை செய்து மதிப்பிட்டு வருதல். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

உண்மை நிகழ்வு : வெளிவாரி மதிப்பீட்டாளர் ஒருவர் தான் ஆசிரியராக கடமையாற்றிய போது மாணவர்களிடம் கொடுத்தே பரீட்சை வினாத்தாள்களை திருத்துவார், வரவு இடாப்பில் வரவிடுவார், பாடப் பதிவுப் புத்தகம் எழுதுவார், சுருக்கமாக சொல்லப்போனால் வகுப்பாசிரியருக்குரிய சகல கடமைகளையும் மாணவர்களைக்கொண்டே செய்வார். ஆனாலும், தற்போது மதிப்பீட்டாளராக பாடசாலைக்கு வருகை தந்து சக ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்வார்.
• “ZMP” இற்காக வலய மட்டத்தில் அமைக்கப்படும் குழுவில் இடம்பெறும் அநேக ஆசிரியர்கள் தங்கள் பாடசாலைகளில் ஒரு சிறந்த ஆசிரியராக செயற்படாதவர்களாக, கணக்காய்வவுகளின் போது இனங்காணப்பட்டுள்ளனர்.

உண்மை நிகழ்வு : ஒருவர் ஆசிரியராக இருந்த காலத்தில் வேறொரு பாடசாலையில் தனது நண்பி ஒருவரின் பாடக்குறிப்புப் புத்தகத்திற்கு புது மேலுறையிட்டு வெளிவாரி மதிப்பீட்டாளர்களுக்கு சமர்ப்பித்து தனக்கான புள்ளியைப் பெற்றுக்கொண்டார். ஆனாலும்; வலய மதிப்பீட்டாளராக தற்போது பாடசாலைக்கு வருகை தரும் வேளைகளில் சக ஆசிரியர்களிடம் குற்றம் குறை காண்பவராக இருக்கின்றார்.

• வெளிவாரி மதிப்பீட்டாளர்களாக ஏனைய பாடசாலை ஆசிரியர்களை நியமிப்பதனால் பாடசாலைகளுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.

உண்மை நிகழ்வு : ஒரு பாடசாலைக்கு வெளிவாரி மதிப்பீட்டாளராக வேறு ஒரு பாடசாலையிலிருந்து சமூகம் அளித்திருந்த ஒரு ஆசிரியர் அப்பாடசாலையில் காணப்பட்ட சில பலவீனங்களை தனது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மத்தியில் விமர்சித்திருந்தார். அக்காலப்பகுதியில் வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட கூட்டமொன்றிற்கு அவ்விரு அதிபர்களும் சமூகமளித்திருந்தனர். அப்போது ஒவ்வொரு பாடசாலையின் கடந்த க.பொ.த (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வு தொடர்பாக விளக்கங்கள் அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வெளிவாரி மதிப்பீட்டிற்கு உட்பட்ட பாடசாலையின் அதிபர் தனது பாடசாலைப் புள்ளிப் பகுப்பாய்வுகள் தொடர்பாக சாதகமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்த வேளையில், மற்றைய அதிபர் எழுந்து, இவரது பாடசாலை வெளிவாரி மதிப்பீட்டின் போது க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது எனவும், தனியார் வகுப்புக்களின் பெறுபேற்று பகுப்பாய்வையே இவர் இங்கு சமர்ப்பித்துள்ளார் எனக் கூற அங்கிருந்த ஏனையோர் சிரித்துக்கொண்டு குறிப்பிட்ட அதிபரை ஏளனமாக நோக்கினர். கோபத்தில் கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறிய அதிபர், இச்சம்பவத்துடன் தொடர்பான குறிப்பிட்ட மேற்பார்வை ஆசிரியரையும், அவரது பாடசாலை அதிபரையும் பழி தீர்க்கும் நோக்கில், வலயக் கல்வி அலுவலக ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர்களின் சுயவிபரக் கோவையில் இருந்த முக்கிய சில ஆவணங்களை திருடி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை அறிந்த அவர்கள் இருவரும் அவ் அதிபரின் பாடசாலைக்குச் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு இறுதியில் அது கைகலப்பில் முடிவடைந்தது.

• வெளிவாரி மதிப்பீட்டிற்காக பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் மேற்பார்வையாளர்கள் / மதிப்பீட்டாளர்கள் பாடசாலையின் வேலைப்பளுவை அதிகரிக்கும் வகையிலும், நேரத்தை வீண் விரயம் செய்யும் வகையிலும் ஆவணங்களை கோருதல். இதற்கான தீர்வாக, மேற்பார்வையின் போது பயன்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டே, வலயக் கல்விப் பணிப்பாளரின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் பாடசாலையின் வருடாந்த அமுலாக்கல் திட்டம், வரவுசெலவுத் திட்டம், நேரசூசி, ஏனைய சில ஆவணங்களின் பிரதி ஒன்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்படுகிறது. அவை மேற்பார்வையின் போது உரிய உதவி / பிரதிக் கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளுக்கு கொண்டு வருதல் வேண்டும். அவ்வாறே ஆசிரியர்களின் கற்பித்தல் மேற்பார்வைக்காக அவர்களின் பாடவேளைகளை தொகுத்து வைத்திருத்தல் வேண்டும். அதை விடுத்து பாடசாலை முகாமைத்துவக் குழுவினரிடம் மீண்டும் மீண்டும் ஆவணங்களை கோருவது தவிர்க்கப்படல் வேண்டும்.

உண்மை நிகழ்வு : ஒரு பாடசாலையின் வெளிவாரி மதிப்பீட்டின் போது, கலைத் திட்டத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் திடீர் சுகயீனம் காரணமாக விடுமுறை பெற்றிருந்தார். நேரசூசி தொடர்பான ஆவணங்கள் அப்பிரதி அதிபரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்களை மேற்பார்வை செய்வதற்காக அவர்களின் அந் நாளுக்குரிய பாடவேளைகளை உடனடியாக தொகுத்துத் தரும்படி வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக வந்திருந்த பிரதிக் கல்விப் பணிப்பார், அதிபருக்கு கட்டளையிட்டதுடன் விடுமுறையில் இருந்த பிரதி அதிபரை கடுமையாக சாடினார். இதனால் கோபமடைந்த பாடசாலையின் அதிபர் குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளருடன் முரண்பட்டார். அன்றைய தினம் மதிப்பீட்டுக் குழுவானது தங்கள் கடமையை செய்ய ஒத்துழைப்பு வழங்க மறுத்த அதிபரின் நடவடிக்கைகளால் மேற்பார்வைக்குழு பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவானது.

• பாடசாலையில் பலவகையான நெருக்கடிகளுக்கும் வேலைப்பளுவிற்கும் இடையில் கடமையாற்றும் ஆளணியினருக்கு மேலதிக சுமையாக வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவினர் செயற்படுதல். இதனைத் தவிர்க்க மதிப்பீட்டிற்கு செல்வதற்கு முன்னர் மதிப்பீட்டுக் குழு அங்கத்தவர்கள் இணைந்து அப்பாடசாலையுடன் தொடர்பான ஆவணங்களை பகுப்பாய்வு செய்து, மேற்பார்வைக்குத் தேவையான சகல விடயங்களையும் தொகுத்து ஒருங்கிணைத்து பூரண ஆயத்த நிலையில், பாடசாலைக்கான மேற்பார்வையினை சரியான திட்டமிடலுடன் மேற்கொள்ளுதல் வேண்டும்.

• தங்களது தனிப்பட்ட பிரச்சினைகளுடன் தொடர்பான ஆளணியினரை பழிவாங்கும் நோக்கோடு பாடசாலை மேற்பார்வைகளை வெளிவாரி மதிப்பீட்டாளர்கள் மேற்கொள்ளுதல்.

உண்மை நிகழ்வு: வெளிவாரி மதிப்பீட்டிற்காக சமூகம் தரும் பெண் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு, அப் பணிப்பாளரின் தாயார் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் சமூக அந்தஸ்து வாய்ந்த வைத்தியர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டு ஒரு தலைப்பட்ச காதல் வசப்பட்டிருந்தார். ஆனால் அவ்வைத்தியருக்கு குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியையுடன் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவ்விடயத்தை பின்னாளில் அறிந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவ் ஆசிரியையுடன் காழ்ப்புணர்ச்சி கொண்டார். அதற்காக வெளிவாரி மதிப்பீட்டின் போது, அநாவசியமாகவும், அநாகரிகமான முறையிலும் குறிப்பிட்ட ஆசிரியையை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் நடந்து கொண்டார். அதாவது மதிப்பீட்டுச் செயன்முறைக்கு அப்பாற்பட்ட விடயங்களை வினவியும், மீளாய்வுக் கூட்டத்தில் காரசாரமாக அவரை குறைகூறிப் பேசியும் அவரை அவமானப்படுத்தியிருந்தார். அத்துடன் குறிப்பிட்ட ஆசிரியை, தன் சக ஆண் ஆசிரியர்களுடன் நெருங்கிப் பழகுவதையும், அவரது நடத்தைகளில் குறைபாடுகளையும் மதிப்பீட்டின் போது தான் அவதானித்ததாக வைத்தியரிடமும் அவதூறான முறையில் கூறியிருந்தார். உளவியல் ஆலோசகரான அவ்வைத்தியரும், பாடசாலையின் அதிபரும், அவ் உத்தியோகத்தரின் அநாகரிகமான நடவடிக்கை தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மேற்பார்வையின் போது, பழிவாங்கும் நோக்கில் அதிகமான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.

• வெளிவாரி மதிப்பீட்டாளர்கள் (குறிப்பாக வலய மட்ட) மதிப்பீட்டுச் செயன்முறையில் அநாகரிகமான நடத்தைகளை வெளிக்காட்டுதல்.

உண்மை நிகழ்வு:
• வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு ஒன்றின் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர், பிரதி அதிபர் ஒருவரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அலுமாரி ஒன்றினை அவரிடம் அனுமதி பெறாமல் திறந்து அதனை ஆராய்ந்து, அவ் அலுமாரியில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த முறைமை தொடர்பாக குறைகூறி விமர்சித்தார். அவ் அலுமாரியில் குறிப்பிட்ட பிரதி அதிபர் தனது உணவுப் பொதியினை பாதுகாப்பிற்காக வைத்திருந்தமையை மீளாய்வுக் கூட்டத்தில் கேலியாக சுட்டிக்காட்டி எள்ளிநகையாடினார்.

• உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர், திருமண வைபங்களுக்கு செல்வது போன்று தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளிவாரி மதிப்பீட்டிற்காக பாடசாலை ஒன்றிக்கு சமூகமளித்திருந்தார். அங்கு தனது அலங்காரங்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பறைசாற்றுவதில் குறியாக செயற்பட்டதுடன், கண்ணியமான முறையில் ஆடைகளை அணிந்திருந்த ஆசிரியைகளையும் குறை கூறினார். அதாவது மாணவர்களின் கண்களையும் கருத்தினையும் கவரும் வண்ணம் ஆசிரியைகள் ஆடை அலங்காரம் செய்ய வேண்டும் எனவும், என்னைப்பார்த்து அவர்கள் திருந்த வேண்டும் எனவும் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பிரச்சாரம் செய்திருந்தார்.

• பாடசாலை ஒன்றில் வலயமட்ட மேற்பார்வை ஒன்றின் போது, பாடசாலை முடிவடைந்த பின்னர் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பகல் போசணத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகல்போசணம் மதிப்பீட்டாளர்களுக்கு பாடசாலையால் வழங்கப்பட்டிருந்தது. (இது தவிர்க்கப்படல் வேண்டும். காரணம் அரச நிதியில் பகல் போசணம் வழங்க முடியாது.) அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் மேற்பார்வைக்காக வருகை தந்த கல்வி அதிகாரி ஒருவர், அப்பாடசாலை அதிபரிடம், தனது கணவருக்கும், பிள்ளைக்குமாக இரண்டு பகல்போசண உணவுப்பொதிகளை பாடசாலை காவலாளியிடம் தனது வீட்டுக்கு கொடுத்தனுப்புமாறு பணித்தார். தன்னை அறியாமல் அவ்வதிபர் முகம் சுளித்துக்கொண்டு உணவுப்பொதிகளை ஏற்பாடு செய்வதற்காக செல்வதை அவதானித்த வலயக் கல்விப் பணிப்பாளர், குறிப்பிட்ட நபரின், இவ் அநாகரிக செயலை வன்மையாகக் கண்டித்தார். இறுதியில் அனைத்து பகல்போசணப் பொதிகளும் முடிவடைந்தமையால் அதிபர் தனது சொந்த செலவில் மற்றுமொரு உணவகத்தில் பொதிகளைப் பெற்று அந்நபரின் வீட்டுக்கு அனுப்பியிருந்தார்.

• மேற்பார்வை என்பதும், மதிப்பீட்டுச் செயன்முறைகள் என்பதும் வெளிவாரி மதிப்பீட்டாளர்களாக செயற்படும் வலயக் கல்வி அலுவலகத்தினரின் கடமைகளில் ஒன்றாகும். ஆனால் சமகாலத்தில் மேற்பார்வைக் குழுவினர் மேற்பார்வையில் / மதிப்பீட்டு செயன்முறையில் ஈடுபட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நோக்கத்தில் பாடசாலைகளில் விதம் விதமாக புகைப்படநிகழ்வு (Photo shoot) நடாத்தி அவற்றை கடமை நேரத்திலேயே முகநூலில் (Facebook)  பதிவிட்டு தங்களை புகழ்பவர்களுடன் அளவளாவியும், அதற்கெதிராக கண்டனம் தெரிவிப்போருடன் முரண்பட்டும் நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றனர்.

உண்மை நிகழ்வு: குறிப்பிட்ட ஒரு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் மேற்பார்வையாராக அல்லது மதிப்பீட்டாளராக அல்லது தனக்குரிய ஏனைய கடமைகளை நிறைவேற்றுபவராக செயற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் புகைப்படம் அல்லது காணொளியாக தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து அதனை நேரகாலம் தவறாமல் முகநூலில் (Facebook) பதிவிட்டு வருவார். அதன் மூலம் கௌரவம் கிடைப்பதாக எண்ணி பெருமிதம் அடைந்தவராக ஆசிரியர்களை துச்சமாக எண்ணி நடத்தினார். முகநூலில் (Facebook) அவரை புகழ்ந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு மேற்பார்வையின் போது கூடிய புள்ளிகளும் வழங்குவார். இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உரிய உதவிக் கல்விப் பணிப்பாளரை அழைத்து வலயக் கல்விப் பணிப்பாளர் கண்டித்திருந்தார்.

• வெளிவாரி மதிப்பீட்டாளர்களுக்கும் பாடசாலை ஆளணியினருக்குமிடையில் மதிப்பீட்டின் போது முரண்பாடுகள் ஏற்படுதல்.

உண்மை நிகழ்வு: ஒரு பாடசாலையில் வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டின் போது மேற்பார்வையாளர்கள் நேரகாலத்துடன் சமூகமளிக்காத ஆசிரியர்களை அவர்கள் பாடசாலையினுள் நுழையும் போதே குறைகூறி விமர்சிக்கத் தொடங்கினர். கையொப்பமிடும் வரவுப்பதிவுப் புத்தகத்தை மதிப்பீட்டுக் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த பிரதிக்கல்விப் பணிப்பாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாமதமாக வருகை தந்த ஆசிரியர்களை ஒப்பமிட விடாமல் தடுத்துக்கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஆண் ஆசிரியர் ஒருவர், வரவுப் பதிவுப் புத்தகத்தை பிரதிக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து கைப்பற்ற எடுத்த முயற்சியில் அப்புத்தகம் சேதமடைந்தது. இது தொடர்பாக அதிபர் தனது அதிருப்தியை வெளியிடும் முகமாக மதிப்பீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தார். எனவேதான் மதிப்பீட்டுச் செயன்முறைகளின் போது அல்லது மேற்பார்வையின் போது உரிய சுற்று நிருபங்களை பின்பற்றி ஒழுகுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி வருகின்றது. பாடசாலைக்கு தாமதமாக வருதல் தொடர்பாக 1981/ 13 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் அறிவுறுத்துகின்றது. இச்சுற்றுநிருபத்தின் பிரகாரம் செயற்பாடுகள் பாடசாலையில் நடைபெறுவதை மதிப்பீடு செய்வதும், தேவையான பின்னூட்டல்களை வழங்குவதும், அதனை நெறிப்படுத்துவதுமே மதிப்பீட்டாளரின் கடமையூம் பொறுப்புமாகும்.

• வெளிவாரி மதிப்பீட்டாளர்களின் கண்ணியமற்ற பேச்சும், ஆசிரியர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் சமகாலத்தில் அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆசிரியர்கள் என்பதை விட மனிதன் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சுயகௌரவம் உண்டு. அதனை பாதுகாக்கும் வகையில் மதிப்பீட்டாளர்கள் நடந்துகொள்ள வேண்டும். “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” எனும் பழமொழிக்கு ஏற்ப ஒரு மதிப்பீட்டாளரின் பேசும் விதம் அமைந்தால் பாடசாலை ஆளணியினரின் மனப்பாங்குகளில் போதிய சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

• அநேக வெளிவாரி மதிப்பீட்டாளர்கள் எப்போதும் குறைபிடித்து விமர்சிப்பவர்களாக இருத்தல். இது ஒரு பாரிய பிரச்சனையாக சமகாலத்தில் இடம்பிடித்துள்ளது. அநேக பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீடு வாய்த்தர்க்கத்திலேயே முடிவடைகிறது. குறை கூறுவதை தவிர்த்து வெளிவாரி மதிப்பீட்டாளர்கள் அவற்றை நாசுக்காக பண்பான வார்த்தைகளில் சுட்டிக்காட்டி அவற்றை பாடசாலைகளில் நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளை புத்திசாதுர்யமாக அமுல்படுத்துதல் வேண்டும்.

உண்மை நிகழ்வு: பாடசாலை ஒன்றில் மாணவர் விடுகைப்பத்திரம் (B59) வழங்கப்படுகையில் கல்வி அமைச்சின் 2008/39 ஆம் இலக்க சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை பூரணமாக திருப்திப்படுத்தாத வகையில் வழங்கி வருவது மேற்பார்வையின் போது அவதானிக்கப்பட்டது. அதாவது அதில் பிரதி அதிபர் ஒப்பமிட்டு வழங்கி வந்திருந்தமையும், அப்பொறுப்புக்கள் ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தமையும் தெரியவந்தது. (விடுகைப்பத்திரம் அதிபரால் மாத்திரமே வழங்கப்படல் வேண்டும்.) இது தொடர்பாக குறிப்பிட்ட மேற்பார்வையாளர், உரிய ஆசிரியர், பிரதி அதிபர், மற்றும் அப்பாடசாலை அதிபர் ஆகிய மூவரையும் தனியாக அழைத்து 2008/39 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரதிகளையும் அவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்து, இதற்கு முரணாக தங்கள் பாடசாலையில் நடைபெறும் செயற்பாடுகளை குறிப்பிடும்படி அவர்களிடம் கூறினார். மூவரும் தங்கள் சார்பில் இடம்பெற்ற குறைபாடுகளை உணர்ந்து, மேற்பார்வையாளரின் உதவியுடன் மாணவர் விடுகைப்பத்திரம் வழங்கப்படும் போது கவனிக்க வேண்டிய விடயங்களை கருத்தில்கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றனர்.
• குறிப்பிட்ட வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையில் பாரபட்சமான முறையில் மதிப்பீட்டுச் செயன்முறைகள் இடம்பெற்று வருதல்.

உண்மை நிகழ்வு:  வலயக் கல்வி அதிகாரிகளின் கைப்பிள்ளைகளாக செயற்படும் சில பாடசாலை அதிபர்களில் ஒருவர் குறிப்பிட்ட ஒரு வலயக் கல்வி அலுவலகத்தினரை உபசரிப்பதில் பின்னிற்கமாட்டார். தனது பாடசாலையில் எந்தவொரு நிகழ்வு இடம்பெற்றாலும் (வைபவங்கள், பகல்போசண நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகள், மத ரீதியான நிகழ்வுகள்) அதில் பரிமாறப்படும் சிற்றுண்டிவகைகள், பகல் உணவுப்பொதிகள், பரிசுப்பொருட்கள் என அனைத்திலும் ஒரு பகுதியினை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார். இதனால் அப்பாடசாலையினருக்கு வலயக் கல்வி அலுவலகத்தில் தனிப்பட்ட மரியாதையும், முன்னுரிமையும் வழங்கப்படும். அப் பாடசாலையில் மதிப்பீட்டுச் செயன்முறையானது பெயரளவில் நடைபெறும்.அதன் இறுதியில் நடைபெறும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் மிக விமர்சையாக கோலாகலத்துடன் இடம்பெறுவதுடன், வலயத்தில் அதிகூடிய வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டுப்புள்ளிகளை அப்பாடசாலை பெற்று முதலிடம் வகிக்கும். அது தொடர்பான விவரணங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும். வலயத்தில் இடம்பெறும் சகல கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் அனைத்திலும் அப்பாடசாலையும் அதன் அதிபரும் புகழ்ந்து பேசப்படுவர். அதே வலயத்தில் சுற்றுநிருபங்களுக்கேற்பவும், நேர்மையான முறையிலும், அதிகாரிகளுக்கு முறையற்ற வகையில் அடிபணியாத பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் இவ்வாறான கூட்டங்களில் வஞ்சிக்கப்பட்டு அவமானப்படும் வகையில் குற்றம் சாட்டப்படுவர்.

• வெளிவாரி மதிப்பீட்டாளர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு மேலதிகமாக பாடசாலை தொடர்பான பிரச்சனைகளை ஆராய்வோமெனில், கணிசமான பாடசாலைகளில் 31/2014 ஆம் இலக்க சுற்றுநிருபம் பூரணமாக அமுல்படுத்தப்படவில்லை. கடந்த எனது தொடர் – 04 இல் அவை தொடர்பான தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப செயற்பாடுகளை திட்டமிட்டு அமுல்படுத்தி மதிப்பீட்டுச் செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டும்.

• 31/2014 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பாடசாலை ஆளணியினருக்கு போதிய விளக்கங்கள் வழங்கப்படாமை. ஒவ்வொரு மதிப்பீட்டுத்துறை ரீதியாக ஆசிரியர்களுக்கு செயலமர்வுகள் நடாத்தப்படுதல் வேண்டும். உள்ளக மதிப்பீட்டினையும் வலுப்படுத்துதல் வேண்டும். உள்ளக மதிப்பீட்டுச் செயன்முறைகள் சரியான முறையில் நடைபெறும் போது அவை தொடர்பாக ஆசிரியர்கள் / ஆளணியினர்கள் பல அனுபவங்களைப் பெற்று அதன் மூலம் முறையாக தங்களை வளப்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக மாணவர் அடைவுமட்டம் தொடர்பான கணித்தல்களை மேற்கொள்ளும் வழிமுறைகள், பேண வேண்டிய ஆவணங்கள், கோவைப்படுத்தும் முறைமைகள், சமூகத்துடனான தொடர்புகள் கட்டி எழுப்பப்படக்கூடிய வழிகள். போன்றவை தொடர்பாக புதுப்புது எண்ணக்கருக்களும், யோசனைகளும் அனுபவங்களினூடாக தோற்றுவிக்கப்படும்.

• வெளிவாரி மதிப்பீடு நடைபெற உத்தேசிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் லீவு எடுத்தல். இவ்வாறாக லீவு கோரும் ஆசிரியர்களின் லீவினை அதிபர் அனுமதிக்கக்கூடாது. (உண்மையில் தவிர்க்க முடியாத லீவுகளைத் தவிர) மீறி லீவு பெறும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். ஓரிருவருக்கு இவ்வாறாக நடைபெறும் பட்சத்தில் ஏனையோர் அனைவருக்கும் மனரீதியான ஒரு பய உணர்வு தூண்டப்பட்டு இப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

• மேற்பார்வையின் போதான அவதானிப்புக்கள் அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பங்களில், அவை தொடர்பாக அதிபர் சரியான தீர்வுகளையும், பின்னூட்டல்களையும் வழங்காமல் புறக்கணிப்பதால் உள்ளக மேற்பார்வையினரின் ஆர்வம், செயற்றிறன் குறைவடைதல். சில சிக்கலான மேற்பார்வை அவதானிப்புக்கள் நேரடியாக மேற்பார்வையாளரினால் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாதவையாக இருக்கும் போது, அதிபரானவர் EPSI வசதியளிப்பவர் மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி இருக்கும். அவற்றை கருத்தில்கொண்டு செயற்பட்டால் மாத்திரமே மேற்பார்வையாளரின் அவதானிப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததாக பொருள்கொள்ள முடியும்.

உண்மை நிகழ்வு: ஒரு பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரின் கற்றல் – கற்பித்தல் மேற்பார்வை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று அவ்வாசிரியரின் மகளை ஒத்த வயதுடைய உதவி அதிபருக்கு ஏற்பட்டது. குறித்த நாளில் அவ்வாசிரியர் லீவில் இருந்தார். அவரது குறித்த வகுப்பிற்கு குறித்த பாடவேளைக்கு அவ்வூதவி அதிபர் சென்று மாணவர்களின் அப்பியாசக்கொப்பிகளை மேற்பார்வை செய்தார். ஓரிரு மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகள் மாத்திரமே திருத்தப்பட்டிருந்தது. அநேக மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளில் அதிக இடைவெளிகளே விடப்பட்டிருந்தது. அவ்வுதவி அதிபர் மாணவர்களிடம், ஏன் இவ்வாறு இடைவெளி விடப்பட்டுள்ளது என வினவிய போது அதில் ஒரு மாணவன், அவ்வாசிரியர் முன் வரிசை மாணவர்களுக்கு மாத்திரமே கற்பிப்பார் எனவும், ஏதும் இடையில் வினா எழுப்பினால் மோசமான வார்த்தைகளால் ஏசுவார் எனவும், விளங்காமல் எவ்வாறு நாங்கள் பயிற்சி செய்வது எனக் கூறினான். குறித்த கணிதப் பாட ஆசிரியர் திருத்தி கையொப்பமிட்ட ஒரு கணித்தல் முற்று முழுதாக பிழையாக இருந்ததை அவ் உதவி அதிபர் அவதானித்து, அக்கணித்தலை செய்திருந்த மாணவனிடம் அது பிழை என்று சுட்டிக்காட்டினார். அதற்கு அம்மாணவன், அது பிழை என்று எனக்கும் தெரியும், நான் வெளியில் மேலதிக வகுப்பில் சரியாகத்தான் கற்றிருந்தேன். பயத்தில் அதை சேருக்கு நான் கூறாமல், அவர் கற்பித்த முறையில் பயிற்சியை செய்து காட்டினேன் என்றான். இதனால் மனவேதனையடைந்த உதவி அதிபர், இவ்விடயங்களை அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் அவ்வதிபர், இது தொடர்பாக குறித்த ஆசிரியருக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காததோடு, ஒரு தீர்வாக அடுத்த வருடம் அவரை நேரசூசி வழங்காது விடுவித்து சம்பந்தமில்லாத வேறு பொறுப்புக்களை வழங்குமாறு பிரதி அதிபர் நிர்வாகம், பாடவிதானம் ஆகியோருக்கு கட்டளையிட்டார். இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தின் பின் அவ்வாசிரியர், மேற்பார்வை செய்த உதவி அதிபரிடம் நேற்று முளைத்த காளான், எங்களை பிழை பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கூறி நகைத்துவிட்டுச் சென்றார். மேற்படி சம்பவத்தில் ஆராய வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

  •  மேற்பார்வையில் அதிபரின் கடமைப் பொறுப்புக்கள்
  • ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி
  • முறையான கற்றல் – கற்பித்தல் செயன்முறைகள்
  • மாணவர்களின் உரிமைகள்
  • ஆசிரியர் ஒழுக்கம்
  • தனியார் வகுப்புக்கள் நடாத்தல்

இவ்வாறான ஆழமான விடயங்கள் ஆராயப்படவேண்டியதாக உள்ளது.

• மேற்பார்வைக் குறிப்புக்கள், அவதானிப்புகள் மற்றும் ஆவணங்கள் கோவைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் தொடர்பாக சரியான முறைமையொன்று காணப்படாமை.

• அதிபரானவர் தனக்கு நெருக்கமான குறிப்பிட்ட ஆசிரியர்களை மேற்பார்வைக்கு உட்படுத்தாது சலுகைகள் வழங்குவதன் காரணமாக ஏனைய ஆசிரியர்கள் மேற்பார்வைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல்.
சமகாலத்தில் சில அதிபர்கள், தங்களுக்கு நெருக்கமான மந்திராலோசனை வழங்கும் சிலரை கையாட்களாக வைத்திருந்தால் மாத்திரமே ஒரு பாடசாலையை வெற்றிகரமாக நடாத்திச்செல்ல முடியும் என பிழையான ஒரு எண்ணத்தைக் கொண்டுள்ளனர். இது அதிபர்களின் தன்னம்பிக்கையின்மையையும், ஆளுமையின்மையையும் பறைசாற்றப் போதுமானதாகும். அந்த சிலர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சலுகைகளை பாடசாலைகளில் அனுபவித்து வருகின்றனர். சகல அதிபர்களும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம், இந்த சிலர்தான் பாடசாலையின் வீழ்ச்சிக்கும், பாடசாலையின் நற்பெயர் கெடுவதற்கும் அத்திவாரமிடுகின்றனர். அது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அவர்களே நம்பிக்கை துரோகிகளாகவும், அதிபருக்கு எதிரானவர்களாகவும் மாறுகின்றனர்.

உண்மை நிகழ்வு 1 : ஒரு பாடசாலையின் அதிபரின் கையாட்களாக ஆறு பேர் வலம் வந்துகொண்டிருப்பார்கள். அதில் இரண்டு பேர் மிகப்பிரதானமானவர்களாக இருந்தனர். அவ்விருவரையும் கலந்தாலோசிக்காமல் எந்தவொரு தீர்மானத்தையும் அதிபர் எடுக்க மாட்டார். அவர்களிருவரின் ஆலோசனைகளை மற்றைய நால்வரும் செயற்படுத்துவர். அவர்கள் அறுவரும், நினைத்த நேரம் பாடசாலைக்கு சமூகமளிப்பார், பாடசாலையை விட்டு வெளிச்செல்வர். நேரசூசி வழங்கப்பட்டிருந்தும் அதனை முகாமைத்துவ உதவியாளர்கள் கற்பித்து வந்தனர். அதிபரின் உளவாளிகளாகவும் செயற்பட்ட இவர்கள், யாராவது அதிபருக்கு எதிராக தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டால் அது உடனடியாக அதிபருக்கு தெரிவிப்பர். எந்தவொரு மேற்பார்வையுமின்றி கடமைகளுமின்றி சுதந்திரமாக இருந்த இவர்கள் தொடர்பான ஒரு முறைப்பாடு வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றது. அது தொடர்பான விசாரணைக்காக வந்திருந்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அதிபர் செயற்பட்டமையால் அவர் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு ஆளானார். அதன் பின்னர் பல ஆசிரியர்கள் அதிபருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இவர்களைப் போன்று நாங்களும் சலுகைகளை அனுபவிப்போம் எனக்கூறி பாடசாலையின் வீழ்ச்சிக்கு காரணமாகினர். நிலைமை மேலும் மோசமாகி சரிசெய்ய முடியாத நிலைக்கு வந்ததும், குறிப்பிட்ட ஆறு ஆசிரியர்களும் அதிபருக்கு எதிராக மாறி, புதிய ஒரு அதிபரை நியமிப்பதில் ஆர்வம்காட்டினர்.

உண்மை நிகழ்வு 2 : இதை விட ஒரு படி மேலே சென்ற ஒரு அதிபர் தனது ஆலோசகராக ஒரு பெண் ஆசிரியையை நியமித்திருந்தார். சகல முடிவுகளையும் அவ்வாசிரியையின் அனுமதியின் பின்னரே அதிபர் நடைமுறைப்படுத்துவார். எந்தளவுக்கு என்றால் எந்த மாணவி எந்த சமாந்தர வகுப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பதில் கூட அவ்வாசிரியையின் அனுமதி பெறப்படும். இதனால் கோபமடைந்த நிருவாக / முகாமைத்துவ அங்கத்தவர்கள் அதிபருக்கு எதிராக செயற்பட்டனர். அத்துடன் அவ்வாசிரியையுடன் தகாத உறவு அதிபருக்கு இருப்பதாகவும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். இந்தப் பிரச்சினை அதிபரினதும், ஆசிரியையினதும் தனிப்பட்ட குடும்ப வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு சமூகப்பிரச்சினையாக மாறியது.
இவ்வாறான நிகழ்வுகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும், ஒரு தலைவராக, சிறந்த முகாமையாளராக, ஆக்கபூர்வ சிந்தனைகளுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் அதிபரானவர் தன்னை வளப்படுத்திக்கொள்வதொடு, அதிபருக்கு உதவியாக, உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்ட குழு அங்கத்தவர்களின் ஒத்துழைப்புக்கள், ஆலோசனைகளோடு பாடசாலையொன்றை நிர்வகிக்கும் திறனை அதிபர்கள் கொண்டிருத்தல் வேண்டும். பிரச்சினைகளை, முரண்பாடுகளை புத்திசாதுர்யமாக கையாண்டு பாடசாலை ஆளணியினரை பாரபட்சமின்றி வழிநடத்துவதும் அதிபரின் பொறுப்பாகும்.

• ஆசிரியர்கள் வருட ஆரம்பத்தில் தங்களது வேலைத்திட்டங்களை தயாரிக்கும் வகையில் அவர்களுக்கான பாட ஒதுக்கீடுகள், கடமைப் பொறுப்புக்கள் முன்னைய வருடத்தின் மூன்றாம் தவணை விடுமுறையில் வழங்கப்படாமையினால் ஏற்படும் தாமதங்கள் மேற்பார்வையில் தாக்கம் செலுத்துதல்.

06/2021 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் வழிகாட்டலுக்கேற்ப ஒரு பாடசாலையின் பணிக்குழுவினர் தீர்மானிக்கப்படுவதொடு, அவர்களுக்கான கற்பித்தல் பாடவேளைகள் குறைந்தபட்சம் 30 ஆக பூர்த்திசெய்யப்படும் வகையில் நேரசூசி வழங்கப்படுதல் வேண்டும். அத்துடன் இந்த குறைந்தபட்ச 30 பாடவேளைகளை பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள், விளையாட்டு, அழகியல், மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் பொறுப்பை ஏற்று, அதற்காக விஷேட வருடாந்த திட்டமொன்றை தயாரித்து வருடாந்த நேர அட்டவணையையுடன் அனுமதி பெற வேண்டும். (இதற்கான மாதிரித் திட்டத்தை, எதிர்காலத்தில் நேரசூசியுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகளும் தீர்வுகளும் எனும் தொடரில் எதிர்பாருங்கள்…) மேற்படி நேரசூசி, பொறுப்புக்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு எதிர்வரும் வருடத்தில் வழங்கவுள்ள ஒதுக்கீடுகளை இந்த வருடத்தின் டிசம்பர் மாத ஆரம்பத்தில் வழங்க வேண்டும். (தற்போது கல்வி ஆண்டு ஏப்ரலில் தொடங்கியிருப்பதால் மார்ச் மாதம் ஒதுக்கீடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்). ஒருமாத கால இடைவெளியில் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுப் பாடங்களுக்கான கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளுக்கும், ஏனைய செயற்பாடுகளுக்கும் முன்னாயத்தங்களை செய்துகொள்ள இது வசதியாக இருப்பதோடு, கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் மேற்பார்வை செயற்பாடுகளுக்கும் இலகுவானதாக அமையும்.

• அநேக ஆசிரியர்கள் வருட ஆரம்பத்தில் தங்களது வேலைத்திட்டங்களை தயாரித்து கலைத்திட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதி அதிபரிடம் அனுமதி பெறாதிருத்தலும் வாராந்தம் பாடக்குறிப்புக்கள் எழுதப்பட்டு அனுமதி பெறப்படாதிருத்தலும்.
இவ்விடயங்கள் அநேக பாடசாலைகளில் சாதரணமாக காணக்கூடிய ஒரு பிரச்சினை என்பதை விட ஒரு சவாலாகக்கொள்ளலாம். அநேக ஆசிரியர்கள் எந்தவொரு முன்னாயத்தமும் இன்றி வகுப்பறையினுள் சென்று வெறும் “Chalk & Talk” என்ற பாரம்பரிய கற்பித்தலிலேயே காலத்தை கடத்தி வருகின்றனர். இதனை மாற்றியமைப்பதில் பல இடர்பாடுகள் நம் நாட்டில் சம காலத்தில் அதிகரித்துக் காணப்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும். எத்தனையோ ஆசிரியர்களின் கற்பித்தல் திட்டங்கள், புத்தாக்கங்களுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பது ஒரு சவாலாக அமைகின்றது. இதனை மாற்றியமைக்க ஆசிரியர்கள் கிடைக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தும் வகையில் தனது வேலைத்திட்டங்களை / பாடக்குறிப்புக்களை தயாரிக்க வழி காட்டப்படுதல் வேண்டும். மூன்றாம் தவணை விடுமுறை காலத்தில் பாடரீதியான தரவட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களது வேலைத்திட்டங்களை / பாடக்குறிப்புக்களை தயாரிக்க வழிகாட்டுதல், இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும், இதனால் கல்வியின் சமத்துவமும் பேணப்படும். கூட்டாக இயங்கும் போது, பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகள் பரிமாறப்பட்டு, புரிந்துணர்வுடனான சிறந்த வேலைத்திட்டமொன்றை இலகுவாக தயாரித்துக்கொள்ள முடியும்.

• புள்ளிப்பகுப்பாய்வுகள் செய்யப்பட வேண்டிய முறைமைகள் பாடசாலைக்குப் பாடசாலை வித்தியாசப்பட்டிருத்தல்.
கல்வி அமைச்சின் 31/2014 ஆம் இலக்க சுற்றுநிருபம், கையேட்டின் முதலாம் மதிப்பீட்டுத்துறையான மாணவர் அடைவுமட்டம் தொடர்பான கணித்தல்கள், புள்ளிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய முறைகள் மிகத்தௌpவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் சகல பாடசாலைகளுக்கும் வழிகாட்டல்களை வழங்க வலயக் கல்வி அலுவலகங்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அத்துடன் உரிய அமைப்பில் புள்ளிப் பகுப்பாய்வுப் படிவங்கள் தயாரிக்கப்பட்டு சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும். அவை தொடர்பாக அதிபர்கள், தங்கள் ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளின் ஊடாக தெளிவுபடுத்துதல் வேண்டும்.

• ஆசிரியர்களுக்கான கடமைப் பொறுப்புக்கள்இ வேலைத்திட்டங்கள் அனுமதிக்காக நேரசூசியுடன் இணைந்தவாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்படாமை.
இது தொடர்பாக போதிய விளக்கங்கள் அதிபர்களுக்கு இன்னம் கிடைக்கப்பெறவில்லை என்பதை கணக்காய்வுகளின் போது அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக கணிதப் பாடத்திற்கு 30 பாடவேளைகள் வழங்கக் கூடியவாறு 6 ஆசிரியர்கள் (30 X 6 = 180 பாடவேளைகள்) போதுமானதாக உள்ள ஒரு பாடசாலையில் 9 ஆசிரியர்கள் காணப்படுவார்களாயின் 9 ஆசிரியர்களுக்கும் 20 பாடவேளைகள் (20 X 9 = 180 என்றவாறு) சமனாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இது முற்றிலும் பிழையான நடைமுறையாகும். சிரேஷ்ட அடிப்படையில் பாடவேளைகள் குறைந்தபட்சம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட பின் மேலதிக ஆசிரியர்களுக்கு 06/2021 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் வழிகாட்டலுக்கேற்ப விளையாட்டு, அழகியல், மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக விஷேட வருடாந்த திட்டமொன்றை தயாரித்து வருடாந்த நேர அட்டவணையையுடன் அனுமதி பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் ஆசிரியர்களின் திறன்கள், திறமைகள், அவர்களின் ஆர்வம் எது போன்றவற்றை இனம்காண்பது இங்கு முக்கியமான ஒரு விடயமாகும்.

• மேற்பார்வைகள் இடம்பெற்றாலும், அவை தொடர்பான பின்னூட்டல்கள், மீளாய்வுக் கூட்டங்கள் உரிய காலத்தில் நடாத்தப்பட்டு மேலதிக திட்டங்கள் / நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை.
தினமும், உள்ளக மேற்பார்வைக்குழு அங்கத்தவர்கள் மேற்பார்வை என்ற பெயரில் வெறுமனே பாடசாலையைச் சுற்றி வருவதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. குறிப்பிட்ட விடயங்களை நோக்காகக்கொண்டு அதனை எவ்வாறு மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டத்துடன் மேற்பார்வையில் ஈடுபடுதல் வேண்டும். அதன் போதான அவதானிப்புக்களில் சிறந்தவைகள் பாராட்டப்பட்டு மேலும் அதனை முன்னேற்றும் வகையிலான திட்டங்கள் / ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறே குறைபாடுகள் மீளாய்வுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு பரிகார நடவடிக்கைகள் செய்யப்படுதல் வேண்டும்.
உதாரணமாக பாடசாலையொன்றில் “SMART” வகுப்பறைக்கற்பித்தல் முறையில் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் பாராட்டப்படவேண்டியவர். ஆனால் அவ்வாசிரியருக்கு நேரடியாக இணையத்தளங்களில் இருந்து பாடத்துடன் தொடர்பான மேலதிக விடயங்களை தரவிறக்கம் செய்வதற்கான செயன்முறையில் அனுபவமற்றிருந்தது. எனவே அதற்கான வசதிகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் மீளாய்வுக் கூட்டங்களில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அவ்வாறே பாரம்பரிய முறையில் கற்பிக்கும் குறைபாடுடைய ஆசிரியர்க்கு சகபாடி வழிகாட்டல், மாதிரிக்கற்பித்தல் முறைமைகள மூலம் அவர்களை வளப்படுத்திக் கொள்வதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.

• வெளிவாரி மேற்பார்வையாளர்கள் / ஆசிரிய ஆலோசகர்கள் உரிய நேரத்திற்கு மேற்பார்வைக்காக சமூகமளிக்காதிருத்தல்/ சமூகமளிக்கும் பாடசாலையில் மிகக் குறைந்த நேரம் மேற்பார்வை செயற்பாடுகளில் ஈடுபடுதல் / ஈடுபடுவதைப்போன்று பாசாங்கு செய்தல்/ பாடசாலைகளுக்கு சென்று மேற்பார்வையிடாமல், மேற்பார்வை செய்ததாக சோடிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தல், ஆசிரியர்களின் பாடரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாதிருத்தல், ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலைத் தரிசிப்பின் போது மாதிரிக்கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடாதிருத்தல்.
இவ்விடயங்கள் தொடர்பாக வலய / மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

• வெளிவாரி மேற்பார்வையாளர்கள் / ஆசிரிய ஆலோசகர்கள் தங்களின் நண்பர்களாக உள்ள ஆசிரியர்களை / ஆளணியினரை மேற்பார்வை / மதிப்பீடு செய்யாமல் போலியாக புள்ளிகளை வழங்குதல். அவ்வாறே தன்னை சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச்சென்று அல்லது வேறு வழிகளில் உபசரிக்கும் ஆசிரியர்களுக்கும் போலியாக புள்ளிகளை வழங்குதல்.
அரசாங்கம் தங்களை நம்பி, சம்பளமும் கொடுத்து ஒப்படைத்த பொறுப்புக்களை மனச்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் செய்யவேண்டியது நமது கடமையாகும். சகல மதங்களும் நேர்மையான உழைப்பையும், ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளவே வழிகாட்டுகின்றது.

எனவே அவற்றை கருத்தில் கொண்டு இவர்கள் செயற்படுதல் வேண்டும்.

• சில வெளிவாரி மேற்பார்வையாளர்கள் / ஆசிரிய ஆலோசகர்கள் தாங்கள் மேற்பார்வை / மதிப்பீடு செய்யூம் ஆசிரியர்களிடம் சில அன்பளிப்புப் பொருட்களையும், கடனாக குறிப்பிட்ட தொகையையும் கேட்டுப்பெற்றதாக சில முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறல்.

• மேற்பார்வையாளர்கள் மேற்பார்வைக்கு தேவையான விடயங்களில் போதிய அறிவினைப் பெறாதவர்களாக இருத்தல் அல்லது, தன்னிடம் உள்ள விடயங்களை எடுத்துக்கூறுவதில் சிரமப்படுதல். (உதாரணம் : ஆளணி, மாணவர் விபரம், பாடசாலை மூலத் தரவுகள், ஆசிரியர் அறிவுறைப்பு வழிகாட்டி, பாடத்திட்டம், கல்வி சீர்திருத்தங்கள்…போன்றவை )
மேற்பார்வையாளர் / மதிப்பீட்டாளர் ஒருவர் எப்போதும் தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவாராக இருத்தல் வேண்டும். பொது அறிவு விடயங்கள், புதிய கற்பித்தல் நுட்பங்கள், தொழிநுட்ப அறிவு, சமகாலத் தேவைகள், சமகாலப்பிரச்சினைகள், நாட்டு நடப்புக்கள், உலக விடயங்கள், சமயரீதியான, கலாச்சார அம்சங்கள், தொடர்பாக பல்வேறு துறைகளிலும் தேடல் உள்ளவராக தன்னை மாற்றிக்கொள்வதொடு, அவற்றை தேவையான சந்தர்ப்பங்களில் பொருத்தமான வார்த்தைப் பிரயோகங்களை கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வு மிக்க ஒரு மேற்பார்வையாளர் / மதிப்பீட்டாளர் ஆசிரியர்களை / ஆளணியினரை இலகுவாக கவர்ந்து அதனூடாக சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க முடியும்.

• சகபாடி வழிகாட்டல்(Peer Guidance) தொடர்பான விளக்கங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருத்தல்.

சகபாடி வழிகாட்டல் தொடர்பாக, கல்வி அமைச்சானது 2019 ஆம் ஆண்டு “பாடசாலைமட்ட ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி” (School Based Professional Teacher Development – SBPTD) வழிகாட்டல் கையேடு ஒன்றினை உலக வங்கியின் அனுசரணையுடன் வெளியிட்டுள்ளது. (இது தொடர்பாக கல்வி அமைச்சின் 2019/45 ஆம் இலக்கச் சுற்றறிக்கையை வாசித்து அறிக). அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகபாடி மேற்பார்வை, வழிகாட்டல் ஆசிரியர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு புரிந்துணர்வையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய ஒரு வழிமுறையாகும். அதனை நடைமுறைப்படுத்துவதில் பாடசாலை முகாமைத்துவக் குழு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். SBPTD தொடர்பாகவும், அதன் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பாகவும் அடுத்தடுத்த தொடர்களில் ஆராய்வோம்.

• உரிய காலப்பகுதிகளில் மேற்பார்வை /  மதிப்பீட்டுச்செயன்முறைகள் நடைபெறாமை.

31/2014 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரம் முதாலம் தவணைக்கான மதிப்பீட்டுச்செயன்முறைகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னரும் இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டுச்செயன்முறைகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னரும் மூன்றாம் தவணைக்கான மதிப்பீட்டுச் செயன்முறைகள் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னரும் இடம்பெறுதல் வேண்டும். அதற்கேற்ற வகையில் மேற்பார்வைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.

• ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பு படிவத்தில் தரங்கணிப்பிடுநர், தரப்படுத்துநர் எந்தவொரு மேற்பார்வை / மதிப்பீடுகளுமின்றி போலியாக சான்றுப்படுத்துதல்.

ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பு படிவம் முழுக்க முழுக்க மேற்பார்வை / மதிப்பீட்டுச் செயன்முறையினை அடிப்படையாகக்கொண்டது. அப்படிவம் மேற்பார்வையின் போதான அவதானிப்புக்கள் குறித்த விடயங்களை சான்றுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சுய மதிப்பீடும், தரங்கணிப்பிடுநர், தரப்படுத்துநர் ஆகியோரின் மதிப்பீடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்விடயங்கள் தொடர்பாக மதிப்பீடு / மேற்பார்வை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கேற்ப ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பு படிவத்தில் தரங்கணிப்பிடுநர், தரப்படுத்துநர் அவதானிப்புக்களை குறிப்பிட்டு சான்றுப்படுத்துதல் வேண்டும்.
• உள்ளக / வெளிவாரி மேற்பார்வைக்குழு அங்கத்தவர்கள் பொருத்தமான முறையில் தெரிவுசெய்யப்படாமை. இதனால் பல ஆசிரியர்கள் மேற்பார்வை / மதிப்பீட்டுச் செயன்முறைக்கு ஒத்துழைக்க மறுத்தலும், குறிப்பிட்ட தங்களை விட தகைமை குறைந்த மேற்பார்வையாளர்களுடன் முரண்படுதலும்.

மேற்பார்வைக் குழுவில் அங்கத்தவர்களை உள்வாங்கும் போது, அவர்களின் சேவை, சிரேஷ்டத்துவம், தொழிற்றகமைகள், கல்வித்தகமைகள் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும். மேற்படி விடயங்களில் குறைந்த தகமையுடையவர்கள், தகைமை கூடிய ஒருவரை மேற்பார்வை / மதிப்பீடு செய்யும் போது, அது சிறந்த ஒரு விளைவை பெற்றுத்தராததுடன், அநாவசிய குழப்பங்களும், சிக்கல்களும் ஏற்படும்.

எனவே அதற்கேற்ற வகையில் மேற்பார்வை / மதிப்பீட்டுத் திட்டங்கள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.

யாருக்கு யார் தரங்கணிப்பிடுநராக நியமிக்கப்படல் வேண்டும் என்பதிலும், மேற்படி விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு பொருத்தமானவர்களை நியமிக்க வேண்டும்.
ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்ட மற்றும் ஓழுக்கம் தவறிய எந்த ஒருவரையும் மேற்பார்வைத்தரத்தினராக அல்லது அதன் அங்கத்தவராக உள்வாங்குவதைத் தவிர்த்தலும் பல சிக்கல்களைத் தோற்றுவிப்பதைத் தடுக்கும்.

• பிரதி / உதவி அதிபர்களுக்கான வருடத்திற்கான செயற்பாடுகள் பொருத்தமான வகையில் வேலைப்பங்கீடு செய்யப்பட்டு மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
பிரதி / உதவி அதிபர்களுக்கான செயலாற்றுகை தரங்கணிப்புப் படிவத்தில் சான்றுப்படுத்த வேண்டிய தரங்கணிப்பிடுநர்கள், தரப்படுத்துநர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருடாந்த செயற்பாடுகள் தொடர்பாக மேற்பார்வை / மதிப்பீடுகளை மேற்கொள்ளல் வேண்டும். அவ்வாறாக பிரதி / உதவி அதிபர்களுக்கான வருடத்திற்கான செயற்பாடுகள் சிலவற்றை உதாரணத்திற்காக இங்கே குறிப்பிடுகின்றேன்.
• மாணவர் அடைவு
• மாணவ நலனோம்பல்
• மாணவ வழிகாட்டல்
• மாணவ தலைமைத்துவப்பாங்கு விருத்தி
• மாணவ சுகாதாரமும் போசாக்கும்
• ஆசிரிய அபிவிருத்தி
• ஆசிரிய நலனோம்பல்
• சமூக விருத்தி
• பெற்றௌர் பங்கேற்பு
• பாடசாலை சமூகத் தொடர்பு
• இணைப்பாடவிதான செயற்பாடுகள்
• பாடசாலை சமூகத்தினுள்ளான தொடர்பாடல்
• உள்ளக மதிப்பீடு
• ஆசிரியர் செயலாற்றுகை தரங்கணிப்பீடு
• பாடசாலை காரியாலய முகாமைத்துவம்
• பௌதீகவள முகாமைத்துவம்
• பாடசாலை அமைவிடம்
• நிதி முகாமைத்துவம்
• குணநல உள்ளீடுகள்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள துறைகளை பொருத்தமான வகையில்இ பாடசாலையில் உள்ள பிரதி/உதவி அதிபர்களின் இயலுமை, ஆற்றல், ஆர்வத்திற்கேற்ப அவர்களிடையே வேலைப்பங்கீடு செய்தல் வேண்டும். அதனை கண்காணிக்கும் /  மேற்பார்வை செய்யும் முழுப்பொறுப்பும், வகைகூறலும் பொறுப்பதிபரை சாரும்.
(ஆசிரியர் / அதிபர் செயலாற்றுகைத் தரங்கணிப்பீடு, சம்பள உயர்ச்சிப்படிவம், தொடர்பான விடயங்களையும், அது தொடர்பான சமகாலப் பிரச்சினைகளையும் அடுத்தடுத்த தொடர்களில் ஆராயவுள்ளேன்)
• மேற்பார்வை அவதானிப்புக்கள் மூலம் பாடசாலை தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தரவுத் தொகுதியொன்று பாடசாலைகளில் காணப்படாமை. இதற்காக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்ட (EPSI) வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவம் மூலம் பல்வேறுபட்ட விடயப்பரப்புக்கள் மேற்பார்வை மூலம் அவதானிக்கப்பட்டு தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

(EPSI) தொடர்பான விடயங்களையூம்இ அது தொடர்பான சமகாலப் பிரச்சினைகளையூம் தொடர் 06 இல் எதிர்பாருங்கள்…

 

Previous Post

NCoE name list – Southern Province

Next Post

HND Courses 2023 – Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

Related Posts

கல்வி நிருவாக முகாமைத்துவ நடைமுறைகளுக்கு தமிழில் ஒரு “அகராதி” – அன்பு ஜவஹர்ஷா –

கல்வி நிருவாக முகாமைத்துவ நடைமுறைகளுக்கு தமிழில் ஒரு “அகராதி” – அன்பு ஜவஹர்ஷா –

May 22, 2023
பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை (School Supervision / Evaluation of Quality of Education)

பாடசாலை மேற்பார்வை/மதிப்பீட்டுச் செயன்முறை (School Supervision / Evaluation of Quality of Education)

May 17, 2023
மட்டக்களப்பு மாவட்ட க.பொ.த உயர்தர தொழிநுட்பக் கற்கை நெறி தொடர்பான ஒரு கண்ணோட்டம்

மட்டக்களப்பு மாவட்ட க.பொ.த உயர்தர தொழிநுட்பக் கற்கை நெறி தொடர்பான ஒரு கண்ணோட்டம்

May 11, 2023
அதிபரது முகாமைத்துவ வகிபங்கு

அதிபரது முகாமைத்துவ வகிபங்கு மற்றும் தொழிற்பாடுகள்

May 10, 2023
Next Post
HND Courses 2023

HND Courses 2023 – Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Two children of a famous school in Colombo ate Buddha Puja.

Two children of a famous school in Colombo ate Buddha Puja.

September 19, 2022

அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக திலித் ஜயவீர மற்றும் டன் கோமஸ் நியமனம்

November 25, 2020
Picsart 22 06 18 11 21 55 828

பல்கலைக்கழக செயல்பாடுகளை துணைவேந்தர்கள் முடிவு செய்ய வேண்டும்

June 18, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Appointment for NCoE Diploma holders on Mid of Jhune.
  • PARVAI – ISSUE No 11 – BY OUSL Download PDF
  • Vacancies for Grade II,III Principal Posts in Sri Lanka Education Administration Service in (National Schools) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!