தற்போது நடைமுறையிலிருக்கும் / நடைமுறையிலிருந்த கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும், செயற்திட்டங்களும்
- சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் (Suraksha Insurance Policy)
- நிலைபேறான பாடசாலை அபிவிருத்தித் திட்டம். (Sustainable School Development Project)
- 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டம். (13Years Guaranteed Education Programme)
- அண்மித்த பாடசாலைஇ சிறந்த பாடசாலை வேலைத் திட்டம்.(Nearest School is the Best School – NSBS)
- “ஸ்மார்ட்” வகுப்பறைகள். (SMART Classroom )
- பாடசாலை மட்ட புதிய கணிப்பீடுகள். (School Based Assessments – SBA)
- சமூக இணக்கம் / சமூக சௌஜன்னிய தேசிய ஒருமைப்பாடு (Social Harmony & National Integration)
- பிரேரிக்கப்பட்டுள்ள பாடசாலை பரிசோதகர் வேலைத்திட்டம் (School Inspectorate Programme )
வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகளும் அதற்கான சில தீர்வூகளும்.(Current Issues in EPSI Programme)
EPSI தொடர்பான பிரச்சனைகளை வசதியளிப்பாளர் தொடர்பாகவும் பாடசாலை தொடர்பாகவும் எடுத்து நோக்குவோம், முதலில் வசதியளிப்பாளர் தொடர்பான பிரச்சினைகளை குறிப்பிடுகின்றேன்.
- தற்போது அநேக பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவிற்கான வலயக்கல்வி அலுவலக பிரதிநிதியே EPSI வசதியளிப்பாளராகவும் நியமிக்கப்படுகின்றார். இதனால் அக்கறை முரண்பாடு (Conflict of Interest) ஏற்படும். இவ்விரு பொறுப்புக்களினதும் கடமைகள் வெவ்வேறானவையாகும். உதாரணமாக SDEC இன் அங்கத்தவரான வலயக் கல்வி அலுவலகப் பிரதிநிதி குழுவுடன் இணைந்து பாடசாலை மட்ட தீர்மானங்களை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்றவராவார். ஆனால் EPSI வசதியளிப்பாளருக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர் பாடசாலையுடன் இணைந்து செயற்படுபவராக இருத்தல் வேண்டும்.
- வசதியளிப்பாளர் அதிபரின் நிலையில் இருந்து பாடசாலைகளில் அதீத தலையீடுகளை மேற்கொண்டு வருதல். இதனால் அதிபரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறாது EPSI தோல்வியில் முடிவடைதல். எனவே வசதியளிப்பாளர் தனக்குரிய வரையறுக்கப்பட்ட கடமை எல்லையினுள் இருந்து வசதியளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
- உண்மை நிகழ்வு : பாடசாலை ஒன்றில் வசதியளிப்பாளராக நியமிக்கப்பட்ட ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல் செயற்பாடுகளுக்காக நடாத்தப்பட வேண்டிய கூட்டங்களுக்கான அழைப்பை அதிபரூடாக விடுக்காமல் நேரடியாக தனது தலைமையில் நடாத்தப்படும் என அழைப்பிதழ் ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தார். இதனால் கோபமடைந்த அதிபர் உரிய வசதியளிப்பாளரை நீக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- EPSI வசதியளிப்பாளரை (Facilitator), EPSI ஒருங்கிணைப்பாளர் (Coordinator) என பாடசாலைகளில் பெயர் வழங்கி வருகின்றனர். தனித்தனியாக பாடசாலைக்கு நியமிக்கப்படுபவர்கள் EPSI வசதியளிப்பாளர் (Facilitator) எனவும், வலயத்திலுள்ள / மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளினதும் வசதியளிப்பாளர்களை ஒருங்கிணைப்பவர், EPSI ஒருங்கிணைப்பாளர் (Coordinator) எனவும் பெயரிடப்படுதல் வேண்டும்.
- EPSIவசதியளிப்பாளர்களில் பலருக்கு அது பற்றிய பூரண தெளிவோ, EPSI என்பதன் ஆங்கில முழு வடிவமோ தெரியாத நிலைமையும் காணப்படுகின்றது.
- EPSIவசதியளிப்பாளர்களில் பலர் வெறும் பெயரளவிலேயே பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தான் நியமிக்கப்பட்ட பாடசாலை எது என்று கூட தெரியாத நிலையில் உள்ளனர். அவ்வாறே சில பாடசாலைகளில் EPSI திட்டம் பற்றியோ, தங்களின் EPSI வசதியளிப்பாளர் யார் என்பது பற்றியோ எந்தவித கரிசனையும் அற்ற நிலைமையும் காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்படுதல் வேண்டும். உரிய பாடசாலை அதிபர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் உதவியை நாடி EPSI அமுல்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
- EPSI வசதியளிப்பாளர்கள், பாடசாலையின் வெவ்வேறு நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக, தானே அழைக்கப்படுதல் வேண்டும் அல்லது தன்னை அழைத்து சிறப்பு அதிதியாக வரவேற்க வேண்டும் என பாடசாலை குழாமிடம் கட்டளையிடல். EPSI வசதியளிப்பாளர்கள் பாடசாலை பங்குதாரர்களுடன் இணைந்து கடமை புரிய வேண்டிய ஒருவராவார். பாடசாலையில் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து, அதன் நோக்கத்தினை பாதுகாக்கும் வகையில் தனது தொழில் வாண்மை, தன்னம்பிக்கை, யதார்த்த நிலை என்பவற்றை வெளிப்படுத்துபவராக செயற்படுதல் வேண்டும்.
- பாடசாலையினை முன்னேற்றுவதற்காக, பாடசாலைகளை பல்வேறு நிறுவனங்களுடன் இணைப்பதில் EPSI வசதியளிப்பாளர்களின் பங்களிப்பு குறைவாக இருத்தல். உதாரணமாக SBPTD தொடர்பாக சில பயிற்சி நெறிகளை ஏற்பாடு செய்வதற்கு அரசு சார்ந்த / சாராத / வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான பரந்த அறிவும், தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகளும் EPSI வசதியளிப்பாளர்களுக்கு இருத்தல் வேண்டும்.
- வசதியளிப்பு நடவடிக்கைகளின் போது, EPSI வசதியளிப்பாளர்களின் கடுமையான போக்கு, பல பாடசாலைகளில் பல்வேறு பிரச்ச்சினைகளை உருவாக்கியுள்ளது.
- உண்மை நிகழ்வு : குறிப்பிட்ட ஒரு பாடசாலையின் EPSI வசதியளிப்பாளர் ஒருவர் நடாத்திய பெற்றோர் கூட்டமொன்றில் பாடசாலையின் அதிபருக்கும், முகாமைத்துவக் குழுவினருக்கும் எதிரான கருத்துக்களை வெளியிட்டார். அதாவது அதிபரும், SMC இனரும் தனது செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதில்லை எனவும், பெற்றோராகிய உங்களை பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்வதில்லை எனவும், நிர்வாக நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுவதில்லை என்றும் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இவர்களுக்கெதிராக தான் வலயக் கல்வி அலுவலகத்தில் முறையிடப் போவதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக கேள்விய எழுப்பிய பெற்றோர்களுக்கு அதிபர் பதிலளிக்கையில், இவ் EPSI வசதியளிப்பாளர் பாடசாலையின் உண்மையான நிலவரத்தினையும், பாடசாலை பற்றிய எந்தவொரு முன்னறிவும் இல்லாமல், தன்னிச்சையாக சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்தியிருந்தார் எனவும், அதாவது வீடு வீடாக சென்று நிதி அறவிட்டு அந்நிதியில் இப்பாடசாலையின் வெள்ளி விழாவினை ஏற்பாடு செய்யும் படியும், தான் குறிப்பிடும் வளவாளர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும் மாத்திரம் பாடசாலைக்குள் நுழைய விட வேண்டும் எனவும், அவர்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு போதாமையால் பாடசாலை நிதியில் மேலதிகமாக வழங்க வேண்டும் எனவும், தானும் ஒரு வளவாளர் எனும் அடிப்படையில் தனக்கும் கொடுப்பனவு வழங்கப்படல் வேண்டும் எனவும் என்னையும், SMC இனரையும் வற்புறுத்தியதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.
- மேற்படி நிகழ்வினை எடுத்து நோக்கும் போது EPSI தொடர்பாக எந்தவொரு முன்னறிவும் இல்லாத பங்குதாரர்களாக இந்நிகழ்வின் கதாபாத்திரங்களாக காணப்படுகின்றனர். வசதியளிப்பளரும், அதிபரும், ஒரு சுமூகமான கலந்துரையாடலின் மூலம் EPSI தொடர்பாக செயற்பட வேண்டிய விதம் பற்றி முன்னேற்பாடுகளை திட்டமிடுவதன் மூலம் EPSI இனது வெற்றிகரமான ஆரம்ப கட்ட அமுலாக்கலுக்கு வழி வகுக்கும். அதன் பின்னர் ஏனைய பாடசாலைக் குழுக்களுடன் கூட்டங்களை இலகுவாகவும், பயனுறுதிமிக்க வகையிலும் நடாத்த இயலுமானதாக இருக்கும். அத்துடன் வசதியளிப்புக்கும் பாடசாலைக்குமிடையில் கட்டி எழுப்பபடுகின்ற தொடர்பு மிக ஆரோக்கியமானதாகவும் மாற்றமடையும்.
EPSI வசதியளிப்பாளர்களுக்கு பாடசாலையினுள் அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல். இவ்வலுவலகம் EPSI வசதியளிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்குவதுடன் அவருக்கு உதவியாளர் என்ற பெயரில் ஆசிரியர் ஒருவரும், முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் பாடசாலையால் நியமிக்கப்பட்டு, அவ்வலுவலகத்தில் கணினி வசதிகள், தொலைபேசி, “WIFI” இணைப்புக்கள், சகல தளபாட வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் செயற்பாடுகளுக்காகவும், தரமான கல்விக்காகவும் செலவழிக்கப்பட வேண்டிய நிதிவளத்தினையும், மனித, பௌதிக வளங்களையும் இவ்வாறான விடயங்களுக்காக வீண்விரயம் செய்வது கண்டிப்பாக தவிர்க்கப்படுதல் வேண்டும். இது தொடர்பில் பாடசாலையின் பங்குதாரர்களும் அவதானம் செலுத்துதல் வேண்டும்.
வசதியளிப்பு மதிப்பீட்டுப் படிவங்கள், ஏனைய அறிக்கைகளை போலியாக தயாரித்து வைத்தல். கணக்காய்வுகள், வெளிவாரி மதிப்பீடுகள் / கண்காணிப்புக்களின் போது சமர்ப்பிப்பதற்காக எவ்வித EPSI செயற்பாடுகளும் நடைபெறாமல் இவ்வாறான போலியான ஆவணங்கள் தாயாரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக வலயக் கல்வி அலுவலக EPSI ஒருங்கிணைப்பாளர் நேரடியாக களத்திற்கு சென்று மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும். அவ்வாறே ஏனைய மதிப்பீட்டாளர்களும் நேரடியான கள மேற்பார்வையில் (Field Supervision) ஈடுபட்டு ஆவணங்களின் உண்மைத் தன்மையை பரீட்சித்தல் வேண்டும்.
அடுத்ததாக பாடசாலைகளை மையமாக வைத்து, EPSI இனது ஒவ்வொரு துறையாக சமகாலப் பிரச்சனைகளை ஆராயவேண்டிய தேவை உள்ளது. எனவே ஒவ்வொரு துறையாக சில பிரச்சினைகளையும் தீர்வுகளையும் உண்மை நிகழ்வுகளையும் ஆராய்வோம்.
1. பாடசாலை மட்ட திட்டமிடல் தொடர்பானவை
- இலங்கையின் 90% வீதத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் பாடசாலை திட்டமிடல் வழிகாட்டிக் கைந்நூலின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாடசாலைத் திட்டமிடல் இடம்பெறுவதில்லை. பாடசாலையின் நிதிச் செயற்பாடுகளை மேற்கொள்ள வருடாந்த அமுலாக்கல் திட்டமும் (Annual Implementation Plan – AIP), அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமும் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு காலம் காலமாக, முன்னைய வருடங்களின் API இனை சிறிய திருத்தங்களுடன் அல்லது அப்படியே அச்சுப் பிரதி செய்து அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
- மேற்படி AIP , Budget தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச்சங்க வருடாந்த பொதுக்கூட்டங்களில் எந்தவித விளக்கங்களும் கொடுக்கப்படாமல் சபையின் அனுமதியும் பெறப்படாமல், பெற்றோரின் கையொப்பங்களை பெறுவதற்காக மாத்திரம் அக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சில பாடசாலைகளில் கையொப்பங்கள் கூட முன்னைய கூட்டங்களில் அல்லது வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட பெற்றோரின் ஒப்பங்கள் போலியாக ஆவணப்படுத்தப்பட்டு AIP அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
- பாடசாலைத் திட்டமிடலில் சமூகம் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. அதிபரும் SMC இனரும் மாத்திரம் இணைந்து மேலோட்டமான, வழக்கமான செயற்பாடுகளை உள்ளடக்கி பெயரளவிலான பாடசாலைத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துதல். இது தொடர்பாக EPSI வசதியளிப்பாளரும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.
- பாடசாலைத் திட்டமிடல் என்பது AIP இனை தயாரிப்பதும் அதற்கேற்ப Budget இனை தயாரிப்பதுமேயாகும். இதற்கு மேலதிகமாக ஏதாவது செயற்திட்டங்கள் அரசாங்கத்தால், அல்லது அனுமதிக்கப்பட்ட வேறு நிறுவனங்களால் அல்லது நலன்விரும்பிகளால், அல்லது பழைய மாணவர் சங்கத்தினால் வருடத்தின் இடைக் காலப்பகுதியில் செயற்படுத்தப்பட திட்டமிடப்பட்டால், அதனை SDEC இனூடான தழுவல் அனுமதியுடன், இடைக்காலத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அத்திட்டதிற்கேற்ப அமுல்படுத்தப்படுதல் வேண்டும்.
- பாடசாலையின் தேவைப்பாடுகள், பாடசாலையின் சகல பங்குதாரர்களினாலும் இனம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் AIP இல் உள்ளடக்கப்படல் வேண்டும். அதுவே பாடசாலை மட்ட திட்டமிடலின் ஆரம்ப கட்ட செயற்பாடுகளாகும். இதனை EPSI இனூடாக செயற்படுத்த EPSI வசதியளிப்பாளர் தேவையான வசதியளிப்புக்களை முன்னெடுப்பதன் மூலம் மேற்படி பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம். அத்துடன் இவ்விடயங்கள் தொடர்பாக பெற்றோரும், சமூகமும் போதிய அறிவினைப் பெற்று பாடசாலையுடன் இணைந்து செயற்பட்டு சிறந்த திட்டம் ஒன்றினை தயாரிக்க வேண்டும்.
- AIP இல் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் உரிய காலத்தில், முன்னுரிமைப்படி பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அத்துடன் அதற்கான நிதி செயற்பாடுகளுக்கான கட்டுப்பாட்டுப் பேரேடுகளும் பேணப்படுவதில்லை. இப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, AIP இல் உள்ள செயற்பாடுகளுக்கு பொருத்தமான பொறுப்பாளர்களை நியமித்து, அச்செயற்பாடுகள் தொடர்பான கடமைகளுக்கான அனுமதியினை நேரசூசியுடன் இணைத்து அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உதாரணமாக அழகியல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை 06/2021 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் படி நேரசூசியில் குறைந்தபட்ச கற்பித்தல் பாடவேளைகள் 30 இனை பூர்த்தி செய்யாத ஆசிரியர்களுக்கு வழங்கி, நேரசூசியுடன் இணைத்து அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அப்பொறுப்பாளர் அது தொடர்பான அமுலாக்கம், ஆவணங்கள் கோவைப்படுத்துதல், நிதித் தேவைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல் போன்ற கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இவ்வாறாக AIP இல் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை செயற்படுத்திக்கொள்ள முடியும்.
2. கலைத்திட்ட முகாமைத்துவம் தொடர்பானவை
- நாம் ஏன் கல்வி கற்கின்றோம், தேசிய கல்வியின் நோக்கம் என்ன, அதற்கான பொதுத் தேர்ச்சிகள் எவை? அவை எவ்வாறு அடைந்துகொள்ளப்படுதல் வேண்டும் போன்ற எந்தவித அறிவும் இன்றியே ஆசிரியர்களும், அதிபர்களும் கல்வித்துறையினுள் காலடி வைக்கின்றனர். இலவசப் பாடநூல்களை வாசித்து அவற்றை மனப்பாடம் செய்து பரீட்சையின் போது ஒப்புவித்து புள்ளிகளைப் பெறுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்துதலே கலைத்திட்ட அமுலாக்கம் என சமூகமும், மாணவரும், ஆசிரியரும் எண்ணம் கொண்டுள்ளனர்.
- ஆசிரிய வழிகாட்டல் கையேடு, பாடத்திட்டம், அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள், மென்திறன்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக எவ்வித அறிவும், அக்கறையுமின்றி வெறும் பாடப் புத்தகங்களுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கவர்ச்சிகரமான கற்றல் சூழல் ஒன்றுக்காக பௌதீக, மானிட வளங்கள் பயன்படுத்தப்படாமையினால் மாணவர்களின் கற்றல் ஆர்வம், வரவு வீதம் குறைவடைதல். இதற்காக பாடசாலை மட்டத்திலான கற்றல் மேம்பாட்டு நிதிக்கொடைகள் (School Based Learning Improvement Grant – SBLIG ) பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அவை பயனுறுதிமிக்க வகையில் செலவு செய்யப்படுவதற்கு EPSI இனூடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
- மாணவரின் இயலுமைகளுக்கேற்ப அவ்வவ் திறமை மட்டங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை.
- பாடவிதான அபிவிருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மேலதிக பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை.
- இணைப்பாடவிதான செயற்பாடுகள், கலைத்திட்ட முகாமைத்துவத்தின் ஒரு பகுதி என்பதனை புறக்கணிக்கும் விதமாக பெரும்பாலானா பெற்றோர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தங்கள் பிள்ளைகள் பங்குபற்றுவதை தடை செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் இது மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பாரிய பின்னடைவை உருவாக்கும் என்பதை பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்துதல் வேண்டும். தற்போது உயர் கல்வித்தகைமைகளைக் கொண்டுள்ள எத்தனையோ அதிகாரிகளுக்கு மேடையொன்றில் சிறிய சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதற்கு முடியாத நிலைமை காணப்படுவதன் காரணம் இதுவேயாகும்.
- கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையின் பின்னர், உயர்தரத்தில் தமக்குப் பொருத்தமான வகையில் தெரிவு செய்யவேண்டிய பாடத்துறைகள் சம்பந்தமாக மாணவர்களுக்கும், பெற்றௌர்களுக்கும் எவ்வித அறிவூறுத்தல்களும் வழங்கப்படாமையினால் பொருத்தமற்ற பாடத்தெரிவுகளில் சிக்கி மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைதல். ஒரு மாணவன் தொடர்பாக அவன் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவனது புள்ளிப்பதிவுகள், திறன்கள், விஷேட திறமைகள், குடும்ப சூழ்நிலைகள், அவரது உடல் ஆரோக்கியம், போன்ற விடயங்கள் தொடர்பாக வகுப்பாசிரியரால் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும். அடுத்தடுத்த வகுப்புக்களுக்கு அம்மாணவன் செல்லும் போது புதிய வகுப்பாசிரியர்கள் அதனைப் பேணி இற்றைப்படுத்துதல் வேண்டும். இறுதியாக க.பொ.த. (சா/த) பரீட்சையின் பெறுபேறுகளையும் கொண்டு அம்மாணவனுக்கு உயர்தரத்தில் பொருத்தமான பாடத் துறையையும், பாடங்களையூம் தெரிவு செய்ய ஆலோசனைகளையும் வழங்கி அவனது திறமைகள் தொடர்பாக நம்பிக்கையூட்டி ஊக்குவித்தல் வேண்டும். உண்மையான கரிசனையுடனான அறிவுரைகள், ஆலோசனைகள், ஆழ்மனதினை சென்றடையும். எனும் மனோதத்துவத்திற்கேற்ப இவைகள் ஒரு மாணவனின் எதிர்காலத்தை சிறப்பாக்க வழிவகுக்கும்.
- உண்மை நிகழ்வு : சுனாமியால் பாதிக்கப்பட்டு தனது தந்தையையும், சகோதரர்கள் இருவரையும் இழந்த ஒரு மாணவி அப்போது தரம் – 09 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். சிறப்பாக கல்வி கற்றுக்கொண்டிருந்த அம்மாணவி இந்த அனர்த்தத்தின் பின்னர் கற்றலில் ஆர்வக் குறைவுடன் காணப்பட்டார். சிறந்த மேடைப் பேச்சாற்றல் உடைய இவர் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினார். தரம் – 10 இற்காக அம்மாணவி வேறொரு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்பாடசாலையில் இம்மாணவி புதியவர் என்பதால் இவர் தொடர்பாக எந்தவொரு கரிசனையோ, மதிப்பீடோ அங்கு இடம்பெறாமையினால் அம்மாணவியின் நிலைமை மேலும் மோசமடைந்தது. தரம் – 11 இல் அம்மாணவி கல்வி கற்றுக்கொண்டிருந்த போது அவரின் முன்னைய பாடசாலையிலிருந்த ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெற்று வந்து அம்மாணவியின் வகுப்பிற்கு வகுப்பாசிரியாரக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இம்மாணவி பற்றி அறிந்திருந்த அவ்வாசிரியர் இம்மாணவியை நட்புடன் அணுகி அவரது மறக்கடிக்கப்பட்டிருந்த ஆற்றல்களை வெளிக்கொணரும் விதமாக நம்பிக்கை ஊட்டி ஊக்கப்படுத்தினார். வகுப்பறையில் வினவப்படும் பாடம் சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்கச் செய்தார். ஏனைய பாட ஆசிரியர்களிடமும் அம்மாணவி பற்றிய தகவல்களை வழங்கி அவர்களையும் அம்மாணவியை ஊக்கப்படுத்துமாறு வேண்டிக்கொண்டார். அவ்வாறே அவரை பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்தார். மாணவர் மன்றங்களை நடாத்தி, அதில் அறிவிப்பாளராக அம்மாணவியின் திறமைகளை அனைவருக்கும் வெளிப்படச் செய்தார். இதனால் நம்பிக்கை இழந்திருந்த மாணவி புத்துணர்வு பெற்றார். உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையை தெரிவு செய்யும் படி அம்மானவிக்கும், அவரது தாயாருக்கும் வழிகாட்டிய அவர், அதற்கான உதவிகளையும் பெற்றுக்கொடுத்தார். தற்போது அம்மாணவி வைத்தியராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு தனியாக சென்று வரக்கூடிய ஒரு தைரியம் மிக்க பெண்ணாக மிளிர்கின்றார்.
- எனவே ஒவ்வொரு மாணவர் தொடர்பாகவும் தகவல்கள் அடங்கிய தரவுத்தொகுதி ஒன்றினைப் பேணி செயற்பாடுகளை முன்னெடுக்க EPSI இனூடாக வசதியளிப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
- பாடசாலைக் கல்வியை நிறைவு செய்கின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கும், வேலை உலகிற்குள் நுழைவதற்கும் / சுய தொழிலில் ஈடுபடுவதற்கும் தேவையான தொழில் சார்ந்த வழிகாட்டல்கள் முறையாக வழங்கப்படாமையினால் அநேக மாணவர்கள், குறிப்பாக ஆண் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமில்லாத தொழில்களிலும், வேறு சட்டத்திற்கு முரணான தொழில்களிலும் ஈடுபட்டு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையான காலப்பகுதிக்குள்ளும், கிடைக்கப் பெற்ற பின்னரும் மாணவர்களுக்கு நமது நாட்டில் உள்ள தொழில்வாய்ப்புக்கள், அதனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகள், குறிப்பிட்ட தொழில்களில் முன்னேறிச் செல்வதற்கான வழிமுறைகள், சுய தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்களை துறை சார்ந்த நிபுணர்களைக்கொண்டு வழங்குதல் வேண்டும். அதுமட்டுமன்றி உயர்கற்கை நெறிகள், அதன் மட்டங்கள் (Sri Lanka Qualification Framework – SLQF இன் பிரகாரம்.), அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள்இவாய்ப்புக்கள் தொடர்பாகவும் வழிகாட்டல்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
3. பாடசாலைமட்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (SBPTD) தொடர்பானவை
- அநேக பாடசாலைகளில் SBPTD குழுக்களோ, செயற்பாடுகளோ நடைபெறுவதில்லை. வெறும் ஏட்டுக்கல்வியுடன் ஆசிரியர்கள் பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் ஈடுபட்டு வருவதனால் மாணவர்கள் துரித தொழிநுட்ப வளர்ச்சியுடன் இணைந்தவாறு செயற்படுவதற்கு இடர்படுகின்றனர்.
- ஆசிரியர் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக EPSI மூலம் எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுத்துச் செல்லப்படுவதில்லை. அதற்கான ஒத்துழைப்புக்கள் ஆசிரியர் குழாத்திடமிருந்து கிடைக்கப்பெறுவதில்லை.
- பாடசாலை விடுமுறை நாட்களில் மேற்படி EPSI நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் அதற்கு சமூகம் அளிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
- தொழில் வாண்மைவிருத்தி இளம் பயிர்களுக்கு பனிமழை போன்றது” என்ற வாசகத்திற்கேற்ப ஆசிரியர்கள் தங்கள் தொழில்வாண்மை தொடர்பாக ஆர்வத்துடன் ஈடுபடும் வகையில் அவர்களின் மனப்பாங்குகளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு அதிபரையும், EPSI வசதியளிப்பாளரையும் சார்ந்ததாகும்.
4. வள முகாமைத்துவம் தொடர்பானவை
- பாடசாலைக்கான வள ஒதுக்கீடுகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாமை. உதாரணமாக தர உள்ளீட்டு நிதி வருடாந்தம் உரிய காலத்தில் கிடைக்கப் பெற்றால் மாத்திரமே தர உள்ளீட்டு நிதிக்கான கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு பல்வேறு செயற்திட்டங்களுக்கான வளங்கள் உரிய காலத்தில் கிடைக்கப் பெறாமையால், செயற்திட்ட நடவடிக்கைகள் காலதாமதம் ஆவதுடன், வேறு செயற்பாடுகளின் போது அவை கிடைக்கப்பெற்று வேலைப்பளுவையும், அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தையும் அதிபர்கள் எதிர்நோக்குகின்றனர். இதனால் குறிப்பிட்ட செயற்திட்டத்தின் வினைத்திறன், விளைதிறன் குறைவடையும்.
- தேவையான வளங்கள் பற்றிய முன்னுரிமைப்படி வளங்கள் பெறப்பாடாமையும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளளும், பயனுறுதியற்ற முறையில் கொள்வனவுகள் இடம் பெறுதலும். கல்வி அமைச்சின் 26/2018 சுற்றுநிருபம், வழிகாட்டி கையேட்டில் இணைப்பு – 07 இல் உள்ளவாறான பெறுகை நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படுவதன் மூலம் மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.
- காணப்படக்கூடிய வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதிலும், மாற்று வளங்களை இனம் காண்பதிலும் பாடசாலை ஆளணியினர் அக்கறை, ஆர்வம் இன்மையும். வள விரயங்கள் அதிகமாக இடம்பெறுகின்றமையும். இது தொடர்பாக EPSI வசதியளிப்பாளர் ஆளணியினருக்கு அறிவூட்டல் செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
- வளப்பராமரிப்பு, பாதுகாப்பு தொடர்பான பாடசாலை ஆளணியினரின் அசமந்த போக்குகள்.
உண்மை நிகழ்வு : கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரு பாடசாலை ஒன்றில் உள்ள கதிரை, மேசை போன்ற தளபாடங்களை மாலை வேளைகளில் கடற்கரைக்கு வருபவர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்காகவும், சூதாட்டம், மது அருந்துதல் போன்ற தேவைகளுக்காகவும் அப்பாடசாலையின் காவலாளி சலுகைக் கட்டண அடிப்படையில் வழங்கி வந்தார். அவ்வாறே பாடசாலைக் காணியில் விளையும் தேங்காய்கள், வாழைக்குலைகள், மாம்பழங்கள், மரக்கறி வகைகள் போன்றவையை அவரது வீட்டுத் தேவைகளுக்காக எடுத்துச் செல்வதுடன் மேலதிகமானவற்றை விற்பனை செய்து வருவார். அக்காவலாளி அந்த ஊர் அரசியல்வாதியின் கையாள் என்பதனால், இதனைக் கண்டும் காணாதது போல் அதிபரும், ஆசிரியர்களும் நடந்துகொண்டனர். அவ்வாறே இன்னுமொரு பாடசாலையில் சிற்றுண்டிச்சாலை நடாத்துநரும், பக்கத்து வீடுகளில் வசிக்கும் சில ஆசிரியர்களும் அதிகாலையில், அல்லது பின்னிரவில் பாடசாலைக்கு வந்து அங்குள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தி தங்கள் குடும்பத்தினரின் ஆடைகளை மின்னழுத்தி மூலம் மினுக்கிக் கொண்டு போவர்.
பாடசாலைச் சுற்றுச்சூழல் சமூகத்தினரால் மாசுபடுத்தப்படுதல். பாடசாலையைச் சூழ வசிக்கும் சமூகத்தினர், தங்களது வீட்டுக் கழிவுகளை, குப்பைகளை பாடசாலையைச் சுற்றி வர குவித்து வருகின்றனர். அல்லது பாடசாலைக் காணியினுள் கொட்டுகின்றனர். அப்பாடசாலையில் நமது பிள்ளைகளும் கல்வி கற்பதை மறந்து, பாடசாலையை பாதுக்காக வேண்டிய அவர்களே அதனை மாசுபடுத்துகின்றனர். அதை விட வேதனையான விடயம் என்னவென்றால், அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனாகிய தங்கள் பிள்ளையிடமே குப்பைகளை பைகளில் கட்டி பாடசாலை வளாகத்தினுள் போட்டுவிட்டு வரும்படி கொடுத்தனுப்புகின்றனர். இந்த விடயங்களில் EPSI வசதியளிப்பாளராக, அவருக்கு சமூகத்தை அறிவுறுத்தும் பாரிய பொறுப்பு உள்ளது.
வள முகாமைத்துவத்தின் பிரதானமான மற்றுமொரு பிரச்சினை பாடசாலையின் வளங்கள் தொடர்பான சரியான துல்லியமான தகவல் மையம் அல்லது பட்டியல் ஒன்று காணப்படாமையாகும். என்ன என்ன வளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அது அவை எந்த எந்த இடங்களில் பாவனையில் உள்ளது, யாருக்கு பொறுப்பளிக்கப்பட்டது, போன்ற விடயங்கள் தொடர்பாக சரியான தகவல்கள் / பதிவுகள் இல்லாததால் அதிகமான பௌதிக வளங்கள் அழிவடைவதுடன், தொலைந்து போவதும், சொந்த தேவைகளுக்காக பாவிப்பதும் போன்ற துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. ஒரு வளம் பாடசாலைக்கு கிடைக்கப்பெறுமாயின் அதனை முறையாகப் பெற்று இருப்புப் பொருட்கள் பதிவேடுகளில் பதிந்து, அதனை வேறு பிரிவுகளுக்கு (விஞ்ஞான கூடம் / நூலகம் / வேறு ஆய்வூகூடங்கள்) பாவனைக்காக ஒப்படைத்தது தொடர்பான விபரங்களைப் பேண வேறாக ஒரு CR கொப்பி ஒன்றைப் பயன்படுத்தி, அதில் பொறுப்பளிக்கப்படுபவரின் ஒப்பம் பெறப்படல் வேண்டும். உரியவர் தேவை முடிந்ததும் அல்லது இடமாற்றம் ஃ ஓய்வு பெற்றுச் செல்லும் போது அதனை ஒப்படைத்தமையை உறுதி செய்து அதிபரிடம் சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கத் தவறுமிடத்து பொறுப்பளிக்கப்பட்டவருக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். உரிய பொருட்கள் தொலைந்து போகுமாயின் அல்லது சேதப்படுத்தப்பட்டிருக்குமாயின் அதன் பெறுமதியை பொறுப்பளிக்கப்பட்டவரிடமிருந்து அறவிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படாமையினால் பாடசாலையின் அநேக பெறுமதியான சொத்துகள் வேதனைப்படக்கூடிய வகையில் அழிந்து வருகின்றன.
பொருட் சுற்றாய்வு (Board of Survey) உரிய காலத்தில் இடம்பெறாமையால், வருட இறுதியில் பொருட் பதிவேடு சமப்படுத்தப்படாமலும், உபயோகிக்கமுடியாத பொருட்களை விற்பனைக்கு (Sale), திருத்தம் செய்வதற்கு (Repair), கைமாற்றம் செய்வதற்கு (Transfer), அழித்துவிடுவதற்கு (Destroy) என வகைப்படுத்துவதற்கு முடியாமலும் பாடசாலையின் ஒரு மூலையில் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் அதிபர், EPSI வசதியளிப்பாளர்கள் கவனத்தில் கொண்டு திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.
5. மாணவர் அனுமதி, பங்குபற்றல், பொது நலநோம்பல் மற்றும் உதவி சேவைகள் தொடர்பானவை
இவ்விடயங்கள் நான்கும் தனித்தனியான தலைப்புக்களில் ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். எனவே அவற்றை அடுத்தடுத்த தொடர்களில் விரிவாக ஆராயலாம் என நினைக்கிறேன்.. EPSI உடன் தொடர்புபடுத்தி சில பிரச்சனைகளை மாத்திரம் இத்தொடரில் குறிப்பிடுகின்றேன்.
- தலைப்பிலுள்ள மேற்படி நான்கு விடயங்களுக்காகவும் குழுக்கள் பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருப்பதில்லை. அவ்வாறே அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலம் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை. இக்குழுக்களை அமைப்பதிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பான வழிக்காட்டல்கள், அறிவுறுத்தல்கள் வழங்குவதிலும் EPSI வசதியளிப்பளர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.
- பாடசாலையை வெளிவாரி நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துவதில் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். அதாவது அதிபர், பாடசாலை குழாம், EPSI வசதியளிப்பாளர்களுக்கு, சமூக சேவைகள், ஏனைய உதவிச் சேவைகளை வழங்கும், நிறுவனங்கள் எவை என்பது தொடர்பாகவும், அவற்றை எவ்வாறு தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும், போதிய அறிவும், வழிமுறைகளும் தெரியாதிருப்பதால், சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது.
- ஆகவே அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய தகவல் கோவை ஒன்றும், திட்டமிடலின் போது வருமான மூலத்தில் அது தொடர்பான சிறு குறிப்புக்களையும் இட்டு வைத்திருத்தல் வேண்டும்.
- மாணவர் அனுமதி தொடர்பாக, அதிபர்கள் சுற்றுநிருபங்களைப் பின்பற்றாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவதினால் பாடசாலைகளுக்கிடையிலும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் அதிகமான முரண்பாடுகள் ஏற்பட்டுவருகின்றது. அவை பற்றி விரிவான விடயங்களை எதிர்வரும் தொடர்களில் ஆராய்வோம். முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்த்தலுக்கு 13/2021(i), 13/2021, 16/2020, 29/2019, 4/2018 ஆம் இலக்க சுற்று நிருபங்களையும். தரம் 2 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர் அனுமதிக்காக 17/2023 ஆம் இலக்க சுற்றுநிருபமும் பின்பற்றப்படுதல் வேண்டும்.
உதவிச் சேவைகள் வசதி குறைந்த மாணவர்களைவிட பக்கச்சார்பான வகையில் ஒரு தனியார் அதிபர்களுக்கும் வேண்டியவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் சொந்தப் பிள்ளைகளுக்கும், சில வலயக் கல்வி அதிகாரிகள் குறிப்பிட்ட பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பேனாக்கள் அனைத்தும் ஆசிரியர்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டிருந்தது. அது போன்று பாடசாலை மாணவர்களுக்கென்று வழங்கப்பட்ட ஒரு தொகை இலவச முதலுதவி மருத்துவப் பொருட்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து அதிபர் விற்பனை செய்திருந்தார். எனவே இவ்வாறான உதவிப்பொருட்கள், சேவைகள் உரிய முறையில் பெறப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் அந்ததந்த பாடசாலைக் குழுக்களினூடாக பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு வகுப்பாசிரியரும் தனது வகுப்பு மாணவிகளின் குடும்ப வருமான / பொருளாதார நிலை தொடர்பாகவும் அறிக்கைகளைப் பேணுவதோடு, வசதி குறைந்த மாணவர்கள் பற்றிய முன்னுரிமைப்படி பட்டியல் ஒன்றை பேணவேண்டும். அதற்கேற்ப உதவிச் சேவைகள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.
6. பாடசாலை சமூகமும், தொடர்பாடலும் தொடர்பானவை
- அநேக பாடசாலைகளுக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமான உறவுகள் பேணப்படுவதில்லை.
- சமூகத்தை பாடசாலையினுள் சேர்த்துக்கொள்ள அதிகமான அதிபர்கள் இடமளிப்பதில்லை.
- வருடாந்த அமுலாக்கல் திட்டம் (AIP) மற்றும் வரவு செலவுத் திட்டம் (Budget) போன்ற விடயங்களுக்கான அனுமதிக்காக, பெற்றார் கையொப்பங்களைப் பெறுவதற்காக மாத்திரமே கூட்டங்களை பெயரளவில் நடாத்தி வருதல்.
- அநேக கூட்டங்களில் வாக்குவாதங்களும், அர்த்தமற்ற பேச்சுக்களும், சுயநலமான கருத்துக்களுமே பரிமாறப்படுவதுடன், கைகலப்புகளும் இடம்பெற்று வருகின்றது.
- மேற்படி பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் பாடசாலை தொடர்பாக சமூகத்திற்கு போதிய அறிவின்மையே ஆகும். பாடசாலையின் செயற்பாடுகள் என்ன? அவற்றை நடைமுறைப்படுத்த பாடசாலைக்குள்ள சவால்கள் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தராக EPSI வசதியளிப்பாளர் செயற்படுதல் இங்கு வேண்டப்படுகின்றது.
- பாடசாலை அதிபருடையது என்ற வகையில், அதிபருடன் தனிப்பட்ட பிரச்சனைகளை உடையவர்களால் பாடசாலையின் நற்பெயர் களங்கப்படுத்தப்பட்டு வருதல்.
உண்மை நிகழ்வு : குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் அதிபருடன் தனிப்பட்ட விரோதம் கொண்ட ஒரு பெற்றார். அப்பாடசாலையில் கடமையாற்றும் தனது உறவினரூடாக பாடசாலையில் அதிபரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக அரைகுறையாக விளக்கங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை முகநூலிலும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் அதிபரையும், பாடசாலையும் மிக மோசமாக விமர்சித்து வருவார். உதாரணமாக, வலயக் கல்வி அலுவலகத்தின் உத்தரவிற்கிணங்க இல்ல விளையாட்டுப் போட்டிகளை நடாத்த அதிபர் திட்டமிட்டு பொருளாதரா நெருக்கடியான இக்காலப்பகுதியை கருத்தில்கொண்டு சிக்கனமான முறையில் நடாத்தியிருந்தார். இதனை குறிப்பிட்டு அந்தப் பெற்றார் விமர்சிக்கையில் அதிபர் பல செல்வந்தர்களிடம் அதிகமான பணத்தை வசூலித்து தான் சுருட்டிக்கொண்டு சிறிய தொகையில் மரண வீடுகளுக்கு கூடாரம் அடித்தது போல் இல்லங்களை அமைத்து சிறிய பொருட் செலவில் விளையாட்டுப் போட்டி நடாத்தி உள்ளார் எனவும், முன்னைய காலங்களில் அப்பாடசாலையில் கோலாகலமாக நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப் போட்டிகளை போன்று நடாத்த அம் முன்னாள் அதிபர்களிடம் சென்று கற்று வரும்படியும் மோசமான முறையில் விமர்சித்திருந்தார். அத்துடன் அப்பாடசாலை மாணவிகள் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் போது ஒழுக்கம் மீறி நடந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். பாடசாலை என்ற நிறுவனம் அதிபருடையதோ அல்லது அங்கேயிருக்கும் ஆளணியினரினதோ அல்ல, அது நமது சொத்தாகும், அதன் நற்பெயரை பாதுகாப்பது எமது கடமை.
நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை நாமே பேசி தீர்க்க வேண்டுமேயொழிய இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாதேன்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படல் வேண்டும்.
7. தரமான கல்விக்காக பொறுப்புக்கூறல் தொடர்பானவை
• அதிபரானவர் சகல பொறுப்புக்களையூம் அதிகாரங்களையும் தானே வைத்துக்கொண்டு பாடசாலையை நடாத்த எத்தனித்தல் / சர்வாதிகாரியாக செயற்படல் (சர்வாதிகார தலைமைத்துவப் பாங்கை கடைபிடித்தல்). இதன் காரணமாக பாடசாலையினுள் அதிக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது. எனவே அதிபர்கள் பங்குபற்றல் முகாமைத்துவத்தினூடாக திட்டங்களை செயற்படுத்தும் போதே தரமான கல்விக்கான வாய்ப்புக்கள் உருவாகும். உதாரணமாக வேலைப்பங்கீடுகளை மேற்கொள்ளல், பொறுப்புக்களையும் கடமைகளையும் எழுத்துவடிவில் வழங்குதல். பொறுப்புக்கூறுபவர்களாக தனது ஆளணியினரை உருவாக்குதல் போன்ற விடயங்களை EPSI வசதியளிப்பாளர் வழிப்படுத்துதல் வேண்டும்.
பாடசாலையின் சகல செயற்பாடுகளும் தரமான கல்வியினை வழங்கி அதனூடாக மாணவர் சமூகம் உயரிய பண்புத்தரம் கொண்ட பிரஜைகளாக உருவாக்கப்படுதல் வேண்டும் எனும் குறிக்கோளை கொண்டுள்ளது. எனவே அச்செயற்பாடுகள் தொடர்பான திட்டமிடல்கள், அமுலாக்கம், மீளாய்வு, மதிப்பீட்டு செயன்முறைகள், மேற்பார்வை செயற்பாடுகள், கண்காணிப்பு, ஆவணப்படுத்துதல், தகவல்களைப் பேணுதல், உரிய அதிகாரிகளுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்தல் போன்ற அனைத்தும் தற்போது பாடசாலைகளில் போலியாகவே நடைபெற்று வருகின்றது. இப்பிரச்சினைக்கு காரணகர்த்தாக்களாக உயர் அதிகாரிகளே காணப்படுகின்றனர், அவர்களின் அசமந்த போக்குகளினாலும், சோம்பலினாலும், கடமையுணர்ச்சியற்ற பொடுபோக்கினாலும், அதிகார தோரணையாலும், பாடசாலைகளை செயற்பாடுகள் தொடர்பாக சரியான கண்காணிப்பு நடவடிக்கைகளோ, மீளாய்வு நடவடிக்கைகளோ, வழிகாட்டல் நடவடிக்கைகளோ, செய்யப்படுவதில்லை, இன்னும் ஆழ்ந்து நோக்கினால், மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தாது எவ்வாறு அடுத்தடுத்த மட்டங்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்வது என்பது தொடர்பாக உயர் அதிகாரிகளே அதிபர்களுக்கு வழி காட்டுகின்றனர். அதிபர்கள் விடும் தவறுகளிலும், மோசடிகளிலும் இருந்து அவர்களை சட்டத்திலிருந்தும், தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றும் வரை எந்த திட்டங்களையும் கல்விக் கொள்கைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தினாலும் விளைவு பூச்சியமேயாகும். தரமான கல்வி என்பது கேள்விக் குறியேயாகும்.
இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
அதிபர் ஒருவர் பாடசாலை இடம்பெற்ற கட்டிட நிர்மாணத்தின் போது நிர்மாண வேலைகளுக்கான ஆவணங்கள் எதுவும் பேணப்படாமல் தான் செய்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வரப்போகின்றது எனப் பயந்து அதிபர் சிலரிடம் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டார். அதன்பிற்பாடு, அவர்கள் வழங்கி இருக்கக்கூடிய ஆலோசனைகளுக்கமைய பழைய சில பதிவேடுகளையும் ஆவணங்களையும் அலுவலகத்தின் ஒரு மூலையில் மரஅலுமாரியில் அடுக்கி வைத்து இரவுக் காவலாளியின் உதவியுடன் ஜன்னலினூடாக தீ வைத்து முற்று முழுதாக அலுமாரி எரியும் வரை காத்திருந்து அதன் பின் தீ விபத்து ஏற்பட்டதாக கேள்விப்பட்டு தான் பாடசாலை செல்வது போன்று சென்று விபத்து தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டார். மின் ஒழுக்கினால் தீ ஏற்பட்டது போல் இச் சம்பவம் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வலுமாரியில் எரிந்து போன ஆவணங்களாக, நிர்மாண நடவடிக்கைகளுடன் தொடர்பான சகல ஆவணங்களையும், மேலதிகமாக ஓரிரு ஆவணங்களையும் பட்டியல்படுத்தி சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தமையும், பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
For feedback: [email protected]