– ஏனைய மாணவர்களுக்கு தேர்தலின் பின் பாடசாலை ஆரம்பம்
– இராஜாங்கனை, கந்தக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓகஸ்ட் 10 இலேயே பாடசாலை ஆரம்பம்
– உயர் தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் திங்கள் அறிவிப்பு
பாடசாலைகள் யாவும் தரம் 11, 12, 13 மாணவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலின் பின் முதல் வாரத்தில், ஓகஸ்ட் 10 திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதிகள் தொடர்பில் திங்கட்கிழமை (20) அறிவிக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இவ்வாறு மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலை விடுமுறையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், தற்போது இராஜங்கனை மற்றும் வெலிகந்த பகுதிகளில் நிலவும் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற் கொண்டு அப்பகுதிகளில் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்பு பாடசாலைகள் திறக்கப்படாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான விடுமுறைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (20) நிறைவடைய இருந்த நிலையில், கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற பல சுற்று விவாதங்களைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.
இக்கலந்துரையாடலில், இலங்கையில் கொவிட் 19 வைரஸின் “சமூக பரவலுக்கு” தற்போது இடமில்லை எனன சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதியாக கூறியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயினும், நாட்டின் ஐந்து (05) மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதனாலும், மேலும் மூன்று பிள்ளைகளுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை நடாத்துவது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 27 இல் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான திகதியாக இருக்கும் என கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறித்த வாரத்தில் தரம் 11, 12 , 13 ஆகிய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையான ஓகஸ்ட் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சிறந்த தினமாக இருக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.
இருந்த போதிலும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராஜங்கனை மற்றும் வெலிக்கந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளையும் திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பான்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்துள்ள கல்வி அமைச்சு, க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை நாளை மறுதினம் திங்கட்கிழமை (20) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் காரணமான அழுத்தங்கள் மற்றும் மன தாக்கங்களால் திசைதிருப்பப்படும் மாணவர்களின் அணுகுமுறைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கல்வி அமைச்சு மிகவும் அவதானமாகவும் உணர்வுபூர்வமானதாகவும் முடிவுகளை எடுக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மனத் தாக்கத்தின் அதிர்ச்சியால் கல்விக்கு ஏற்படும் இடையூறுகளை சவாலாக ஏற்று, பாடசாலை மற்றும் பரீட்சைகள் மண்டபத்திற்கு மிகுந்த நம்பிக்கையுடன் திரும்புமாறு, இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான மாணவர் சமூகத்திற்கு கல்வி அமைச்சு அன்பாய்க் கேட்டுக்கொண்டுள்ளது.
உங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நிச்சயமாக உங்களுக்கு தேவையான தைரியத்தையும் வழிகாட்டலையும் தருவார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
-thinakaran-