– புதிய பாராளுமன்றம் கூடியதும் வர்த்தமானி
பாடசாலை சேவை வேன்களுக்கு வர்ணக் குறியீட்டை பயன்படுத்தும் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், பாடசாலை சேவை வேன் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பாடசாலை வேன்களுக்கு வர்ணக் குறியீட்டை அறிமுகப்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்திற்கு அமைய அனைத்து பாடசாலை வேன்களும் மஞ்சல் வர்ணத்தில் அமைந்திருக்க வேண்டும் எனும் யோசனையை தான் முன்வைத்ததாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
ஆயினும், குறித்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பாடசாலை சேவை வேன்கள் சங்கங்கள், தங்களது வேன்களுக்கு இவ்வாறு வர்ணம் பூசுவதற்கான செலவு அதிகம் என தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து சேவையிலிருக்கும் பாடசாலை வேன்களுக்கு, மஞ்சல் வர்ண பட்டி பூசப்பட வேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் வேன்களுக்கு மஞ்சல் வர்ணம் பூசப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்டதும், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு, புதிய சட்டத்திற்கான அங்கீகாரம் பெறப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
-Thinakaran-