புதிய வழிகாட்டல்கள் நிதியமைச்சினால் அனுப்பி வைப்பு
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த தொகைக்கு மேலதிகமாக நிதி கோருவதை தவிர்க்க அறிவுறுத்தல்
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் விசேட வழிகாட்டல்களை நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது.
அதற்கிணங்க வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு உட்பட்ட செயற்திட்டங்கள் தவிர்ந்த வேறு எந்த செயற் திட்டங்களுக்கும் நிதி கோருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நிதியமைச்சு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் மற்றும் அதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உத்தரவுகளை கடுமையாக கடைப்பிடிக்குமாறும் நிதி அமைச்சின் அந்த வழிகாட்டல் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த நிதி மூலம் எரிபொருளுக்கான நிதியை பெற்றுக் கொள்ளும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களின் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கட்டுப்படுத்துமாறும் நிதியமைச்சு அதன்மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
-தினகரன்-