கடந்த மாதம் க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாயிருந்தன. இவ்வேளையில் கடந்த வருடம் (2019) இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 556256 பேர் தோற்றி அதில் 208781 சித்தி பெற்றுள்ளனர். பெற்று உயர்தர கல்வியினை தொடர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது அதிகமானோர் (70.5வீதம்) சித்தியடைந்துள்ளனர். ஒன்பது பாடங்களிலும் 9A பெறுபேற்றை 10346 மாணவர்களும் அதேவேளை 9 பாடங்களிலும் 8386 மாணவர்கள் சித்திப்பெற தவறியுள்ளனர். இலங்கையினை பொருத்தளவில் இப்பெறுபேறானது உயர்தரம் கற்பதற்கு மாத்திரம் இன்றி பல்கலைக்கழக பாடநெறியினை தெரிவு செய்வதற்கும் அடிப்படையாக காணப்படுகின்றது. மாணவர்களுக்கு தமது எதிர்கால இலக்குளை அடைந்து கொள்வதற்கான முதலாவது ஏணியாக க.பொ.த உயர்தரமே ஆகும். எனவே சரியான பாடத்தெரிவை மேற்கொள்வது சாலப்பொருத்தமானது. தனது அறிவு மட்டம், திறமை, எதிர்கால இலட்சியம் என்பவற்றை கருத்திற் கொண்டு செயற்படுதல் வேண்டும். ஒரு சில மாணவர்கள் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர் தரத்தில் சித்திப்பெற தவறுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. எனவே இங்கு சரியான பாடத் தெரிவு மற்றும் வழிகாட்டல்கள் குறைவாக காணப்பட்டமையே காரணமாகும். தனக்கு எது முடியுமோ அத்துறையில் தன்னை ஈடுப்படுத்தல் வேண்டும். எதிர்காலத்தில் தான் எத்தொழில் துறையில் பிரகாசிக்க போகின்றோம் என்பதனை கூட க.பொ.த உயர் தரமே தீர்மானிக்கின்றது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர்தரத்தில் தாம் எந்தத் துறையை தெரிவு செய்து கற்பதென்பது அவர்கள் எதிர்கொள்கின்ற பிரதானமான சவாலாக அடையாளப்படுத்த முடியும். மாணவர்களின் விருப்பு, பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் விருப்பு, தமது குடும்பத்தின் பொருளாதார நிலைமைகள், மாணவர்களின் ஆற்றல் ஆகியவற்றை முக்கியமாக கவனத்திற் கொண்டுதான் சரியான ஒரு துறையைத் தெரிவு செய்ய வேண்டும். ஒரு மாணவருக்கு குறித்ததொரு துறையில் கற்பதற்கு ஆர்வம் இருந்தாலும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகள் சிலவேளைகளில் பொருத்தமான துறையைத் தெரிவு செய்வதில் சவாலாக அமைய முடியும்.
மாணவர்களின் விருப்பத்தோடு பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் விருப்பமும் மாணவர்கள் தமது துறையைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்துகின்றது. நல்ல பெறுபேறுகளைப் பெற்ற ஒரு மாணவன்/ மாணவி கலைத்துறையை தெரிவு செய்து சட்டத்தரணியாக விரும்பும் போது அவரது பெற்றோர் விஞ்ஞானம் அல்லது கணிதத் துறையைத் தெரிவு செய்து வைத்தியராக அல்லது பொறியியலாளராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு மத்தியில் குழப்ப நிலை காணப்படுகின்றது. இன்னும் சில நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் குறைவான பெறுபேறுகளைப் பெற்ற நண்பர்களோடு கற்பதற்காக தமது நண்பர்கள் தெரிவு செய்யும் துறையை தெரிவு செய்கின்றனர். மாணவர்கள் தமக்குப் பொருத்தமான துறையைத் தெரிவு செய்யும் விடயத்தில் மேற்சொன்ன விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதோடு மாணவர்களின் ஆற்றல்கள் மற்றும் இயலுமைகளும் கவனத்திற் கொள்ளப்படுவது அவசியமாகும். உண்மையிலேயே க.பொ.த சாதாரண தரத்திற்கும் உயர்தரத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. க.பொ.த சாதாரண தரப் பெறுபேறானது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்றல்ல. மாறாக அது மாணவர்களின் துறையை இனங்காண்பதற்கான ஒரு பரீட்சையாகும். இந்த விடயங்கள் அனைத்தையூம் கருத்திற் கொண்டே தமக்குப் பொருத்தமான துறையைத் தெரிவு செய்யூம் விடயத்தில் சிறந்த வழிகாட்டல்களுடன் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
க.பொ.த. (உ/த) அனுமதியில் க.பொ.த (சா/த) தேவைப்பாடுகள்
க.பொ.த. உயர்தர துறைகள் க.பொ.த. (சா/த) தகுதிகள்
கலைத்துறை குறைந்தது 3C, 3S அதில் கணிதம் S சித்தியும் மற்றும் தாய்மொழியில் C பெறுபேறு அவசியம்
வர்த்தக துறை குறைந்தது 3C, 3S அதில் வரலாறு, கணித பாடங்களில் C சித்தி அவசியம்
விஞ்ஞான துறை குறைந்தது 3C, 3S அதில் விஞ்ஞானத்தில் C யும் கணிதத்தில் S சித்தியும் அவசியம்
இணைந்த கணித துறை குறைந்தது 3C, 3S அதில் கணிதத்தில் C யும் விஞ்ஞானத்தில் S சித்தியும் அவசியம்
உயிரியல் தொழிநுட்பதுறை குறைந்தது 3C, 3S அதில் கணிதம் S சித்தியும், விஞ்ஞானத்தில் S சித்தியும் அவசியம்
பொறியியல் தொழிநுட்ப துறை குறைந்தது 3C, 3S அதில் கணிதம் S சித்தியும், விஞ்ஞானத்தில் S சித்தியும் அவசியம்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்காக மாணவர்களுக்கு இந்த நாட்டிலே விஞ்ஞானம், கணிதம், வணிகம், கலை, தொழிநுட்ப போன்ற துறைகளில் எதனைத் தெரிவு செய்து தொடர்வதில் பல வகையான தெரிவுகள் காணப்படுகின்றன. மாணவர்கள் பெரிய பெரிய கனவுகளோடும் எதிர்பார்ப்புக்களோடும்தான் தமது துறையைத் தெரிவுசெய்கின்றனர். விஞ்ஞானத் துறையைத் தெரிவு செய்கின்ற ஒருவர் வைத்தியராகவும், கணிதத் துறையைத் தெரிவு செய்கின்ற ஒருவர் பொறியியலாளராகவும், வணிகத் துறையைத் தெரிவு செய்யும் ஒருவர் கணக்காளர் அல்லது முகாமையாளராகவும், கலைத் துறையைத் தெரிவு செய்யும் ஒருவர் சட்டத்தரணி அல்லது ஆசிரியராகவும் தொழிநுட்ப துறையை தெரிவு செய்யும் ஒருவர் தொழிநுட்பவியலாளராக வர வேண்டும் என்ற நோக்கோடுதான் தமக்குப் பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்கின்றனர். உண்மையில் தமது இலக்குகள் தொடர்பாக கனவு காண்பது, அந்த இலக்கை நோக்கி பயணிப்பது என்பன முக்கியமானதுதான். ஆனால் அந்த இலக்கை நோக்கி பயணிக்கும் போது நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத் தெரிவை நோக்காகக் கொண்டு கஷ்டமான பாடங்களைத் தெரிவு செய்து குறித்த பாடங்கள் பற்றிய வழிகாட்டல்கள் எதுவுமின்றி பரீட்சையில் கோட்டை விடுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே தனக்கு விருப்பமானதும், தனது பாடசாலை அல்லது பிரதேசத்தில் கற்க முடியுமான பாடங்களைத் தெரிவு செய்வதே புத்திசாலித்தனமாகும். அந்தவகையில், விஞ்ஞான, கணிதத் துறைகளைத் தெரிவு செய்யும் மாணவர்கள் பொதுவாக பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்களையே தெரிவு செய்வர். தொழில்நுட்பம், வணிகத் துறைகளைத் தெரிவு செய்யும் மாணவர்கள் இரண்டு பாடங்களை கட்டாயம் தெரிவு செய்வதோடு மூன்றாவது பாடமாக 11 பாடங்களில் எதனைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் காணப்படுகின்றது. மிக முக்கியமாக கலைத் துறையைத் தொடர்கின்ற மாணவர்கள் பாடங்களைத் தெரிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். கலைத் துறையில் கற்கின்ற மாணவர்களுக்கு சமூக விஞ்ஞானப் பாடங்கள், சமயம் சார்ந்த பாடங்கள், அழகியல் பாடங்கள், மொழி சார்ந்த பாடங்கள் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து பாடங்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. குறித்த பாடங்களில் மாணவர்களின் விருப்பு, குறித்த பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான வசதிகள் என்பவற்றையும் கவனத்திற் கொண்டே பாடத் தெரிவுகள் இடம்பெற வேண்டும்.
அரச வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமன்றி பல்கலைக்கழக சில பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கவும் அடிப்படை தகைமையாக க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் சித்தி அவசியமென்பதை இடைநிலை வகுப்புகளில் வலியுறுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். உதாரணமாக உயர் தரத்தில் கலைத்துறையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சட்டத்துறைக்கு விண்ணபிக்கும் போது அங்கு சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் C சித்தி கட்டாயம் இருத்தல் வேண்டும். எனவே இங்கு மாணவர்கள் சாதரண தரத்தில் விடுகின்ற தவறுகள் உங்களது எதிர்கால இலக்கை அடைய முடியாமல் ஆக்கிவிடுகின்றது. உயர்தரம் கற்கும் வேளையிலே சாதாரண தரப் பெறுபேற்றை பூர்த்தி செய்திருப்பது பொருத்தமானது.
இலங்கையில் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தொழிற் கல்வியினை உருவாக்கியுள்ளது. இங்கு சாதாரண தரத்தில் சித்திப்பெற தவறிய மாணவர்களுக்கு 13 வருட கட்டாயக்கல்வியின் ஊடாக பல்வேறு பாட நெறிகள் காணப்படுகின்றன. இவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும். தான் 9 பாடங்களிலும் சித்திப்பெறவில்லை என்ற எண்ணத்தை விட்டு தனக்கான தொழில் கல்வியினை தொடர்வதற்கான அருமையான வாய்ப்பாகும். எனவே இங்கு மாணவர்களுக்கான பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதனை சரியான முறையில் தெரிவு செய்து தமது எதிர்கால திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.
உயர்தரத்தை கற்பதற்கு மிகவும் குறைந்த தகுதிகளை கொண்ட மாணவர்களை ஒரு சில பாடசாலை நிபந்தனை அடிப்படையில் உள்வாங்கும் முறைகளும் காணப்படுகின்றன. இதில் எல்லா பாடசாலைகளும் இதற்குள் அடங்காது என்பதனை விளங்கிகொள்ள வேண்டும். இவ்விடயமானது பாடசாலை நிர்வாகத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும். சில நேரங்களில் குறித்த மாணவர் உயர் தரத்தை கற்கும் போது சாதாரண தர பெறுபேற்றை பூர்த்தி செய்யாத போது பாடசாலையிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படும். எனவே முடியுமானவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதே மாணவர்களின் முதல் இலக்காக இருக்க வேண்டும். அதற்காக தமக்கு விருப்பமான பாடம், குறித்த பாடங்களைக் கற்பதற்கான ஆற்றல், இயலுமை மற்றும் குறித்த பாடங்களை தமது பிரதேசத்தில் கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான பாடங்களைத் தெரிவு செய்து கற்க வேண்டும். க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரு மாணவர் சித்தியடைவாராக இருந்தால் அவர் தனது உயர் கல்வியைத் தொடர்வதற்கான பல வகையான வாய்ப்புக்களும் துறைகளும் எமது நாட்டில் காணப்படுகின்றன. எனவே இங்கு மாணவர்கள் உயர் தரத்தில் தனக்கு ஏற்ற துறையை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்த தொழிற் துறைக்கு செல்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
வி.பிரசாந்தன் – தலவாக்கலை