உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் ஆபத்து மற்றும் நாட்டின் நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க கூறினார்.
முன்னதாக, கல்வி அமைச்சு பாடசாலைகளை மே 11 ஆம் திகதி திறக்க திட்டமிட்டிருந்தது.
எவ்வாறாயினும், தொற்றுநோய் பரவலின் தன்மை மற்றும் பாடசாலைகளில் சுகாதாரப் பராமரிப்புக்குத் தேவையான உள்கட்டமைப்பின் போதுமான ஏற்பாடுகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னரே பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி தீர்மானிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அடுத்த சில வாரங்களில் பாடசாலை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சுகாதார வசதிகள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படும்.
ஒரு பாடசாலையை தனிமைப்படுத்தும் மையமாகப் பயன்படுத்தினால், பாடசாலையை கிருமி தொற்று நீக்கம் செய்து குறைந்தது மூன்று நாட்களுக்கு மூட வேண்டும்.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாட சுகாதார அமைச்சு விரும்புவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தேசிய அளவிலான பரிந்துரைகளின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க ஒரு மாகாண குழு நியமிக்கப்பட்டு அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாகாணக் குழுவில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர்.
நாட்டின் இயல்பான நடவடிக்கைகளை மே 11 முதல் ஆரம்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எச்.எம். திரு சித்ரானந்தா கூறினார்.
தமிழில் teachmore.lk
-Newsnow.lk