teachmore | நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் ஏனைய பொதுப் பரீட்சைகளுக்கான பாட உள்ளடக்க வரையறைகளை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், பரீட்சைகளுக்கான வினாப் பத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமான பாடத்திட்ட வரையறைகள் என்ன என்பதை கல்வி அமைச்சு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளுக்கு உட்படுத்தப்படும் பாட அலகுகளின் வரையறைகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் சிரமப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில ்பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட வகையில் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அத்தோடு கொரோனா தொற்று முதலாவது பதிவாகிய காலப்பகுதியில் முடிக்கப்பட வேண்டிய பாடத்தி்ட்ட உள்ளடக்கத்தை மாத்திரம் பரீட்சிக்க திட்டமிடுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த பதிலளிக்கையில், இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு உரிய தீர்மானத்தை எட்டவுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி பொதுப் பரீட்சைகள் தொடர்பாக பிரமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் தரம் 5 மற்றும் உயர் தரப் பரீட்சைகள் தொட்பாக தீர்மானத்தை மேற்கொள்வதற்கு சிரேஷ்ட கல்விமான்கள் மற்றும் துறைசார்ந்தோர், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தோரை இணைத்த குழு ஒன்றை நியமிக்குமாறு அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.