உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஆரம்ப வகுப்புக்களையும் நடாத்த வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொழும்பிலும் கொழும்பைச் சுற்றியுள்ள பிரதேச பாடசாலைகளிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிகளவில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக் காட்டும் ஜோஸப் ஸ்டாலின், உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவு மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாடசாலைக்கு அழைப்பது, நோய் அதிகமாக பரவ காரணமாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.
பரீட்சைக் காலம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டின் நிலமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பகுதியளவில் வரவழைக்கப்பட்ட மாணவர்கள் ஜனவரி 10 ஆம் திகதி முதல் மொத்தமாக அழைக்கப்பட்டதன் பின்னர், மிக விரைவாக கொவிட் பரவலுக்கு காரணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் ஆரம்பப் பிரிவு மாணவர்களை மாத்திரம் அழைத்திருப்பது எந்த பலனையும் தரவல்லதல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொழும்பு கல்வி வலயத்தில் ஒரே நேரத்தில் 6, 7 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பாடசாலைகளில் வகுப்புக்கள் மற்றும் பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலமையில் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்கள் என்பதை தெளிவுபடுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலை ஆபத்தை மறைத்துக் கொண்டிருக்காமல் அதற்கான தீர்வு மற்றும் மாற்று ஏற்பாடுகளை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே, பெப்ரவரி 7 ஆரம்பமாகும் பரீட்சைக்கான பொருத்தமான சூழல் மாணவர்களுக்கு நிலவ வேண்டும் என்பதோடு, மாணவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதற்கு ஆரம்ப பிரிவு பாடசாலைகளை நடாத்துவது தடையாக அமையும் என்பதை ஏன் அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை என்று தமக்கு விளங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.