அமைதிப் பூங்காவாக மனையை மாற்றியமைப்பது எவ்வாறு?
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உலகெங்கும் கணவன், மனைவிக்கிடையில் மோதல் அதிகமாகி விட்டதாக செய்திகள் வருகின்றன. குடும்ப சச்சரவுகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சச்சரவுகளைத் தவிர்த்து நிம்மதியாக இருக்க மனநல வைத்தியர்கள் பல ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இக்காலத்தில் வீட்டிலேயே இருக்கின்றனர். குழந்தைகள், கணவர் என அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும் தாய்மார்களுக்கும் வேலைப்பளு அதிகரித்து விட்டது. விதம் விதமாக சமைக்க வேண்டுமென வீட்டில் உள்ளோர் எதிர்பார்க்கின்றார்கள்.
அத்துடன் வெளியே செல்ல முடியாததால் மனஅழுத்தத்துக்கு ஆளான பலரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த குடும்ப வன்முறைகளை தடுக்கவும் மனதை அமைதியாக வைக்கவும் மனநல மருத்துவர் ஒருவர் கூறியிருக்கும் ஆலோசனை இதுதான்.
‘நெருக்கமாக இருக்கும் போது பிரச்சினைகள் அதிகமாவது இயல்பானதுதான். ஆனால் அந்த மனநிலையை மாற்ற வேண்டும். இந்த நேரம் ஒன்றாக சாப்பிட்டு, உறங்கி மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய நேரம். இதுவரை எல்லோரும் அவரவர் வேலை என பிரிந்துதான் இருந்தோம். எல்லோரும் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்தனர். இப்போது அப்பா வேலைப் பளு இல்லாமல் இருப்பார். அம்மாவும் ஆறுதலாக எழுந்து மெதுவாக வேலைகளைச் செய்து வருவார். ஆனால் அம்மாக்களின் வேலைப்பளு அதிகமாகி விட்டது. அம்மாக்கள் தாங்களாகவே தங்களின் வேலைப்பளுவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
விதம் விதமாக சமைக்காதீர்கள், இனிப்புகளை சமைக்க வேண்டாம்.. அது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடும். இப்போது எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டிய தருணம். வயிற்றில் சுமை சேர்க்காதீர்கள். மனஅழுத்தம் அதிகமாகும் போது காதுக்கு பின்னால் கழுத்தில் உள்ள நரம்பை மெதுவாக தடவி விடுங்கள். மனஅழுத்தம் குறையும். கவலை, பயம், வெறுப்பு எல்லாம் குறைந்து அமைதியாகி விடும்.
தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று நினைத்து எவரும் வெளியே வரக் கூடாது. ஆர்வக் கோளாறில் வெளியே சுற்றுவது பயனளிக்காது. எப்போது பயப்பட வேண்டும் எப்போது துணிச்சலாக வேண்டும் என்று நேரகாலம் உள்ளது. இப்போது கொரோனாவுக்காக பயந்து பதுங்கியிருங்கள். வெளி உலகத்தைப் பார்த்தீர்கள்,
நீங்களே ஒரு பெரிய உலகம். உங்களைப் பாருங்கள்,புத்தகங்கள் படியுங்கள். இளைஞர்கள் எதைப் பற்றி படிக்க விரும்புகிறீர்களோ அதைப் படியுங்கள். வெளியே போகாதீர்கள், சட்டங்களை மதியுங்கள். இப்போது பயந்து பதுங்கி வீட்டில் இருங்கள். அப்போதுதான் பிறகு பாய முடியும். இவ்வாறு கூறியிருக்கிறார் மனநல மருத்துவர் ஒருவர்.