சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதித்த நாள் முதல் இன்று வரை உலகில் 80 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது போன்ற நல்ல தகவல் பலரை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
அதேவேளை சீனாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டில் தனது கோரத்தாண்டவத்தைக் குறைத்துள்ளது. வுஹான் நகரில் உள்ள இறைச்சிக் கூடத்தில் இருந்து வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், அந்த நாட்டையே புரட்டிப் போட்டது. 3 மாதங்களில் 3,250 உயிர்களை பலி கொடுத்த பின்னர், கொரோனாவின் பரவலையும் உயிரிழப்புகளையும் சீன சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வந்த நிலையில் கடும் நடவடிக்கையின் மூலம் அதனை நாள் ஒன்றுக்கு 15க்கும் கீழ் சீனா இப்போது குறைத்துள்ளது.
வுஹான் நகரில் மட்டும்தான் தற்போது கொரோனா பரவல் உள்ளது. ஹூபே மாகாணத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட நகரங்களில் கொரோனா பரவல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கொரோனா தாக்குதல் குறைந்தாலும் சீனாவில் விவாகரத்துகள் அதிகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சம் எதிரொலியாக 3 மாதம் வீட்டுக்குள் முடங்கியிருந்ததால் கணவன்-_மனைவி இடையே ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் விவாகரத்து வரை சென்றிருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோயாளர்களில் பலர் குணமடைந்து வருவதால், இந்த நோய்த் தாக்கத்தால் அனைவரும் இறந்து விடுவோமோ என்ற பீதியில் இருந்து மக்கள் சற்று நிம்மதி பெற்றுள்ளனர். தற்போது குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
சீனாவில் முதல் பாதிப்பை சந்தித்த பலர் அங்கு உருவாக்கப்பட்ட தனி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டதால் இந்த மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளது.
பிரிட்டன் நுண்ணுயிர் நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா வைரஸ் யாரையும் தாக்கலாம். பெரும்பாலான மக்களுக்கு இலேசானதாகவே இந்த தாக்கம் இருக்கும். கடந்த ஜனவரி மாதத்தில் 220 பேர் குணம் பெற்றனர். பெப்ரவரியில் 39 ஆயிரத்து 782 பேர் குணம் பெற்றனர். மார்ச் 8ம் திகதி கணக்கின்படி 60 ஆயிரத்து 695 பேர் குணம் அடைந்தனர். மார்ச்.17 (நேற்றைய) நிைலவரப்படி 79 ஆயிரத்து 433 பேர் குணம் பெற்றுள்ளனர். இதனால் கொரோனா ஒரு உயிர்க் கொல்லி அல்ல என்று நிரூபிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thinakran