பொதுத் தேர்தல் முடிந்ததும் தொடருமாறு ஆணைக்குழுத் தலைவர் தேசப்பிரிய அறிவிப்பு
அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு மாதகால தலைமைத்துவப் பயிற்சிகளை தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வழங்கப்பட்டு வரும் இந்நியமனங்கள் மற்றும் பயிற்சிகள் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தனக்கு எழுத்து மூலம் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக் குழு தலைவர், இதுதொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இப்பட்டதாரிகள் அத்தியாவசிய தேவைகளுக்காகவோ அல்லது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவோ நியமிக்கப்படவில்லை. எனினும் இந்நியமனங்கள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் முறைப்பாடுகளை பெற்று வருகின்றோம்.
கடந்த தேர்தல் காலத்திலும் இதுபோன்ற பல நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன,” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் முகமாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இந்நியமனங்கள் தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படவில்லையென்றும் இவை தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் கட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இவர்கள் அனைவரும் வேலையற்ற பட்டதாரிகளென்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வழங்குவது தேர்தலை பாதிக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கருதுவாராக இருந்தால், தேர்தல் முடிவடையும்வரை இந்நியமனங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க முடியுமென்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45,585 பேருக்கான நியமனக் கடிதங்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக அறிக்கையிடுவதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் அலுவலகம் அல்லது நகர கஷ்டப் பிரதேச நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒரு வருடகால பயிற்சிக்குட்படுத்தப்படுவதுடன், முதல் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.