வேலையற்ற பட்டதாரிகளை பட்டதாரி பயிலுனர்களாக நியமிப்பதற்கான செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் மே மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக தகவல் மற்றும் தொலைத் தொடர்பு ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள கிராமப் புற பாடசாலைகளில் இப்பட்டதாரிகளில் அதிகமானோரை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், பயிற்றப்பட்ட ஆசியர்களாக இவர்கள் பாடசாலைகளுக்கு இணைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதலாவது கட்டத்தில் 54 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் முழுமையாக தபாலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் முதலாம் கட்டத்தை நிறைவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.