மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கென புதிய வலைத்தளமொன்றை உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவில் ஆரம்பித்து வைத்தார்.
இப்புதிய வலைத்தளத்திற்கூடாக மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் 10.5 பில்லியன் ரூபாவே கையிருப்பில் உள்ளது. இத்தொகையை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதே எமது இலக்கு.
இதற்காக மஹாபொல மூலம் நன்மை பெற்ற மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்வளைதளத்திற்கூடாக தகவல்களை திரட்டுவதுடன் நிதியுதவி செய்து உதவுவார்களென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கமைய www.mahapola.lk வலைத்தளத்திற்கூடாக அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இவ்வலைத்தளம் தகவலறியும் சட்டத்தை விடவும் துரிதமாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,…-
மஹாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் கடந்த காலங்களில் பாரிய சிக்கல்கள் எழுந்தன. மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தில் தற்போதுள்ள நிதியை வைத்து நாம் தொடர்ந்தும் மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது இந்நிதியத்தில் 10.5 பில்லியன் ரூபாவே உள்ளது. இதனை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதே எமது இலக்கு.
இந்நிதியத்தின் உதவியில் கல்வி கற்ற மாணவர்களும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் பெற்றோர்களும் இதற்கு நிதியளித்து உதவுவார்களென நம்புகின்றோம். புதிதாக ஆரம்பித்துள்ள வைத்துள்ள வலைத்தளம் மூலம் மஹாபொல புலமைப்பரிசில் பற்றிய அனைத்து தரவுகளையும் எவரும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
Thinakaran