அவுஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத் தீயினால் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் என இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 மாதங்களாக கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் பல்வேறு உயிரினங்கள் முற்றிலும் அழிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர உலகின் சிறிய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பற்றி எரிவதால் கங்காரு, கோலா கரடி, இருவாழ்வியான பிளாடிபஸ் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் உயிரிழந்து வருவதாகவும் புவியியல் மற்றும் விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் பற்றியெரிந்து காட்டுத் தீயினால், 14.5 மில்லியன் ஏக்கர் நிலம் பாழ்பட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெரு நெருப்பு பற்றி எரிந்த நிலப்பரப்பு அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினீயா மாகாணத்தை விட அதிகம் என்று குறிப்பிடும் புவியியலாளர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை விட 3 மடங்கு அதிகம் எனவும், கடந்த ஆண்டு அரிசோனாவில் ஏற்பட்ட நெருப்பை விட 6 மடங்கு அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தீயின் வெப்பம் மற்றும் தரையில் ஏற்படும் சூடு காரணமா உலகின் மிகப் பெரிய பவளப்பாறையான தி கிரேட் பேரியர் ரீஃப் அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணிகளால் இதுவரை 18பேர் வரை உயிரிழந்திருப்பதாக நியூ சவுத்வேல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல உயிர்களை காவுகொண்டதும், பல சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில், சுமார் 3500 பேர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.