பரீட்சை நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சை நிலையங்களிலோ நிலைய வளாகங்களிலோ அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையிலோ செயற்படக்கூடாது. அவ்வாறு எவராது செயற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டள்ளார்.
அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் மாணவர்களின் பெறுபேறுகளை ரத்துச் செய்யும் அதிகாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இருப்பதாக தெரிவித்த அவர் அவ்வாறு செயற்படும் மாணவர்களைக் கைது செய்ய நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சகல பரீட்சைகள் நிலையங்களுக்கும் அருகில் நடமாடும் பொலிசார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம், பதுளை ஆகிய மாவட்டங்களில் சீரற்ற காலநிலையினால் பரீட்சார்த்திகள் பாதிப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. எனினும், ஏனைய தரப்புக்களில் இருந்து கிடைத்த ஒத்துழைப்பினால் அந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடிந்ததாக பரீட்சகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். பொலிசார், முப்படையினர், இலங்கை போக்குவரத்துச் சபையினர், தனியார் பஸ் போக்குவரத்து பிரிவினர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர் ஆகியோருக்கு இதற்காக நன்றி தெரிவிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
வடமாகாணத்தில் நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும் பரீட்சை நிலையங்களுக்கு வினாப் பத்திரங்களைக் கொண்டு செல்வதற்கும் விமானப் படையும் கடற்படையும் ஒத்துழைப்பு வழங்கியதாக ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்தார்.